பாடல் #1510

பாடல் #1510: ஐந்தாம் தந்திரம் – 15. சாரூபம் (இறைவன் இருக்கின்ற வடிவத்திலேயே இருந்து அவருக்கானதை ஏற்றுக் கொள்வது)

தங்கிய சாரூபந் தானெட்டாம் யோகமாந்
தங்குஞ் சன்மார்கந் தனிலன்றிக் கைகூடா
வங்கத் துடல்சித்த சாதன ராகுவ
ரிங்கிவ ராகவிழி வற்ற யோகமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தஙகிய சாரூபந தானெடடாம யொகமாந
தஙகுஞ சனமாரகந தனிலனறிக கைகூடா
வஙகத துடலசிதத சாதன ராகுவ
ரிஙகிவ ராகவிழி வறற யொகமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தங்கிய சாரூபம் தான் எட்டாம் யோகம் ஆம்
தங்கும் சன் மார்கம் தனில் அன்றி கை கூடா
அங்கத்து உடல் சித்த சாதனர் ஆகுவர்
இங்கு இவர் ஆக இழிவு அற்ற யோகமே.

பதப்பொருள்:

தங்கிய (நிலை பெற்ற) சாரூபம் (இறை உருவம் என்பது) தான் (சாதகர்கள்) எட்டாம் (அட்டாங்க யோகத்தில் எட்டாவது) யோகம் (யோகமாகிய) ஆம் (சமாதி நிலையில் கிடைப்பதாகும்)
தங்கும் (நிலை பெற்ற) சன் (உண்மை) மார்கம் (வழி முறையாக இருக்கின்ற) தனில் (இறைவனை அடைகின்ற ஞான வழிமுறை) அன்றி (அல்லாமல் வேறு எதனாலும்) கை (சாதகர்களுக்கு) கூடா (இந்த சமாதி நிலை கிடைக்காது)
அங்கத்து (இந்த சமாதி நிலையை அடைந்த சாதகர்களின் உறுப்புகள் இருக்கின்ற) உடல் (உடல் முழுவதும்) சித்த (சித்தமாகிய எண்ணத்தை இறைவனையே நினைத்துக் கொண்டு இருக்கின்ற) சாதனர் (சாதகராக) ஆகுவர் (ஆகி விடுவார்)
இங்கு (இதன் பயனால் இந்த உலகத்திலேயே) இவர் (இந்த சாதகர்) ஆக (தாமே) இழிவு (ஒரு குற்றமும்) அற்ற (இல்லாத தூய்மையான) யோகமே (யோகத்தின் வடிவமாக வீற்றிருப்பார்).

விளக்கம்:

நிலை பெற்ற இறை உருவம் என்பது சாதகர்கள் அட்டாங்க யோகத்தில் எட்டாவது யோகமாகிய சமாதி நிலையில் கிடைப்பதாகும். நிலை பெற்ற உண்மை வழி முறையாக இருக்கின்ற இறைவனை அடைகின்ற ஞான வழிமுறை அல்லாமல் வேறு எதனாலும் சாதகர்களுக்கு இந்த சமாதி நிலை கிடைக்காது. இந்த சமாதி நிலையை அடைந்த சாதகர்களின் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் இறைவனையே நினைத்து செயலாற்றிக் கொண்டு இருக்கின்ற சித்த நிலை பெற்ற சாதகராக ஆகி விடுவார். இதன் பயனால் இந்த உலகத்திலேயே இந்த சாதகர் தாமே ஒரு குற்றமும் இல்லாத தூய்மையான யோகத்தின் வடிவமாக வீற்றிருப்பார்.

பாடல் #1511

பாடல் #1511: ஐந்தாம் தந்திரம் – 15. சாரூபம் (இறைவன் இருக்கின்ற வடிவத்திலேயே இருந்து அவருக்கானதை ஏற்றுக் கொள்வது)

சயிலலோ கத்தினைச் சார்ந்த பொழுதே
தயிலம தாகுஞ் சராசரம் போலப்
பயிலுங் குருவின் பதிபுக்க போதே
கயிலை யிறைவன் கதிர்வடி வாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சயிலலொ கததினைச சாரநத பொழுதெ
தயிலம தாகுஞ சராசரம பொலப
பயிலுங குருவின பதிபுகக பொதெ
கயிலை யிறைவன கதிரவடி வாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சயில லோகத்தினை சார்ந்த பொழுதே
தயிலம் அது ஆகும் சராசரம் போல
பயிலும் குருவின் பதி புக்க போதே
கயிலை இறைவன் கதிர் வடிவு ஆமே.

பதப்பொருள்:

சயில (இறைவன் இருக்கின்ற தர்ம) லோகத்தினை (உலகத்தை) சார்ந்த (சாதகர் சார்ந்து) பொழுதே (இருக்கும் போதே)
தயிலம் (அங்கே வீற்றிருக்கின்ற இறைவனுக்கு சாந்து பூசியது போல சுற்றி இருக்கின்றது) அது (போலவே) ஆகும் (அங்கு புகுந்த சாதகரையும் சுற்றி இருக்கும் படி ஆகும்) சராசரம் (அண்டத்தில் இருக்கின்ற அனைத்து உலகங்களும்) போல (அது போலவே)
பயிலும் (சாதகர் தமக்கு கற்று கொடுக்கும் இறைவனை உணர்ந்த ஞான) குருவின் (குருவின்) பதி (இடத்திற்குள்) புக்க (நுழைந்த) போதே (போதே)
கயிலை (கயிலாய மலையில்) இறைவன் (வீற்றிருக்கின்ற இறைவனின்) கதிர் (ஒளி பொருந்திய) வடிவு (உருவமாகவே) ஆமே (சாதகரும் ஆகி விடுவார்).

விளக்கம்:

இறைவன் இருக்கின்ற தர்ம உலகத்தை சாதகர் சார்ந்து இருக்கும் போதே அங்கே வீற்றிருக்கின்ற இறைவனுக்கு சாந்து பூசியது போல அண்டத்தில் இருக்கின்ற அனைத்து உலகங்களும் சுற்றி இருக்கின்றது போலவே அங்கு புகுந்த சாதகரையும் சுற்றி இருக்கும் படி ஆகிவிடும். அது போலவே சாதகர் தமக்கு கற்று கொடுக்கும் இறைவனை உணர்ந்த ஞான குருவின் இடத்திற்குள் நுழைந்த போதே கயிலாய மலையில் வீற்றிருக்கின்ற இறைவனின் ஒளி பொருந்திய உருவமாகவே சாதகரும் ஆகி விடுவார்.