பாடல் #712

பாடல் #712: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)

காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக்
காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற்
காதல் வழிசெய்து கங்கை வழிதருங்
காதல் வழிசெய்து காக்குவது மாமே.

விளக்கம்:

தன்னை அடைவதற்கு உண்மையான அன்பை வழியாக வைத்த நெற்றிக்கண்ணையுடைய இறைவனை உண்மையான அன்போடு இருகண்களுக்கு நடுவே இருக்கும் சுழுமுணை நாடியின் உச்சியை நோக்கி தியானத்தில் இருந்தால் தலை உச்சியிலுள்ள சகஸ்ரதளத்தில் ஒளிப்பிரவாகமாக வீற்றிருக்கும் இறைவனைச் சென்றடையும் வழி கிடைக்கும். அந்த வழியை அன்போடு பின்பற்றி அடைந்து விட்டால் எப்போதும் பேரின்பத்தில் திளைத்து என்றும் அழியாமல் இறையருள் காத்து நிற்கும்.

கருத்து: நாடிகளின் வழியே இறைவனை அடைவதற்கு உண்மையான அன்பு ஒன்றே வழியாகும்.

பாடல் #713

பாடல் #713: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)

காக்கலு மாகுங் கரணங்கள் நான்கையுங்
காக்கலு மாகுங் கலைபதி னாறையுங்
காக்கலு மாகுங் கலந்தநல் வாயுவுங்
காக்கலு மாகுங் கருத்துற நிற்றலே.

விளக்கம்:

உலக விஷயங்களை எண்ணாமல் ஒளி உருவமான இறைவனின் மேல் எப்போதும் எண்ணத்தை வைத்திருந்தால் இறைவனின் திருவருள் நமது நான்கு அந்தக்கரணங்களையும், பதினாறு கலைகளையும், மூச்சுக்காற்றோடு என்றும் கலந்து நின்று காத்தருளும்.

கருத்து: இறைவனின் மேல் எண்ணம் வைத்து தியானிப்பவர்களை இறையருள் அனைத்திலிருந்தும் காத்து அருளும்.

நான்கு அந்தக்கரணங்கள்:

 1. மனம்
 2. புத்தி
 3. சித்தம்
 4. அகங்காரம்

பதினாறு கலைகள் (நாடிகள்):

 1. மேதைக்கலை
 2. அருக்கீசக்கலை
 3. விடக்கலை
 4. விந்துக்கலை
 5. அர்த்தசந்திரன் கலை
 6. நிரோதினிக்கலை
 7. நாதக்கலை
 8. நாதாந்தக்கலை
 9. சக்திக்கலை
 10. வியாபினிக்கலை
 11. சமனைக்கலை
 12. உன்மனைக்கலை
 13. வியோமரூபினிக்கலை
 14. அனந்தைக்கலை
 15. அனாதைக்கலை
 16. அனாசிருதைக்கலை

1. மேதைக்கலை தொப்புள் முதல் மார்பு நடு இதயம் வரை இருக்கும்

2. அருக்கீசக்கலை இதயம் முதல் தொண்டைக்குழிவரை இருக்கும்.

3. விடக்கலை தொண்டை முதல் நாக்கின் அடிவரை இருக்கும்.

4. விந்துக்கலை நாக்கினடி முதல் புருவ நடுவரை இருக்கும்.

5. அர்த்தசந்திரக்கலை புருவநடு முதல் உச்சித்துளைவரை இருக்கும்.

6. நிரோதினிக்கலை,

7. நாதக்கலை,

8. நாதாந்தகலை ஆகிய மூன்றும் சம அளவில் பரவியிருக்கும்.

9. சக்திக்கலை,

10. வியாபினிக்கலை,

11. சமனைக்கலை,

12. உன்மனைக்கலை, ஆகிய  நான்கும் 12 விரல் அளவில் பரவியிருக்கும்.

13. வியோமரூபிணிக் கலை

14. அனந்தைக் கலை

15. அனாதைக் கலை,

16. அனாசிருதைக் கலை சமனைக்கும் வியாபினிக்கும் நடுவே இருக்கும்.

பாடல் #714

பாடல் #714: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)

நிலைபெற நின்றது நேர்தரு வாயு
சிலைபெற நின்றது தீபமும் ஒத்துக்
கலைவழி நின்ற கலப்பை அறியில்
மலைவற வாகும் வழியது வாமே.

விளக்கம்:

இடகலை பிங்கலை நாடிகளின் வழியே உள்ளிழுத்த மூச்சுக்காற்றை நடுவில் உள்ள சுழுமுனை நாடி வழியே நேராக மேலேற்றிச் சென்று சகஸ்ரதளத்தில் ஒளி வடிவமாக இருக்கின்ற இறைவனோடு கலந்து அசைவில்லாமல் சிலை போல ஒன்றாக நின்றால் வெளிப்படும் அமிர்தத்தின் மூலம் ஒளி வடிவமாக இருக்கின்ற இறைவனின் அருள் வடிவம் பதினாறு கலைகளிலும் (பாடல் #713 இல் கொடுக்கப்பட்டுள்ளபடி 16 நாடிகள்) கலந்து நிற்பதை அறிந்து கொள்ளலாம். யோகியர்கள் மாயையினால் உருவாகும் மயக்கத்திலிருந்து விலகி உண்மை ஞானத்தில் எப்போதும் இருப்பதற்கான வழி இதை அறிந்து கொள்வதே ஆகும்.

கருத்து: சுழுமுனை நாடி வழியே மூச்சுக்காற்றை கொண்டு சென்று சக்ஸ்ரதளத்தில் சேர்க்கும் யோகியர்கள் தங்களின் 16 நாடிகளிலும் இறைவனது திருவருள் கலந்து இருப்பதை அறிந்து எப்போதும் மாயை இல்லாத உண்மை ஞானத்தில் இருப்பார்கள்.

பாடல் #715

பாடல் #715: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)

புடையொன்றி நின்றிடும் பூதப் பிரானை
மடையொன்றி நின்றிட வாய்த்த வழியுஞ்
சடையொன்றி நின்றஅச் சங்கர நாதன்
விடையொன்றி லேறியே வீற்றிருந் தானே.

விளக்கம்:

மூச்சுக்காற்றோடு கலந்து உயிர்களின் உயிர்த்துடிப்பின் நாதமாக நிற்கின்ற பஞ்ச பூதங்களின் தலைவனாகிய இறைவனை அந்த மூச்சுக்காற்று மற்ற நாடிகளின் வழியே சென்று வீணாகிவிடாமல் சுழுமுனை நாடியின் வழியே மேலேற்றிச் சென்று தலை உச்சியில் சடையணிந்த கோலத்தில் நின்ற சங்கரனின் தலைவனாகிய இறைவனோடு கலந்து விட்டால் அந்த இறைவன் உயிர்களின் உடலையே தனக்கு ஏற்ற காளை வாகனமாக்கி அதிலேயே அழியாமல் என்றும் வீற்றிருந்து அருளுவான்.

கருத்து: மூச்சுக்காற்றை மற்ற நாடிகளின் வழியே செலுத்தி வீணாக்காமல் சுழுமுனை நாடி வழியே எடுத்துச் சென்று இறைவனோடு கலந்துவிடும் யோகியர்களின் உடல் என்றும் அழியாமல் இறைவனின் திருவருளோடு நிலைத்து நிற்கின்றது.

பாடல் #716

பாடல் #716: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)

இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார்
பெருக்கின்ற காலப் பெருமையை நோக்கி
ஒருக்கின்ற வாயு வொளிபெற நிற்கத்
தருக்கொன்றி நின்றிடுஞ் சாதக னாமே.

விளக்கம்:

உயிர்களுக்கு தாம் வாழுகின்ற காலம் எவ்வளவு என்பது தெரியாது. தமது வாழ்நாளை அதிகப்படுத்திக் கொடுக்கும் அகயோகத்தின் பெருமையை உணர்ந்து அதனை நோக்கிச்சென்று தங்களின் மூச்சுக்காற்றை சுழுமுனை நாடி வழியே மேலேற்றிச் சென்று சகஸ்ரதளத்தில் ஒளியாக வீற்றிருக்கும் இறைவனோடு கலந்து அதனால் கிடைக்கும் பேரின்பத்தில் திளைத்து எப்போதும் நிலையாக நிற்பவர்கள் சாதகர்கள் ஆகின்றார்கள்.

கருத்து: அழிகின்ற வாழ்நாளை நீட்டிக்க அகயோகம் செய்து இறைவனோடு கலந்து பேரின்பத்தில் திளைத்து நிற்பவர்கள் சாதகர்கள் ஆவார்கள்.

பாடல் #717

பாடல் #717: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)

சாதக மானஅத் தன்மையை நோக்கியே
மாதவ மான வழிபாடு செய்திடும்
போதக மாகப் புகலுறப் பாய்ச்சினால்
வேதக மாக விளைந்து கிடக்குமே.

விளக்கம்:

பாடல் #716 ல் உள்ளபடி அகயோகம் செய்வதன் பெருமையை உணர்ந்து மாபெரும் தவமாகிய அந்த யோகத்தை செய்து மூச்சுக்காற்றை சுழுமுனை நாடி வழியே தலை உச்சியிலுள்ள சகஸ்ரதளத்தில் போய்ச் சேரும்படி மேல் நோக்கிப் பாய்ச்சினால் இரும்பை தங்கமாக்கிவிடும் இரசவாத குளிகையைப் போலவே யோகம் செய்பவரின் உடல் பொன்னொளி வீசும் தங்கத்தாலான உடலாக மாறிவிடும்.

கருத்து: அகயோகம் செய்யும் யோகியரின் உடல் பொன்னொளி வீசும் தங்கமாக மாறிவிடும்.

பாடல் #718

பாடல் #718: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)

கிடந்தது தானே கிளர்பயன் மூன்று
நடந்தது தானேஉள் நாடியுள் நோக்கிப்
படர்ந்தது தானேஅப் பங்கய மாகத்
தொடர்ந்தது தானேஅச் சோதியுள் நின்றே.

விளக்கம்:

பாடல் #717 ல் உள்ளபடி அகயோகத்தால் தம் உடலைத் தங்கமாக மாற்றிக்கொண்ட யோகியர்களுக்குள் உருவாகும் பயன்கள் மூன்றுவிதமாகும். முதலாவதாக மூலாதாரத்தில் இருந்து வெளிவரும் காற்று சுழுமுனை நாடி வழியாக உள்ளுக்குள் சென்று சகஸ்ரதளத்திற்கும் மூலாதாரத்திற்கும் இடையே உள்ளுக்குள் நோக்கி சுழன்று கொண்டு இருப்பதால் வெளிக்காற்றை சுவாசிக்க வேண்டியது இல்லை. இரண்டாவதாக அவர்களின் உள்ளுக்குள்ளே சுழன்று கொண்டு இருக்கும் காற்று சகஸ்ரதளத்தில் உள்ள ஆயிரம் தாமரை இதழ்களிலும் பரவி அதை மலரச் செய்து எப்போதும் இயக்கத்திலேயே வைத்திருக்கும். மூன்றாவதாக அவர்களின் உடல் இறைவனின் ஜோதிமயத்திலேயே மூழ்கி பேரின்பத்தில் எப்போதும் அழியாமல் நிற்கும்.

கருத்து: அகயோகம் செய்கின்ற யோகியர்கள் உடலுக்கு தேவையான மூச்சுக்காற்றை தனக்குள்ளேயே பெற்றுக்கொண்டு தனக்குள் ஜோதியாய் இருக்கும் இறைவனுடன் பேரின்பத்தில் மூழ்கி இருப்பார்கள்.

பாடல் #719

பாடல் #719: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)

தானே எழுந்தஅத் தத்துவ நாயகி
ஊனே வழிசெய்தெம் உள்ளே யிருந்திடும்
வானோர் உலகீன்ற அம்மை மதித்திடத்
தேனே பருகிச் சிவாலய மாகுமே.

விளக்கம்:

இறைவனை அடைவதற்கு வழியாக பிறக்கும் போதே அனைத்து உயிர்களுக்கும் உள்ளே இருக்கும் குண்டலினி சக்தியானது பாடல் #717 ல் உள்ளபடி அகயோகத்தால் தம் உடலைத் தங்கமாக மாற்றிக்கொண்ட யோகியர்களுக்குள் தானாக எழுந்துவிடும். தேவர்களையும் உலகத்தையும் படைத்த அசையும் சக்தியாகவும் அசையா சக்தியாகவும் இருக்கின்ற இறைவனை சுழுமுனை நாடி வழியாக சகஸ்ரதளத்தை சென்று அடைந்து அங்கிருக்கும் அமிர்தத்தை பருகிவிட்டால் அந்த யோகியரின் உடல் இறைவனை வீற்றிருக்கும் ஆலயமாகும்.

கருத்து: அகயோகம் செய்து குண்டலினி சக்தியை மேலெழுப்பி அமிர்தத்தை பருகும் யோகியர்களின் உடல் இறைவனை வீற்றிருக்கும் ஆலயமாகும்.

பாடல் #720

பாடல் #720: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)

திகழும் படியே செறிதரு வாயு
அழியும் படியை அறிகில ராரும்
அழியும் படியை அறிந்தபின் நந்தி
திகழ்கின்ற வாயுவைச் சேர்தலு மாமே.

விளக்கம்:

உயிர்கள் வாழ்வதற்கு மட்டுமன்றி தம்மை வந்தடைந்து மேன்மையடையவும் மூச்சுக்காற்றை படைத்து அருளியிருக்கின்றான் இறைவன். ஆனால் உயிர்கள் சுவாசிக்கும் 540 பங்குகளில் (பாடல் #700 இல் காண்க) ஒரு பங்கைத் தவிர மீதி அனைத்தும் இறைவனை அடையாமலேயே வீணாகிவிடுவதை யாரும் அறிந்திருக்கவில்லை. வீணாகும் மூச்சுக்காற்றின் உண்மைப் பயனை அறிந்து கொண்டு அகயோகம் செய்யும் யோகியர்களுக்கு இறைவனே குருவாக இருந்து அவர்களின் வெளிப்புற மூச்சுக்காற்றை நிறுத்தி உட்புறமாக மூலாதாரத்தில் இருந்து சுழுமுனை நாடிவழியே சுவாசிக்க வைத்து அந்த சுவாசத்தோடு கலந்து நின்று அருளுகின்றான்

கருத்து: உடலின் செயல்களில் வீணாகிவிடும் மூச்சுக்காற்றை அகயோகம் செய்து மாற்றி முழுமையாக பயன்படுத்தும் யோகியர்களின் சுவாசத்தோடு கலந்து குருவாக நின்று இறைவன் அருளுகின்றான்.

பாடல் #721

பாடல் #721: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)

சோதனை தன்னில் துரிசறக் காணலாம்
நாதனும் நாயகி தன்னிற் பிரியுநாள்
சாதன மாகுங் குருவை வழிபட்டு
மாதன மாகவே மதித்துக்கொள் ளீரே.

விளக்கம்:

யோகியர் தாம் விடும் மூச்சுக்காற்றின் அளவைக் கொண்டே தமக்குள் இறைவன் வீற்றிருக்கும் உடலும் இறைவி வீற்றிருக்கும் உயிரும் எப்போது பிரியும் என்பதை ஒரு சில சோதனைகளால் சிறிதும் பிழையின்றி மிகச் சரியாக அறிந்து கொள்ளலாம். அந்த சோதனைகள் என்ன என்பதை யோக குருவை வழிபட்டு அவர் அருளுகின்ற சாதனைகளை அரிய மாபெரும் செல்வமாக மதித்து சிரத்தையாக செய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

கருத்து: உடலை விட்டு உயிர் பிரிந்து விடும் ஆயுளை மிகச் சரியாகக் கணக்கிடும் சாதனைகளை யோக குருவின் அருள் கொண்டு அறிந்து கொண்டு சிரத்தையுடன் செய்யும் சாதகர்களுக்கு இறப்பிலிருந்து தப்பிக்கும் வழி கிடைக்கும்.

யோக குருவை வழிபட்டு அவர் அருளுகின்ற சாதனைகளைச் சிரத்தையாக செய்வதன் மூலம் கிடைக்கும் பலனை அடுத்த பாடல் #722ல் காணலாம்.