பாடல் # 797

பாடல் # 797 : மூன்றாம் தந்திரம் – 17. வார சூலம் (பயணம் செய்ய தவிர்க்க வேண்டிய நாட்களும் திசைகளும்)

வாரத்திற் சூலம் வரும்வழி கூறுங்கால்
நேரொத்த திங்கள் சனிகிழக் கேயாகும்
பாரொத்த சேய்புதன் உத்தரம் பானுநாள்
நேரொத்த வெள்ளி குடக்காக நிற்குமே.

விளக்கம்:

திங்கள் சனிக்கிழமைகளில் கிழக்கே சூலம் ஆகும். செவ்வாய் புதன் கிழமைகளில் வடக்கே சூலம் ஆகும். ஞாயிறு வெள்ளிக் கிழமைகளில் மேற்கே சூலம் ஆகும்.

குறிப்பு: சூரியனின் தீட்சண்யம் குவியும் திசைக்கு சூலம் என்று பெயர் வைத்தார்கள். அந்த திசையில் சூடு அதிகமாக இருக்கும். பயணம் செய்தால் சூட்டினால் உடல் நிலை பாதிக்கும் என்ற காரணத்தால் சூலம் என்று குறிப்பிட்டு அந்த திசையில் பயணிக்க வேண்டாம் என்று சொன்னார்கள்.

Share image

பாடல் # 798

பாடல் # 798 : மூன்றாம் தந்திரம் – 17. வார சூலம் (பயணம் செய்ய தவிர்க்க வேண்டிய நாட்களும், திசைகளும்)

தெக்கண மாகும் வியாழத்துச் சேர்திசை
அக்கணி சூலமு மாமிடம் பின்னாகில்
துக்கமும் இல்லை வளமுன்னே தோன்றிடின்
மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே.

விளக்கம்:

வியாழக் கிழமையன்று சூலம் தெற்கு திசையில் அமையும். சூலம் நாம் செல்லும் திசைக்கு இடப் பக்கமாகவோ அல்லது பின்பக்கமாகவோ இருந்தால் நன்மை விளையும். சூலம் நாம் செல்லும் திசைக்கு வலப்பக்கமாகவோ அல்லது முன் பக்கமாகவோ இருந்தால் மேலும் மேலும் தீமை அதிகரிக்கும்.