பாடல் #113

பாடல் #113: முதல் தந்திரம் – 1. உபதேசம்

விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் றுருக்கியோ ரொப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்புஅறுத் தானே.

விளக்கம்:

வானத்தில் (அண்டத்தில்) வெவ்வேறு நிலைகளில் இருக்கும் ஆன்மாக்கள் உலகத்தில் இறங்கி வந்து அவரவர் வினைக்கு ஏற்ப பலவிதமான உடல்களை ஏற்றுப் பிறக்கும்போது அடியவர்களின் உள்ளம் குளிர்விக்கும் திருவடிகளை அவர்களின் தலைக்கு மேலே காவலாக வைத்து அவர்களின் உடலுக்குள்ளே உயிர்சக்தியாய் நின்று தான் யார் என்பதை உள்ளிருந்து உணரவைத்து உயிர்களுக்கு ஞானக்காட்சியய் தனது ஈடுஇணையில்லாத பேரானந்த நிலையைக் காட்டி அடியவர்களின் ஆன்மாவை மூடியிருக்கும் மும்மலங்களான ஆணவம் கன்மம் மாயை ஆகியவற்றை அகற்றி அருளுகின்றான் இறைவன்.

பாடல் #114

பாடல் #114: முதல் தந்திரம் – 1. உபதேசம்

களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி
களிம்பறுத் தான்அருட் கண்விழிப் பித்துக்
களிம்பணு காத கதிரொளி காட்டிப்
பளிங்கிற் பவழம் பதித்தான் பதியே.

விளக்கம்:

எங்களது ஆன்மாக்களின் மேல் இருந்த மும்மலங்களான ஆணவம் கன்மம் மாயைகளை தன் அருட் பார்வையால் அகற்றி எமது ஞானக்கண்ணைத் திறந்தான் குருநாதராக வந்த இறைவன். அவனே எந்தவித மலங்களும் நெருங்க முடியாத மாசு மருவற்ற தனது அருட் பேரொளியைக் காட்டியவன். அவனே மும்மலங்கள் அகற்றியதால் பளிங்கு போல மாறிய எமது ஆன்மாக்களின் மேல் பவழம் போன்ற தனது திருவருளைப் பதித்தான் எமக்குத் தலைவனாக இருப்பவன்.

பாடல் #115

பாடல் #115: முதல் தந்திரம் – 1. உபதேசம்

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போல்பசு பாசம் அநாதி
பதியினை சென்றணு காப்பசு பாசம்
பதியணு கில்பசு பாசம் நிலாவே.

விளக்கம்:

ஆன்மாக்களின் தலைவன் இறைவன் பதி. ஆன்மாவாகிய உயிர்கள் பசு. உயிர்களைப் பிடித்திருக்கும் ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலங்களும் பாசம். இந்த மூவரும் யாரென்று சொல்லப் போனால் என்றும் நிலைத்து நிற்கும் பழமைவாய்ந்த இறைவனைப் போலவே ஆன்மாக்களும் அவற்றை பிடித்திருக்கும் மும்மலங்களும் நித்தியமானவையே. மும்மலங்களால் கட்டுண்டு கிடக்கும் ஆன்மாக்கள் தங்களின் தலைவனாகிய இறைவனைத் தேடிச் சென்று அடைவதில்லை. இறைவன் யாரென்று தெரிந்து கொள்ள முயன்று அவனைப் பலவித வழிகளில் தேடிச்சென்று அடைந்தால் ஆன்மாக்களிடமிருந்து மும்மலங்களும் விலகிவிடும்.

பாடல் #116

பாடல் #116: முதல் தந்திரம் – 1. உபதேசம்

வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனும்
கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்
தோயமது வாய்எழும் சூரிய னாமே.

விளக்கம்:

மூங்கிலினுள்ளே இருக்கும் நெருப்பு போல (காய்ந்த மூங்கில்களை ஒன்றோடு ஒன்று உரசினால் வெளிப்படும் நெருப்பு) உயிர்களின் மெய் எனப்படும் உடலாகிய கோயிலினுள்ளே குடி கொண்டு வீற்றிருக்கும் உயிர்களின் தலைவனாகிய குருநாதன் இறைவன் உலகத் தாயை விடவும் உயிர்களின் மேல் அதிக கருணை கொண்டு அவ்வுயிர்களைப் பற்றியிருக்கும் மும்மலங்களாகிய அழுக்குகளை அகற்ற வேண்டி இருளை விலக்க கடலின் மேலே தோன்றும் சூரியனைப் போல மும்மல இருளை அகற்றும் பேரொளியாக தனது கருணை எனும் மாபெரும் கடலின் மேலே தோன்றும் சூரியன் இறைவன்.

பாடல் #117

பாடல் #117: முதல் தந்திரம் – 1. உபதேசம்

சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே
சூரிய காந்தமும் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்
ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.

விளக்கம்:

சூரியகாந்தக் கல்லையும் பஞ்சையும் ஒன்றாக சுற்றினால்கூட அந்தக் கல் பஞ்சை எரித்துவிடாது. சூரியகாந்தக் கல்லின் மேல் சூரியனின் கதிர்கள் பட்டு அவை பஞ்சின் மேல் குவிக்கப்பட்டால் மட்டுமே பஞ்சு எரியும். அதுபோலவே ஆன்மாக்களைச் சூழ்ந்திருக்கும் மும்மலங்களாகிய அழுக்கை ஆன்மாக்களால் நீக்க முடியாது. ஆன்மாக்களின் இருளை அகற்றும் பேரொளியாக வரும் இறைவனின் அருள் கிடைத்தால் மட்டுமே ஆன்மாக்களின் மும்மல அழுக்கு நீங்கும்.

பாடல் #118

பாடல் #118: முதல் தந்திரம் – 1. உபதேசம்

மலங்களைந் தாமென மாற்றி அருளித்
தலங்களைந் தானற் சதாசிவ மான
புலங்களைந் தானப் பொதுவினுள் நந்தி
நலங்களைந் தானுள் நயந்தான் அறிந்தே.

விளக்கம்:

உயிர்களைக் கட்டிவைத்திருக்கும் ஐந்துவித மலங்களான 1. ஆணவம் – செருக்கு, மமதை. 2. கன்மம் – வினைப்பயன். 3. மாயை -பொய்த்தோற்றம் 4. திரோதாயி – மறைத்தல் (ஆன்மாக்களின் கர்மாக்கள் தீர உலக அனுபவங்களைக் கொடுத்து உண்மையை மறைத்தல் செய்யும் சிவபெருமானின் ஐவகை ஆற்றலுள் ஒன்று) 5. மாயேயம் (அசுத்தமாயை) ஆகியவற்றை நீரினில் கழுவி அழுக்குகளை அகற்றுவதுபோல தனது அருளால் கழுவி அகற்றி உடம்பில் சிவ சதாக்கியம், அமூர்த்தி சதாக்கியம், மூர்த்தி சதாக்கியம், கருத்துரு சதாக்கியம், கன்மத்துரு சதாக்கியம் ஆகிய 5 லிங்கங்களாக சதாசிவமூர்த்தியாகவே வீற்றிருந்து உயிர்களின் ஐந்துவித புலன்களையும் (பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், தொடுதல்) நீக்கிப் பேரறிவு அளிக்கும் குருநாதராக இருப்பதும் உயிர்களின் உலகியல் சார்ந்த பந்த பாசங்களை அறுத்து அவற்றினுள் தன் பேரொளியைப் பரவியருளி பேரறிவு ஞானத்தை கொடுப்பதும் எம்பெருமான் சதாசிவமூர்த்தியின் அருட்பெரும் கருணையே.

பாடல் #119

பாடல் #119: முதல் தந்திரம் – 1. உபதேசம்

அறிவைம் புலனுட னேநான்ற தாகி
நெறியறி யாதுற்ற நீராழம் போல
அறிவறி வுள்ளே அழிந்தது போல
குறியறி விப்பான் குருபர னாமே.

விளக்கம்:

உயிர்களின் சிற்றறிவு அவர்களின் ஐந்து பொறிகளின் (கண், காது, மூக்கு, வாய், உடல்) வழியே கிடைத்து உணர்வுகளிலிலேயே (பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், தொடுதல்) லயித்திருந்து பேரறிவை அறியாமல் அழிந்து போகின்றது. ஆற்றின் ஆழம் தெரியாமல் நீரில் இறங்கி மூழ்கியவர்கள் போல உயிர்களும் உலக இன்பங்களில் மூழ்கி தங்களின் பிறவியைக் கடத்துகிறார்கள். இவர்களின் சிற்றறிவுக்குள்ளே பேரறிவு ஞானம் இருப்பதையும் அதை அறிந்தால் உண்மைப் பொருளை உணர்ந்து பந்த பாச உலகப் பிணைப்புகளை அறுத்து இறைவனை அடைய முடியும் என்பதையும் பரம்பொருள் இறைவன் குருவாக வந்து குறிப்பில் உணர்த்துவான்.

பாடல் #120

பாடல் #120: முதல் தந்திரம் – 1. உபதேசம்

ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல்
தாமே தனிமன்றில் தன்னம் தனிநித்தம்
தீமேவு பல்கர ணங்களுள் உற்றன
தாமேழ் பிறப்புஎரி சார்ந்தவித் தாமே.

விளக்கம்:

பசுவன் பாலில் கலந்து இருக்கும் நீரை அகற்றி வெறும் பாலை மட்டும் பருகும் அன்னப் பறவை போல உயிர்கள் தினமும் தங்களின் பலவித காரணங்களால் சேர்த்துக்கொள்ளும் தீவினைகளாகிய அழுக்கை சுத்தமான அவர்களின் ஆன்மாவிலிருந்து அகற்றி அந்தத் தீவினைகளால் அவர்கள் எடுக்கும் ஏழுவித பிறப்புகளுக்கு வித்தாகிய வினைகளை எரித்து உயிர்களைத் தம்பால் ஈர்த்துக்கொள்ளவே தில்லை அம்பலத்தில் இறைவன் எப்போதும் தனியாகத் திருநடனம் புரிகின்றான்.

பாடல் #121

பாடல் #121: முதல் தந்திரம் – 1. உபதேசம்

வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்
சுத்தத் துரியம் பிறந்து துடக்கற
ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட் டிருப்பர் சிவயோகி யார்களே.

விளக்கம்:

உயிர்கள் மறுபடியும் பிறப்பதற்குக் காரணமாக இருக்கும் வினைகளை அழித்து அருள குருநாதராக வந்த இறைவன் உபதேசித்த பேரறிவு ஞானம் மிகவும் வாய்க்கப் பெற்று அந்தப் பேரறிவு ஞானத்தின் மூலம் மல மாசு இல்லாத சுத்தமான ஆன்மாவாகப் பிறந்து உலகப் பற்றுக்களை உதறிவிட்டு ஐம்புலன்களைக் கொண்ட உயிரும் உடலும் ஒன்றாக சேர்ந்து இருக்கும் போதே இறந்து போன உடலைப் போல அசைவற்று எப்போதும் இறைவனின் நினைப்பிலேயே இருப்பவர்கள் சிவயோகியர்கள் ஆவார்கள்.

பாடல் #122

பாடல் #122: முதல் தந்திரம் – 1. உபதேசம்

சிவயோக மாவது சித்தசித் தென்று
தவயோகத் துள்புக்குத் தன்னொளி தானாய்
அவயோகம் சாரா தவன்பதி போக
நவயோக நந்தி நமக்களித் தானே.

விளக்கம்:

சிவயோகியர்கள் செய்யும் சிவயோகம் என்பது என்னவென்றால் சித்து (உயிர்) அசித்து (உடல்) ஆகிய இரண்டும் தனக்குள்ள தொடர்பை அறுத்துக்கொண்டு தவம் புரியும் யோக வழியில் தானும் தனக்குள் இருக்கும் இறைவனும் ஒன்றாகச் சேரும்படி தியானித்து பிறப்பு இறப்புகளுக்குக் காரணமாகிய உலக வழிகளில் செல்லாமல் உயிர்களின் தலைவனாகிய இறைவனின் திருவடிகளை நாடிச்சென்று அடைதல் ஆகும். பிறவியின் பெரும் பயனைத் தரும் இந்தச் சிவயோக நிலையை உயிர்களுக்கு அளித்து குருநாதராக வந்த இறைவன் பெரும் கருணை செய்தான்.