பாடல் #1655

பாடல் #1655: ஆறாம் தந்திரம் – 8. அவ வேடம் (தவசிகள் போல பொய்யாக வேடம் அணிவது)

ஆடம் பரங்கொண் டடிசிலுண் பான்பயன்
வேடங் கள்கொண்டு வெருட்டிடும் பேதைகா
ளாடியும் பாடியும் மழுது மரற்றியுந்
தேடியுங் காணீர் சிவனவன் றாள்களே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆடம பரஙகொண டடிசிலுண பானபயன
வெடங களகொணடு வெருடடிடும பெதைகா
ளாடியும பாடியு மழுது மரறறியுந
தெடியுங காணீர சிவனவன றாளகளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆடம்பரம் கொண்டு அடிசில் உண்பான் பயன்
வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் காணீர் சிவன் அவன் தாள்களே.

பதப்பொருள்:

ஆடம்பரம் (ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து) கொண்டு (கொண்டு) அடிசில் (மிகவும் இனிப்பான உணவுகளை) உண்பான் (உண்ணுகின்றவன்) பயன் (அதற்கு தேவையான செல்வம் திரட்டுவதற்கு)
வேடங்கள் (தவசிகள் போல வேடம் அணிந்து) கொண்டு (கொண்டு) வெருட்டிடும் (மற்றவர்களை பயமுறுத்தியும் பொய்யான வார்த்தைகளால் மயக்கியும்) பேதைகாள் (திரிகின்ற முட்டாள் மனிதர்களாக இருக்கின்றார்கள். இப்படி வாழ்க்கையை வீணாக்காமல்)
ஆடியும் (இறைவன் மேல் உண்மையான அன்பு கொண்டு ஆடியும்) பாடியும் (அவனது திருப் புகழ்களை பாடியும்) அழுதும் (அழுதும்) அரற்றியும் (அவன் காண கிடைக்க மாட்டானா என்று புலம்பியும்)
தேடியும் (அவன் எங்கு இருக்கின்றான் என்று தேடினால்) காணீர் (காண்பீர்கள்) சிவன் (இறைவன்) அவன் (அவனது) தாள்களே (திருவடிகளை).

விளக்கம்:

ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு மிகவும் இனிப்பான உணவுகளை உண்ணுகின்றவன் அதற்கு தேவையான செல்வம் திரட்டுவதற்கு தவசிகள் போல வேடம் அணிந்து கொண்டு மற்றவர்களை பயமுறுத்தியும் பொய்யான வார்த்தைகளால் மயக்கியும் திரிகின்ற முட்டாள் மனிதர்களாக இருக்கின்றார்கள். இப்படி வாழ்க்கையை வீணாக்காமல் இறைவன் மேல் உண்மையான அன்பு கொண்டு ஆடியும் அவனது திருப் புகழ்களை பாடியும், அழுதும் அவன் காண கிடைக்க மாட்டானா என்று புலம்பியும் அவன் எங்கு இருக்கின்றான் என்று தேடினால் இறைவனது திருவடிகளை காண்பீர்கள்.

பாடல் #1656

பாடல் #1656: ஆறாம் தந்திரம் – 8. அவ வேடம் (தவசிகள் போல பொய்யாக வேடம் அணிவது)

ஞானமில் லார்வேடம் பூண்டிந்த நாட்டிடை
யீனம தேசெய் திரந்துண் டிருப்பினு
மான நலங்கெடு மப்புவி யாதலா
லீனவர் வேடங் கழிப்பித்த லின்பமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஞானமில லாரவெடம பூணடிநத நாடடிடை
யீனம தெசெய திரநதுண டிருபபினு
மான நலஙகெடு மபபுவி யாதலா
லீனவர வெடங கழிபபிதத லினபமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஞானம் இல்லார் வேடம் பூண்டு இந்த நாட்டு இடை
ஈனம் அதே செய்து இரந்து உண்டு இருப்பினும்
மானம் நலம் கெடும் அப் புவி ஆதலால்
ஈன அவர் வேடம் கழிப்பித்தல் இன்பமே.

பதப்பொருள்:

ஞானம் (உண்மையான ஞானம்) இல்லார் (இல்லாதவர்கள்) வேடம் (தவசிகள் போல வேடம்) பூண்டு (அணிந்து கொண்டு) இந்த (அவர்கள் இருக்கின்ற) நாட்டு (நாட்டிற்கு) இடை (நடுவிலேயே திரிந்து கொண்டு)
ஈனம் (இழிவான) அதே (செயல்களே) செய்து (செய்து கொண்டு) இரந்து (மற்றவர்களிடம் பிச்சை எடுத்து) உண்டு (உணவு சாப்பிட்டு கொண்டு) இருப்பினும் (இருந்தாலும்)
மானம் (அவர்களின் செயலால் நாட்டிற்கு அவமானமும்) நலம் (நன்மை) கெடும் (கெடுதலும்) அப் (அவர்கள் இருக்கின்ற நாடு இந்த) புவி (பூமியில் இருப்பதால் உலகம் அனைத்திற்குமே கெடுதலும் நடக்கும்) ஆதலால் (ஆகவே)
ஈன (இழிவான) அவர் (அவர்களின்) வேடம் (வேடத்தை) கழிப்பித்தல் (நீக்கி அவர்களை உண்மையை உணர செய்து) இன்பமே (அதன் பயனால் உலகம் இன்பம் அடையும் படி செய்வது உண்மை ஞானிகளின் கடமையாகும்).

விளக்கம்:

உண்மையான ஞானம் இல்லாதவர்கள் தவசிகள் போல வேடம் அணிந்து கொண்டு, அவர்கள் இருக்கின்ற நாட்டிற்கு நடுவிலேயே திரிந்து கொண்டு, இழிவான செயல்களே செய்து கொண்டு, மற்றவர்களிடம் பிச்சை எடுத்து உணவு சாப்பிட்டு கொண்டு இருந்தாலும், அவர்களின் செயலால் நாட்டிற்கு அவமானமும், நன்மை கெடுதலும், அவர்கள் இருக்கின்ற நாடு இந்த பூமியில் இருப்பதால் உலகம் அனைத்திற்குமே கெடுதலும் நடக்கும். ஆகவே இழிவான அவர்களின் வேடத்தை நீக்கி அவர்களை உண்மையை உணர செய்து அதன் பயனால் உலகம் இன்பம் அடையும் படி செய்வது உண்மை ஞானிகளின் கடமையாகும்.

பாடல் #1657

பாடல் #1657: ஆறாம் தந்திரம் – 8. அவ வேடம் (தவசிகள் போல பொய்யாக வேடம் அணிவது)

இன்பமுந் துன்பமு நாட்டா ரிடத்துள்ள
நன்செயல் புன்செய லாலந்த நாட்டிற்கா
மென்ப விறைநாடி நாடோறு நாட்டினில்
மன்பதை செப்பஞ் செயில்வையம் வாழுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இனபமுந துனபமு நாடடா ரிடததுளள
நனசெயல புனசெய லாலநத நாடடிறகா
மெனப விறைநாடி நாடொறு நாடடினில
மனபதை செபபஞ செயிலவையம வாழுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இன்பமும் துன்பமும் நாட்டார் இடத்து உள்ள
நன் செயல் புன் செயல் ஆல் அந்த நாட்டிற்கு ஆம்
என்ப இறை நாடி நாள் தோறும் நாட்டினில்
மன் பதை செப்பம் செயில் வையம் வாழுமே.

பதப்பொருள்:

இன்பமும் (இன்பம் வருவதும்) துன்பமும் (துன்பம் வருவதும்) நாட்டார் (ஒரு நாட்டில் உள்ளவர்கள்) இடத்து (அவர்கள் இருக்கின்ற இடத்தில்) உள்ள (உள்ள)
நன் (நன்மையான) செயல் (செயல்களாலும்) புன் (தீமையான) செயல் (செயல்களாலும்) ஆல் (தான்) அந்த (அவர்கள் இருக்கின்ற) நாட்டிற்கு (நாட்டிற்கு) ஆம் (நிகழ்கின்றது)
என்ப (என்பதால்) இறை (அதை தவிர்த்து இறைவனை) நாடி (தேடி) நாள் (தினம்) தோறும் (தோறும்) நாட்டினில் (நாட்டில் உள்ள மக்கள் அனைவரும்)
மன் (தங்களின் மனதை) பதை (கெடுக்கின்ற விஷயங்களை நீக்கி) செப்பம் (செம்மையாக்குவதை) செயில் (செய்தால்) வையம் (உலகம்) வாழுமே (இன்பமோடு வாழும்).

விளக்கம்:

ஒரு நாட்டில் உள்ளவர்கள் அவர்கள் இருக்கின்ற இடத்தில் செய்கின்ற நன்மையான செயல்களாலும் தீமையான செயல்களாலும் தான் அவர்கள் இருக்கின்ற நாட்டிற்கு இன்பம் வருவதும் துன்பம் வருவதும் நிகழ்கின்றது. ஆதலால் அதை தவிர்த்து இறைவனை தேடி தினம் தோறும் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் தங்களின் மனதை கெடுக்கின்ற விஷயங்களை நீக்கி செம்மையாக்குவதை செய்தால் உலகம் இன்பமோடு வாழும்.

கருத்து:

செம்மையான மனதோடு எதை செய்தாலும் அது தர்மமாகும் இதுவே உலகத்திற்கு நன்மையை கொடுக்கும். அவ்வாறு இல்லாமல் தீமையான மனதோடு செய்கின்ற செயல்களே அவ வேடமாகும் இதுவே நாட்டிற்கு துன்பத்தை கொடுக்கும்.

பாடல் #1658

பாடல் #1658: ஆறாம் தந்திரம் – 8. அவ வேடம் (தவசிகள் போல பொய்யாக வேடம் அணிவது)

இழிகுலத் தோர்வேடம் பூண்பர் மேலெய்த
வழிகுலத் தோர்வேடம் பூண்பர் தேவாகப்
பழிகுலத் தாகிய பாழ்சண்ட ரானார்
கழிகுலத் தோர்கள் களையப்பட் டோரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இழிகுலத தொரவெடம பூணபர மெலெயத
வழிகுலத தொரவெடம பூணபர தெவாகப
பழிகுலத தாகிய பாழசணட ரானார
கழிகுலத தொரகள களையபபட டொரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இழி குலத்தோர் வேடம் பூண்பர் மேல் எய்த
வழி குலத்தோர் வேடம் பூண்பர் தே ஆகப்
பழி குலத்து ஆகிய பாழ் சண்டர் ஆனார்
கழி குலத்தோர்கள் களைய பட்டோரே.

பதப்பொருள்:

இழி (இழிவான) குலத்தோர் (கூட்டத்தோடு சேர்ந்தவர்கள்) வேடம் (பொய்யாக வேடம்) பூண்பர் (அணிவது) மேல் (அனைவருக்கும் மேலானவன் என்ற பொய்யான பதவியை) எய்த (பெறுவதற்கு ஆகும்)
வழி (ஞான குருவின் வழியை பின்பற்றி வருகின்ற சீடர்கள்) குலத்தோர் (கூட்டத்தோடு சேர்ந்தவர்கள்) வேடம் (உண்மையான வேடம்) பூண்பர் (அணிவது) தே (தேவர்கள்) ஆகப் (ஆகுவதற்காக ஆகும்)
பழி (பொய்யான வேடத்தால் பழியை பெற்ற) குலத்து (கூட்டத்தவர்) ஆகிய (ஆகிய இவர்கள்) பாழ் (அடுத்தவர்களின் வாழ்க்கையை பாழாக்கிய) சண்டர் (கொடுமையான மனிதர்கள்) ஆனார் (ஆக இருக்கின்றார்கள்)
கழி (எனவே தங்களின் வாழ்க்கையை வீணாக கழித்த) குலத்தோர்கள் (கூட்டத்தவர்கள்) களைய (உண்மை வேடம் அணிந்த நல்லவர்கள் கூட்டத்திலிருந்து நீக்கி களையப்) பட்டோரே (பட்டவர்களாகவே இருக்கின்றார்கள்).

விளக்கம்:

ஞான குருவின் வழியை பின்பற்றி வருகின்ற சீடர்கள் கூட்டத்தோடு சேர்ந்தவர்கள் உண்மையான வேடம் அணிவது தேவர்கள் ஆகுவதற்காக ஆகும். ஆனால் இழிவான கூட்டத்தோடு சேர்ந்தவர்கள் பொய்யாக வேடம் அணிவது அனைவருக்கும் மேலானவன் என்ற பொய்யான பதவியை பெறுவதற்கு ஆகும். ஆகவே பொய்யான வேடத்தால் பழியை பெற்ற கூட்டத்தவர் ஆகிய இவர்கள் அடுத்தவர்களின் வாழ்க்கையை பாழாக்கிய கொடுமையான மனிதர்கள் ஆக இருக்கின்றார்கள். எனவே தங்களின் வாழ்க்கையை வீணாக கழித்த கூட்டத்தவர்கள் உண்மை வேடம் அணிந்த நல்லவர்கள் கூட்டத்திலிருந்து நீக்கி களையப் பட்டவர்களாகவே இருக்கின்றார்கள்.

பாடல் #1659

பாடல் #1659: ஆறாம் தந்திரம் – 8. அவ வேடம் (தவசிகள் போல பொய்யாக வேடம் அணிவது)

பொய்த்தவஞ் செய்வார் புகுவார் நரகத்துப்
பொய்த்தவஞ் செய்தவர் புண்ணிய ராகாரேற்
பொய்த்தவ மெய்த்தவம் போகத்துட்போக்கியஞ்
சத்திய ஞானத்தாற் றாங்குந் தவங்களே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பொயததவஞ செயவார புகுவார நரகததுப
பொயததவஞ செயதவர புணணிய ராகாரெற
பொயததவ மெயததவம பொகததுட பொககியஞ
சததிய ஞானததாற றாஙகுந தவஙகளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பொய் தவம் செய்வார் புகுவார் நரகத்து
பொய் தவம் செய்தவர் புண்ணியர் ஆகார் ஏல்
பொய் தவம் மெய் தவம் போகத்து உள் போக்கி அம்
சத்திய ஞானத்தால் தாங்கும் தவங்களே.

பதப்பொருள்:

பொய் (உண்மையான தவசிகளைப் போல நடிக்கின்ற பொய்யான) தவம் (தவத்தை) செய்வார் (செய்பவர்கள்) புகுவார் (இறந்த பிறகு சென்று அடைவார்கள்) நரகத்து (நரகத்தில்)
பொய் (பொய்யான) தவம் (தவத்தை) செய்தவர் (செய்தவர்கள்) புண்ணியர் (பாவத்தை மட்டுமே சேர்த்துக் கொள்வதால் புண்ணியம் பெற்றவர்) ஆகார் (ஆக மாட்டார்கள்) ஏல் (ஆனால்)
பொய் (பொய்யான) தவம் (தவமாக இருந்தாலும்) மெய் (உண்மையான) தவம் (தவமாக இருந்தாலும்) போகத்து (உலகத்தில் வினைகளை கொடுக்கின்ற ஆசைகளை) உள் (தமக்குள்ளிருந்து) போக்கி (நீக்கி விட்டு) அம் (அதன் பயனால் கிடைக்கின்ற)
சத்திய (உண்மையான) ஞானத்தால் (ஞானத்தால்) தாங்கும் (உறுதியாக தாங்கப்பட்டு இருப்பதே) தவங்களே (உண்மையான தவங்கள் ஆகும்).

விளக்கம்:

உண்மையான தவசிகளைப் போல நடிக்கின்ற பொய்யான தவத்தை செய்பவர்கள் இறந்த பிறகு நரகத்திற்கே சென்று அடைவார்கள். பொய்யான தவத்தை செய்தவர்கள் பாவத்தை மட்டுமே சேர்த்துக் கொள்வதால் புண்ணியம் பெற்றவர் ஆக மாட்டார்கள். ஆனால், பொய்யான தவமாக இருந்தாலும் உண்மையான தவமாக இருந்தாலும் உலகத்தில் வினைகளை கொடுக்கின்ற ஆசைகளை தமக்குள்ளிருந்து நீக்கி விட்டு அதன் பயனால் கிடைக்கின்ற உண்மையான ஞானத்தால் உறுதியாக தாங்கப்பட்டு இருப்பதே உண்மையான தவங்கள் ஆகும்.

பாடல் #1660

பாடல் #1660: ஆறாம் தந்திரம் – 8. அவ வேடம் (தவசிகள் போல பொய்யாக வேடம் அணிவது)

பொய்வேடம் பூண்பர் பொசித்தல் பயனாக
மெய்வேடம் பூண்போர் மிகுபிச்சை கைக்கொள்வர்
பொய்வேட மெய்வேடம் போதவே பூணினு
முய்வேட மாகுமு ணர்ந்தறிந் தோர்க்கே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பொயவெடம பூணபர பொசிததல பயனாக
மெயவெடம பூணபொர மிகுபிசசை கைககொளவர
பொயவெட மெயவெடம பொதவெ பூணினு
முயவெட மாகுமு ணரநதறிந தொரககெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பொய் வேடம் பூண்பர் பொசித்தல் பயன் ஆக
மெய் வேடம் பூண்போர் மிகு பிச்சை கை கொள்வர்
பொய் வேடம் மெய் வேடம் போதவே பூணினும்
உய் வேடம் ஆகும் உணர்ந்து அறிந்தோர்க்கே.

பதப்பொருள்:

பொய் (உண்மையான தவசிகளைப் போல பொய்யாக) வேடம் (வேடம்) பூண்பர் (அணிந்து கொள்பவர்கள்) பொசித்தல் (சும்மா இருந்து மற்றவர்கள் தானமாக தருகின்ற உணவை வைத்து தமது பசியை தீர்த்துக் கொள்கின்ற) பயன் (பயனை) ஆக (எண்ணியே ஆகும்)
மெய் (உண்மையான) வேடம் (வேடத்தை) பூண்போர் (அணிந்த தவசிகள்) மிகு (மேன்மையான) பிச்சை (உயிர் வாழ்வதற்காக மட்டுமே உணவு யாசிக்கின்ற பிச்சை என்கின்ற) கை (கொள்கையை) கொள்வர் (மேற் கொண்டவர்கள்)
பொய் (பொய்யான) வேடம் (வேடமாக இருந்தாலும்) மெய் (உண்மையான) வேடம் (வேடமாக இருந்தாலும்) போதவே (அவர்களின் ஆசைகளோ கொள்கைகளுக்கோ ஏற்றபடி) பூணினும் (அணிந்து கொண்டாலும்)
உய் (இறைவனை அடைவதற்கு) வேடம் (அந்த வேடம்) ஆகும் (பயன்படுவது) உணர்ந்து (அந்த வேடத்தின் உள்ளே இருக்கின்ற உண்மையான தத்துவத்தை உணர்ந்து) அறிந்தோர்க்கே (அறிந்து கொண்டவர்களுக்கு மட்டுமே ஆகும்).

விளக்கம்:

உண்மையான தவசிகளைப் போல பொய்யாக வேடம் அணிந்து கொள்பவர்கள் சும்மா இருந்து மற்றவர்கள் தானமாக தருகின்ற உணவை வைத்து தமது பசியை தீர்த்துக் கொள்கின்ற பயனை எண்ணியே அப்படி வேடம் போடுகின்றார்கள். உண்மையான வேடத்தை அணிந்த தவசிகள் உயிர் வாழ்வதற்காக மட்டுமே உணவு யாசிக்கின்ற பிச்சை என்கின்ற மேன்மையான கொள்கையை மேற் கொண்டவர்கள் ஆவார்கள். பொய்யான வேடமாக இருந்தாலும் உண்மையான வேடமாக இருந்தாலும் அவர்களின் ஆசைகளோ கொள்கைகளுக்கோ ஏற்றபடி அணிந்து கொண்டாலும், இறைவனை அடைவதற்கு அந்த வேடம் பயன்படுவது அந்த வேடத்தின் உள்ளே இருக்கின்ற உண்மையான தத்துவத்தை உணர்ந்து அறிந்து கொண்டவர்களுக்கு மட்டுமே ஆகும்.

கருத்து:

பொய்யான வேடம் அணிந்தாலும் உண்மையான வேடம் அணிந்தாலும் தவ வேடத்தின் உட்பொருளாகிய எதை செய்தாலும் ஆசைகள் இல்லாமல் யாசித்து செய்கின்ற தத்துவத்தை உணர்ந்து அறிந்து கொண்டவர்களுக்கே அது இறைவனை அடைவதற்கு வழிகாட்டும்.