பாடல் #636

பாடல் #636: மூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)

சேருறு காலந் திசைநின்ற தேவர்கள்
ஆரிவன் என்ன அரனாம் இவனென்ன
ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக்
காருறு கண்டனை மெய்கண்ட வாறே.

விளக்கம்:

பிரத்தியாகாரம் மூலம் வெளியே செல்லும் மனதை உள்ளே நிறுத்தித் தியானம் செய்தவர்கள் இறைவனின் திருவடி சேரும் காலத்தில் சிவரூபம் பெற்று விளங்குவதால் எட்டுத் திசைகளுக்கும் அதிபதியாக நிற்கும் தேவர்கள் யாரிவர் என்று ஆச்சரியத்துடன் எதிர்கொண்டு வரவேற்று அவரின் உடலில் நீலகண்டனாகிய சிவபெருமானை தேவர்கள் தரிசிப்பார்கள்.

பாடல் #635

பாடல் #635: மூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)

செம்பொற் சிவகதி சென்றெய்துங் காலத்துக்
கும்பத் தமரர் குழாம்வந் தெதிர்கொள்ள
எம்பொற் றலைவன் இவனா மெனச்சொல்ல
இன்பக் கலவி இருக்கலு மாமே.

விளக்கம்:

பிராணாயாம முறைப்படி தியானம் செய்தவர்கள் சிவகதி சென்று அடையும் காலத்தில் பூரண கும்பத்தோடு தேவர்கள் கூட்டமாக எதிரே வந்து பொன் போல போற்றத்தக்க எங்கள் தலைவர் இவர் என்று சொல்லி வரவேற்பார்கள். அவர்களுடன் இன்பத்தில் கலந்து இருப்பார்கள்.

பாடல் #634

பாடல் #634: மூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)

வருந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த்
திருந்தம ராபதிச் செல்வன் இவனெனத்
தருந்தண் முழவங் குழலும் இயம்ப
இருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே.

விளக்கம்:

சிவபெருமானை நோக்கித் தன்னை வருத்தி ஆசனங்கள் வழியாகத் தவம் செய்பவர்களை தேவர்களுக்கு அரசனாக இருந்து பிறவியில்லா உலகத்திற்கு செல்வார் இவர் என குளிர்ந்த சந்தனத்தால் ஆன முரசும் புல்லாங்குழலும் இசைத்துக் கூற சிவபெருமானின் அருளால் இன்பம் பெறுவார்கள்.

கருத்து:

சிவனை நோக்கி ஆசனங்கள் வழியாகத் தவம் செய்தவர் பிறவியில்லா நிலையை அடைவர்.

பாடல் #633

பாடல் #633: மூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)

பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ்
கற்றிருந் தாங்கே கருது மவர்கட்கு
முற்றெழுந் தாங்கே முனிவர் எதிர்வரத்
தெற்றுஞ் சிவபதஞ் சேரலு மாமே.

விளக்கம்:

சிவத்தின் திருவடியை அன்போடு பற்றிக்கொண்டு அவரின் புகழை கற்று அறிந்துகொண்டு அவரின் சிறப்புகளிலேயே எண்ணத்தை வைத்து இருப்பவர்களை இறைவனிடம் இருக்கும் முனிவரெல்லாம் எதிர்கொண்டு அழைப்பார்கள். அவர்கள் மனத் தெளிவு பெற்று சிவபதம் அடைவார்கள்.

பாடல் #632

பாடல் #632: மூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)

போதுகந் தேறும் புரிசடை யானடி
யாதுகந் தாரம ராபதிக் கேசெல்வர்
ஏதுகந் தானிவன் என்றருள் செய்திடு
மாதுகந் தாடிடு மால்விடை யோனே.

விளக்கம்:

காளையை வாகனமாகக் கொண்டவனும் உமையவள் காண ஆனந்த நடனம் புரிபவனும் அழகிய மலரின் நறுமனம் கமழும் படர்ந்த சடையுடையவனுமாகிய சிவபெருமானின் திருவடிகள் எப்படி இருக்கும் என்று காண விருப்பம் கொண்டு தேடுபவர்கள் அமரர்களின் தலைவனாகிய இறைவன் இருக்கும் இடத்திற்கே செல்வார்கள். அவ்வாறு வருபவர்களுக்கு என்ன வேண்டும் என்று அறிந்து அதை அருள்புரிவான் சிவபெருமான்.

பாடல் #631

பாடல் #631: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும், இறைவனும் ஒன்றி இருத்தல்)

சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகஞ்
சமாதிகள் வேண்டாம் இறையுட னேகிற்
சமாதிதா னில்லை தானவ னாகிற்
சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே.

விளக்கம்:

சமாதி நிலையை அடைபவர்களுக்கு பலவிதமான யோகங்களோடு அறுபத்து நான்கு விதமான சித்திகளும் கிடைக்கும். இறைவனுடன் ஒன்றாகக் கலந்து தாமே சிவமாகிய பின் சமாதி நிலையே தேவையில்லை.

பாடல் #630

பாடல் #630: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும், இறைவனும் ஒன்றி இருத்தல்)

சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும்
ஆதியும் உள்நின்ற சீவனு மாகுமால்
ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும்
ஆதி அடிபணிந் தன்புறு வாரே.

விளக்கம்:

சமாதி நிலையில் நம்முடைய ஆன்மா ஈடு இணையில்லாத பேரொளியாய் விளங்கும் சிவபெருமானோடும் ஆதி சக்தியோடும் ஒன்றாகக் கலந்து விடும். அந்நிலையில் படைப்புக்கு முதல்வனான பிரமனும் கடல் போன்ற நீல நிற மேனியுடைய திருமாலும் ஆதிக்கடவுளான சிவபெருமானிடம் அடிபணிந்து அன்பு செலுத்துவதை நாம் உணரலாம்.

பாடல் #629

பாடல் #629: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும், இறைவனும் ஒன்றி இருத்தல்)

தலைப்பட் டிருந்திடத் தத்துவங் கூடும்
வலைப்பட் டிருந்திடும் மாதுநல் லாளுங்
குலைப்பட் டிருந்திடுங் கோபம் அகலுந்
துலைப்பட் டிருந்திடந் தூங்கவல் லார்க்கே.

விளக்கம்:

மனதை ஒருமுகப்படுத்தி இறை நினைப்பிலேயே ஒன்றி சமாதி நிலையில் இருக்கக் கூடியவர்களுக்கு தான் யார் என்பதை உணர்ந்து தனக்குள் இருக்கும் சிவமும் உலகங்களை இயக்கிக்கொண்டிருக்கும் சக்தியும் ஒன்றாக சேர்ந்து இருக்கும். மாயை நீங்கி அருள்சக்திக்கு எதிரான காமம், கோபம், அகங்காரம் அகன்றுவிடும்.

பாடல் #628

பாடல் #628: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும், இறைவனும் ஒன்றி இருத்தல்)

கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்று
சிற்பனை எல்லாஞ் சிருட்டித்த பேரொளிப்
பொற்பினை நாடிப் புணர்மதி யோடுற்றுத்
தற்பர மாகத் தகுந்தண் சமாதியே.

விளக்கம்:

எண்ணங்களைச் சிதறவிடாமல் மனதை ஒருமுகப்படுத்தி குண்டலினி சக்தியின் மேல் வைத்து அதை சுழுமுனை வழியே மேலேற்றிச் சென்று இந்த உலகையெல்லாம் அழகாக செதுக்கி உருவாக்கிய பேரொளியாகிய இறைவனின் பொன் போன்ற அழகிய பாதத்தை நாடி அறிவால் இறைவனை உணர்ந்து சிவமும் தாமும் இரண்டாக இல்லாமல் ஒன்றாகக் கலந்து இருத்தல் சமாதி நிலையாகும்.

பாடல் #627

பாடல் #627: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும், இறைவனும் ஒன்றி இருத்தல்)

மூலத்து மேலது முற்சது ரத்தது
காலத் திசையிற் கலக்கின்ற சந்தினில்
மேலைப் பிறையினில் நெற்றிநேர் நின்ற
கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே.

விளக்கம்:

மூலாதாரத்திற்கு மேலுள்ள சுவாதிஷ்டானத்தில் கும்பக முறைப்படி அடக்கி வைத்த மூச்சுக்காற்றை அதற்கு மேலுள்ள மணிப்பூரகத்தில் கலந்து பின்பு சுழுமுனை வழியே மேலே ஏற்றிச் சென்று புருவ மத்தியிலிருக்கும் ஆக்ஞா சக்கரத்துடன் சேர்த்தால் அங்கே நெற்றிக்கு நேரில் அண்டவெளி அழகிய வடிவங்களாக காட்சியளிக்கும். அந்தக் காட்சியுடன் மனதை ஒன்றி இருப்பது சமாதி நிலை ஆகும்.