பாடல் #1812: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)
நேயத்தே நின்றிடும் நின்மல சத்தியோ
டாயக் குடிலையுள் நாத மடைந்திட்டுப்
போயக் கலைபல வாகப் புணர்ந்திட்டு
வீயத் தகாவிந்து வாகிவிளை யுமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
நெயததெ நினறிடும நினமல சததியொ
டாயக குடிலையுள நாத மடைநதிடடுப
பொயக கலைபல வாகப புணரநதிடடு
வீயத தகாவிநது வாகிவிளை யுமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
நேயத்தே நின்று இடும் நின் மல சத்தியோடு
ஆய குடிலை உள் நாதம் அடைந்து இட்டு
போய கலை பல ஆக புணர்ந்து இட்டு
வீய தகா விந்து ஆகி விளையுமே.
பதப்பொருள்:
நேயத்தே (பேரன்பில்) நின்று (நின்று) இடும் (இருக்கின்ற) நின் (எந்தவொரு) மல (அழுக்கும் இல்லாத) சத்தியோடு (இறை சக்தியோடு)
ஆய (கூடி இருக்கின்ற) குடிலை (சுத்த மாயையின்) உள் (உள்ளுக்குள்) நாதம் (இருந்து இயங்குகின்ற சத்தமாக) அடைந்து (அடைந்து) இட்டு (வீற்றிருந்து)
போய (அதனை விட்டு விலகிய) கலை (உடல் பெற்ற ஆன்மாக்கள்) பல (பல) ஆக (விதமாக) புணர்ந்து (பொருந்தி) இட்டு (வீற்றிருந்து)
வீய (என்றும் அழிந்து) தகா (போகாத) விந்து (பேரறிவாகிய வெளிச்சமாக) ஆகி (ஆகி) விளையுமே (அண்ட சராசரங்களிலிருக்கும் உலகங்கள் அனைத்திலும் வாழுகின்ற உயிர்களாகவும் விளைந்து இருக்குமே).
விளக்கம்:
பாடல் #1811 இல் உள்ளபடி விளையாடுகின்ற பேரன்பாக நின்று இருக்கின்ற எந்தவிதமான அழுக்கும் இல்லாத பரம்பொருளான இறை சக்தியே ஒன்றாக கூடி இருக்கின்ற சுத்த மாயையின் உள்ளுக்குள் இருந்து இயங்குகின்ற சத்தமாகவும் வீற்றிருக்கின்றது. அந்த சுத்த மாயையை விட்டு பிரிந்து உடல் பெற்று வந்த ஆன்மாக்களோடு பலவிதமாக பொருந்தி வீற்றிருந்து என்றும் அழியாத பேரறிவாகிய வெளிச்சமாகவும் வீற்றிருந்து அண்ட சராசரங்களிலிருக்கும் உலகங்கள் அனைத்திலும் வாழுகின்ற உயிர்களாகவும் விளைந்து இருக்கின்றது.