பாடல் #515

பாடல் #515 : இரண்டாம் தந்திரம் – 19. திருக்கோயிலிழிவு

தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால்
ஆவதன் முன்னே அரசு நிலைகெடும்
சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்
காவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே.

விளக்கம்:

ஒரு திருக்கோயிலில் உள்ள சுயம்பு சிவலிங்கத்தைப் பெயர்த்தெடுத்துக் கொண்டு போய் வேறொரு திருக்கோயிலில் நிறுவினால் அச்செயல் அந்த வேறொரு திருக்கோயில் கட்டி முடிப்பதற்கு முன்பே அரசனது ஆட்சி நிலைகுலையும். அந்தச் செயலை செய்தவன் இறப்பதற்கு முன்பு தொழுநோய் வந்து துன்புற்று இறப்பான். இவ்வாறு எம் உயிர்க் காவலனாகிய நந்திபெருமான் உறுதிபட கூறினார்.

பாடல் #516

பாடல் #516: இரண்டாம் தந்திரம் – 19. திருக்கோயிலிழிவு

கட்டுவித் தார்மதிற் கல்லொன்று வாங்கிடில்
வெட்டுவிக் கும்அபி டேகத் தரசரை
முட்டுவிக் கும்முனி வேதிய ராயினும்
வெட்டுவித் தேவிடும் விண்ணவன் ஆணையே.

விளக்கம்:

திருக்கோயில் சுற்றுச்சுவரைக் கட்டியவரே பின்பு பொருள் மீது ஆசை கொண்டு அந்தச் சுவற்றிலிருந்து ஒரு கல்லை எடுத்தாலும் தவம் புரியும் முனிவரோ வேதங்களைச் சொல்லும் அந்தணரோ என கல்லை எடுத்தவர் யாராக இருந்தாலும் அவர்களையும் அந்தக் குற்றம் நிகழாதவாறு பாதுகாப்பாக வைக்காததால் அப்பொழுது முடிசூடி ஆள்கின்ற அந்நாட்டு அரசனையும் ஆகமங்களை அருளிச்செய்த சிவபெருமானின் ஆணை அழித்துவிடும்.

பாடல் #517

பாடல் #517: இரண்டாம் தந்திரம் – 19. திருக்கோயிலிழிவு

ஆற்றரு நோய்மிக் கவனி மழையின்றிப்
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்றுதைத் தான்திருக் கோயில்க ளானவை
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே.

விளக்கம்:

சிவபெருமானது திருக்கோயில்களில் அன்றாட வழிபாடுகள் சிறப்பு நாள் வழிபாடுகள் (பிரதோஷம் சிவராத்திரி) ஆகியவற்றை முறையாகச் செய்யாமல் விட்டாலோ அல்லது ஆகமங்களில் சொல்லப்பட்ட முறை தவறி அக்கோவில்களில் ஏதேனும் தவறாக செய்தால் அந்த நாட்டில் தீர்க்க முடியாத நோய்கள் பரவும். மழை பெய்யாது. அந்த நாட்டை ஆளும் அரசன் பேரரசனாக இருந்தாலும் தனது எதிரிகளைப் போரில் வெல்லும் வலிமை குறைந்து போய்த் தன் நாட்டையே இழப்பான்.

பாடல் #518

பாடல் #518: இரண்டாம் தந்திரம் – 19. திருக்கோயிலிழிவு

முன்னவ னார்கோயிற் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்குள வாரி வளங் குன்றுங்
கன்னங் களவு மிகுந்திடுங் காசினி
யென்னருமை நந்தி யெடுத்துரைத் தானே.

விளக்கம்:

அனைத்திற்கும் முதலாய் இருக்கும் இறைவன் கோவில்களில் தினந்தோறும் நடக்கும் பூஜைகள் தடைப்பட்டால் அந்த நாட்டை ஆளும் மன்னனுக்குத் தீமைகள் உண்டாகும். மழை இல்லாமல் நீர் குறைந்து நாட்டின் வளம் குன்றும். பொறி வைத்து திருடும் திருடர்கள் அதிகரித்து களவு பெருகும். இவ்வாறு உலகத்தில் நடக்கும் என்று எமது குருவாய் இருக்கும் இறைவன் எடுத்துரைத்தான்.

பாடல் #519

பாடல் #519: இரண்டாம் தந்திரம் – 19. திருக்கோயிலிழிவு

பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தாற்
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே.

விளக்கம்:

தான் ஒரு அந்தணன் என்று பெயரை மட்டும் கூறிக்கொண்டு சிவபெருமானிடம் அன்பும் சிவனைப் பற்றிய அறிவும் ஒழுக்கமும் இல்லாத அந்தணன் திருக்கோயிலில் சிவபெருமானுக்குப் பூஜைகள் செய்தால் அக்கோயில் உள்ள நாட்டில் உள்நாட்டுக் கலகங்களும் வெளிநாட்டுப் போர்களும் நடப்பதோடு அந்நாட்டில் கொடிய நோய்களும் விவசாய நிலங்களில் ஒன்றும் விளையாமல் பஞ்சமும் உண்டாகும் என்று எமது குருவாய் இருக்கும் இறைவன் எடுத்துரைத்தான்.

குறிப்பு: திருமந்திரம் பாடல் எண் 224 முதல் 237 வரை அந்தணர் ஒழுக்கம் என்ற தலைப்பில் 14 பாடல்களில் அந்தணர் என்பவர் யார் அவர் எப்படி இருக்க வேண்டும் என்று திருமந்திர பாடல்களில் உள்ளது. இந்த 14 பாடல்களையும் நமது வலைதளத்தில் படித்து அறிந்து கொள்ளலாம். வலைப்பகுதியில் தேடுவதற்கு சிரமமாக இருந்தால் தேடல் பகுதியில் எண்களை டைப் செய்து என்டர் செய்தால் சிரமம் இல்லாமல் பாடல்களை பாடிக்கலாம்.