பாடல் #101

பாடல் #101: பாயிரம் – 8. குருமட வரலாறு

வந்த மடமேழும் மன்னும்சன் மார்க்கத்தின்
முந்தி உதிக்கின்ற மூலன் மடவரை
தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்
சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே.

விளக்கம்:

இறைவனை அடையும் உண்மையான வழிகளை உயிர்களுக்கு எடுத்துக்கூற இவ்வுலகத்திற்கு வந்த இறைவனை உணர்ந்து இறை நிலையை அடைந்த ஏழு நாதர்களில் முதலில் தோன்றியவனாகிய திருமூலன் எனும் யான் அந்த வழிகள் அனைத்தையும் ஒன்பது தந்திரங்களாகவும் அந்தத் தந்திரங்களைச் சார்ந்த மூவாயிரம் பாடல்களாகவும் இறைவன் வழங்கிய அழகிய ஆகமங்களின் பொருளை அழகான தமிழ்ச் சொற்களில் வழங்கியருளியதே இந்தத் திருமந்திர மாலை எனும் நூலாகும்.

பாடல் #102

பாடல் #102: பாயிரம் – 8. குருமட வரலாறு

கலந்தருள் காலாங்கர் தம்பால் அகோரர்
நலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர்
புலங்கொள் பரமானந் தர்போக தேவர்
நிலந்திகழ் மூலர் நிராமயத் தோரே.

விளக்கம்:

திருவருளும் குருவருளும் கலந்து அருளும் காலாங்கர் (காலாங்கி நாதர்) அனைவரையும் தம்பால் ஈர்க்கவல்ல அகோரர் நன்மைகளைத் தரும் திருமாளிகைத் தேவர் அனைத்திற்கும் தலைவனான நாதனைப் போற்றும் நாதாந்தர் புலன்களை வென்ற பரமானந்தர் மற்றும் போக தேவர் (போகர்) இறைவனை அடையும் வழிகளை வழங்கி மண்ணுலக உயிர்களைத் திகழச்செய்த திருமூலர் ஆகிய நாங்கள் ஏழு பேரும் இறைவனின் அருளால் என்றும் இறவா சூட்சுமநிலை பெற்றவர்கள்.