பாடல் #539

பாடல் #539: இரண்டாம் தந்திரம் – 24. பொறையுடைமை (பொறுமை)

பற்றிநின் றார்நெஞ்சில் பல்லிதான் ஒன்றுண்டு
முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையுந்
தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்
வற்றா தொழிவது மாகமை யாமே.

விளக்கம்:

உண்மை வழியைப் பற்றி அதிலிருந்து விலகாமல் நிற்கும் யோகியர்களின் நெஞ்சில் இறைவனோடு இரண்டறக் கலக்கவேண்டும் என்கின்ற எண்ணம் இருக்கின்றது. பல்லி எப்படி தான் பற்றியதை விடாதோ அதுபோல எண்ணமும் தான் எண்ணியதை விடாது. இந்திரியங்களை (மூக்கின் வழியாக பிராணாயாமமும், நாக்கின் வழியாக மந்திரமும்) அடக்கி சிந்தனையை பல எண்ணங்களில் வீணாக சிதறவிடாமல் பொறுமையாக இருப்பவர்களுக்கு வற்றாத அமுதம் சுரக்கும்.

பாடல் #540

பாடல் #540: இரண்டாம் தந்திரம் – 24. பொறையுடைமை (பொறுமை)

ஓலக்கஞ் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனியன் பாதம் பணிந்துய்ய
மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் மன்னவன்
ஞாலத் திவன்மிக நல்லனென் றாரே.

விளக்கம்:

சிவபெருமானின் திருச்சபையைச் சுற்றி இருக்கும் அழிவில்லாத தேவர்கள் அவரின் பால் போன்ற வெண்ணிற உடலின் பாதத்தைப் பணிந்து தாங்கள் முக்தி பெற வேண்டி பொறுமையுடன் காத்திருப்பார்கள். அவ்வாறு பொறுமையுடன் இருக்கும் தேவர்களை திருமாலுக்கும் ஆதிபிரம்மனுக்கும் மன்னராக இருக்கின்ற சதாசிவமூர்த்தி உலகத்தில் மிகவும் நல்லவர்கள் என்று அருளினார்.

பாடல் #541

பாடல் #541: இரண்டாம் தந்திரம் – 24. பொறையுடைமை (பொறுமை)

ஞானம் விளைந்தவர் நம்மிட மன்னவர்
சேனை வளைந்து திசைதொறுங் கைதொழ
ஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியை
ஏனை வளைந்தருள் எட்டலு மாமே.

விளக்கம்:

உண்மை ஞானம் அடைந்தவர்கள் உலகத்தில் இருக்கும் உயிர்களுக்கு மன்னர்கள் ஆவார்கள். படைகள் எவ்வாறு மன்னரைச் சுற்றி நின்று கைகூப்பி வணங்குவார்களோ அதுபோல உண்மை ஞானம் அடைந்தவர்களை ஞானம் பெறவேண்டி பொறுமையுடன் வணங்கி நிற்பவர்கள் தேவர்களுக்குத் தலைவனும் உயிர்களின் உடலை வளர்ப்பவனுமாகிய ஆதி சிவபெருமானின் அருளை அடைவார்கள்.

பாடல் #542

பாடல் #542: இரண்டாம் தந்திரம் – 24. பொறையுடைமை (பொறுமை)

வல்வகை யாலும் மனையிலும் மன்றிலும்
பல்வகை யாலும் பயிற்றிப் பதஞ்செய்யுங்
கொல்லையி னின்று குதிகொள்ளுங் கூத்தனுக்
கெல்லையி லாத விலயமுண் டாமே.

விளக்கம்:

ஆன்மாக்களின் பக்குவத்திற்கேற்ப உடலிலும் உள்ளத்திலும் பலவகையில் இன்பங்களையும் துன்பங்களையும் கொடுத்து பக்குவம் செய்யும் சிவபெருமான் பொறுமையுடன் தவமிருப்பவர்களின் மூலாதாரத்தில் இருந்து திருக்கூத்து ஆடுவதின் பயனால் அவர்களின் மனம் இறைவனுடன் ஒன்றுபட்டு நிற்கும்.