பாடல் #501

பாடல் #501: இரண்டாம் தந்திரம் – 16. பாத்திரம் (கொடுப்பதற்கும் பெறுவதற்கும் தகுதியானவர்கள்)

திலமத் தனைபொன் சிவஞானிக் கீந்தால்
பலமுத்தி சித்தி பரபோகம் தரும்
நிலமத் தனைபொன்னை நின்மூடர்க் கீந்தால்
பலமுமற் றேபர போகங் குன்றுமே.

விளக்கம்:

உண்மையான அறிவைப் பெற்ற சிவ ஞானியர்களுக்கு ஒரு எள்ளின் அளவு தங்கத்தைக் கொடுத்தாலும் அதனை இறைவனே ஏற்றுக் கொண்டு அதன் பயனாக முக்தியையும், எண்ணியதை அடைகின்ற சக்தியையும், பேரின்பப் பெருவாழ்விற்கான வழியையும் தந்து அருளுவான். உலக அறிவை மட்டும் கொண்டு தமக்கு ஞானம் இருப்பதாக எண்ணி ஞானியர் போல வேஷம் போட்டுக் கொண்டு இருக்கும் முடர்களிடம் இந்த உலகத்திலுள்ள அனைத்து தங்கத்தையும் தானமாக கொடுத்தாலும் அதனால் ஒரு பயனும் கிடைக்காதது மட்டுமில்லாமல் கொடுத்த வீண் தானத்தின் பயனால் அடுத்த பிறவியிலும் பேரின்பப் பெருவாழ்வு கிடைக்காமல் போய்விடும்.

உள்விளக்கம்: தகுதியானவர்களுக்கே தானம் செய்ய வேண்டும்.

பாடல் #502

பாடல் #502: இரண்டாம் தந்திரம் – 16. பாத்திரம் (கொடுப்பதற்கும் பெறுவதற்கும் தகுதியானவர்கள்)

கண்டிருந் தாருயிர் உண்டிடுங் காலனைக்
கொண்டிருந் தாருயிர் கொள்ளுங் குணத்தனை
நன்றுணர்ந் தார்க்கருள் செய்திடு நாதனைச்
சென்றுஉணர்ந் தார்சிலர் தேவரு மாமே.

விளக்கம்:

எமனால் உயிர்கள் ஒரு நாள் இறந்து போவதைப் பார்த்தாலும் தாமும் அப்படி ஒரு நாள் இறந்து போவோம் என்பதை உணராமல் உயிர்கள் இருக்கின்றனர். அதுபோலவே ஒவ்வொரு உயிருக்குள்ளும் அந்த உயிரையே தனது அம்சமாகக் கொண்டு இருக்கும் இறைவன் தமக்குள்ளும் இருக்கின்றான் என்பதையும் உணராமல் இருக்கின்றனர். உலக வாழ்க்கையை விட நன்மை தருவது பேரின்பப் பெருவாழ்வு என்பதை உணர்ந்து அன்பாலும் தவத்தாலும் தேடிச் சென்று தமக்குள் இருக்கும் இறைவனை உணர்ந்து கொள்ளும் சிலர் மட்டுமே இறைவனின் அருள் பெற்று தேவர்களாக பதவி பெறுகிறார்கள்.

உட்கருத்து: விரைவில் முடியும் உலக வாழ்க்கை மேல் ஆசை வைக்காமல் என்றும் நிரந்தரமான பேரின்பப் பெருவாழ்வுதான் வேண்டும் என்று உணர்ந்த உயிர்கள் மட்டுமே இறைவனின் அருளைப் பெறுவதற்கு தகுதியான பாத்திரமாக இருக்கிறார்கள்.

பாடல் #503

பாடல் #503: இரண்டாம் தந்திரம் – 16. பாத்திரம் (கொடுப்பதற்கும் பெறுவதற்கும் தகுதியானவர்கள்)

கைவிட்டி லேன்கரு வாகிய காலத்தும்
மெய்விட்டி லேன்விகிர் தன்னடி தேடுவன்
பொய்விட்டு நானே புரிசடை யானடி
நெய்விட்டு இலாத இடிஞ்சிலு மாமே.

விளக்கம்:

வினைப் பயனால் பிறவி எடுத்த போது கருவாக உருவான போதிலிருந்தே யாம் இறை நினைப்பை கைவிடாது பற்றிக் கொண்டேன். உயிர்கள் அனைத்துமாக இருக்கும் உண்மை இறைவனின் திருவடிகளையே எனக்குள் தேடி கயிறு போல பின்னிய சடையை தலையில் அணிந்த இறைவனின் திருஉருவத்தை எனக்குள் கண்டு அவனது திருவடிகளையே சரணடைந்தேன். அதனால் நெய் விட்டு எரிக்கப்படுகின்ற உலக விளக்குகளைப் போல இல்லாமல் நெய்யே விடாமல் தானாக ஒளிரும் விளக்காக எனக்குள் இறைவன் வந்து இருக்கின்றான் என்பதை உணர்ந்து கொண்டேன்.

உட்கருத்து: பொய்யான உலகப் பற்றுக்களை விட்டுவிட்டு உண்மையான இறைவனையே முழுவதுமாகப் பற்றிக்கொண்ட உயிர்கள் தான் இறைவனைத் தமக்குள் ஒளி வடிவமாகத் தரிசிக்கத் தகுதியான பாத்திரமாக இருக்கிறார்கள்.

பாடல் #504

பாடல் #504: இரண்டாம் தந்திரம் – 16. பாத்திரம் (கொடுப்பதற்கும் பெறுவதற்கும் தகுதியானவர்கள்)

ஆவன ஆவ அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்
ஏவன செய்கின்ற இளங்கிளை யோனே.

விளக்கம்:

உலகங்களும் உயிர்களும் உருவாகும் காலத்தில் உருவாகி அழியும் காலத்தில் அழிகின்றன. உயிர்களின் வினைகள் தீர்க்க தீர்க்க வினைகள் சென்று விடும். உயிர்கள் செய்யும் கர்மங்களால் வினைகள் வந்தும் சேரும். இவை எல்லாவற்றையும் கட்டிக் காக்கும் குருவாக இருக்கும் இறைவன் காட்டியருள அதைக் கண்டவர்கள் இறைவனின் கட்டளையைப் பெற்று அதைச் செயல்படுத்தும் தகுதி பெற்ற புதிய அடியவர்கள் ஆவார்கள்.

உட்கருத்து: அனைத்தும் இறைவனே என்ற உண்மையை இறைவன் காட்டத் தமக்குள் கண்டு உணர்ந்தவர்கள் இறைவனின் கட்டளையை செயல் படுத்தும் தகுதியான பாத்திரமாக இருக்கிறார்கள்.