பாடல் #1427

பாடல் #1427: ஐந்தாம் தந்திரம் – 3. மார்க்க சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் மூன்றாவது)

பொன்னாற் சிவசாதனம் பூசி சாதனம்
நன்மார்க சாதன நலஞான சாதனந்
துன்மார்க சாதனந் தோன்றாத சாதனஞ்
சன்மார்க சாதன மாஞ்சுத்த சைவர்க்கே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பொனனாற சிவசாதனம பூசி சாதனம
நனமாரக சாதன நலஞான சாதனந
துனமாரக சாதனந தொனறாத சாதனஞ
சனமாரக சாதன மாஞசுதத சைவரககெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பொன்னால் சிவ சாதனம் பூசி சாதனம்
நன் மார்க்க சாதனம் நல ஞான சாதனம்
துன் மார்க்க சாதனம் தோன்றாத சாதனம்
சன் மார்க்க சாதனம் ஆம் சுத்த சைவர்க்கே.

பதப்பொருள்:

பொன்னால் (தங்கத்தால் கோர்த்து) சிவ (இறைவனது அம்சமாக இருக்கின்ற) சாதனம் (மணிகள் போன்ற கருவிகளும்) பூசி (நறுமணப் பொருட்களை பூசிக் கொண்டும்) சாதனம் (இவற்றை கருவியாக கொண்டு பூஜை செய்கின்ற)
நன் (நன்மையைக் கொடுக்கும்) மார்க்க (வழிமுறைக்கான) சாதனம் (கருவியாக இருப்பதே) நல (பலவிதமான நலங்களை) ஞான (அறிந்து கொள்ளுகின்ற ஞானத்தை கொடுக்கின்ற) சாதனம் (கருவியாகவும் இருக்கின்றது)
துன் (தீமையைக் கொடுக்கும்) மார்க்க (வழிமுறைக்கான) சாதனம் (கருவி எதுவும்) தோன்றாத (நன்மையின் நெறி வழியே செல்லுகின்ற சாதகருக்கு தடையாக உருவாகாமல் இருக்க) சாதனம் (உதவுகின்ற கருவியாக)
சன் (உண்மை / சத்தியத்தின்) மார்க்க (வழிமுறையாகிய) சாதனம் (கருவியே) ஆம் (இருக்கின்றது) சுத்த (இதுவே சுத்தமான) சைவர்க்கே (சைவ நெறியை கடைபிடிக்கும் சைவர்களுக்கு இறைவனை அடைவதற்கு செல்லுகின்ற வழிமுறைகளாகவும் அதற்கான சாதகத்தை செய்ய உதவுகின்ற கருவிகளாகவும் இருக்கின்றது).

விளக்கம்:

இறைவனது அம்சமாக இருக்கின்ற மணிகளை (உருத்திராட்சம், துளசிமணி, ஸ்படிகம் போன்றவற்றை) தங்கத்தால் கோர்த்து செய்து அணிந்து கொண்டும் இறையருளுக்கு கருவியாக இருக்கின்ற நறுமணப் பொருள்களை (விபூதி, குங்குமம், சந்தனம், செந்தூரம், நாமம் போன்றவற்றை) பூசிக் கொண்டும் இவற்றை கருவியாக கொண்டு பூஜை எனும் சாதகத்தை செய்கின்ற வழிமுறையானது நன்மையைக் கொடுக்கும் வழிமுறையாகும். இதற்கு கருவியாக இருக்கின்ற மணிகளும் பூசிக்கொள்ளும் நறுமணப் பொருட்களும் பலவிதமான நலங்களை அறிந்து கொள்ளுகின்ற ஞானத்தை கொடுக்கின்ற கருவியாகவும் இருக்கின்றன. தீமையைக் கொடுக்கும் வழிமுறைக்கான கருவி எதுவும் நன்மையின் நெறி வழியே செல்லுகின்ற சாதகருக்கு தடையாக உருவாகாமல் இருக்கவும் இந்த கருவிகள் உதவுகின்றன. இவை அனைத்தும் சத்தியத்தின் வழிமுறையை பின்பற்றி இறைவனை அடைவதற்கு சாதகம் செய்கின்ற சுத்த சைவர்களுக்கு உதவுகின்ற கருவிகளாக இருக்கின்றன.

பாடல் #1428

பாடல் #1428: ஐந்தாம் தந்திரம் – 3. மார்க்க சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் மூன்றாவது)

கேடறு ஞானி கிளர்ஞான பூபதி
பாடறு வேதாந்த சித்தாந்த பாதத்தி
னூடுறு ஞானோதைய னுண்மை முத்தியோன்
பாடுறு சுத்த சைவப்பத்த நித்தனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கெடறு ஞானி கிளரஞான பூபதி
பாடறு வெதாநத சிததாநத பாதததி
னூடுறு ஞானொதைய னுணமை முததியொன
பாடுறு சுதத சைவபபதத நிததனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கேடு அறு ஞானி கிளர் ஞான பூபதி
பாடு அறு வேத அந்தம் சித்த அந்தம் பாதத்தின்
ஊடு உறு ஞான உதய நுண்மை முத்தியோன்
பாடு உறு சுத்த சைவ பத்த நித்தனே.

பதப்பொருள்:

கேடு (தீயவற்றை) அறு (அறுக்கின்ற) ஞானி (ஞானியாகிய சாதகர்) கிளர் (கிளர்ந்து எழுகின்ற) ஞான (ஞானத்திற்கு) பூபதி (அதிபதியாகவும்)
பாடு (பாசமாகிய துன்பங்களை) அறு (அறுக்கின்ற) வேத (வேதங்களுக்கு) அந்தம் (எல்லையாகவும்) சித்த (சித்தங்களுக்கு) அந்தம் (எல்லையாகவும்) பாதத்தின் (இருக்கின்ற இறைவனின் திருவடிகளை)
ஊடு (தம்மை நாடி வரும் அடியவர்களின் மனதிற்குள்) உறு (புகுத்தி) ஞான (ஞானத்தை) உதய (உருவாக்குகின்ற) நுண்மை (நுட்பமான) முத்தியோன் (முக்தி நிலையில் இருப்பவராகவும்)
பாடு (பாசமாகிய துன்பத்தை) உறு (அனுபவித்தாலும் அதனால் சிறிதும் பாதிக்கப் படாமல்) சுத்த (சுத்தமான) சைவ (சைவ நெறிமுறையைக் கடைபிடித்து) பத்த (பக்தியிலேயே) நித்தனே (எப்போதும் நிற்பவராகவும் இருப்பார்).

விளக்கம்:

பாடல் #1427 இல் உள்ளபடி கருவிகளின் மூலம் சாதகம் செய்து தீயவற்றை அறுக்கின்ற ஞானியாகிய சாதகர் கிளர்ந்து எழுகின்ற ஞானத்திற்கு அதிபதியாகவும், பாசமாகிய துன்பங்களை அறுக்கின்ற வேதங்களுக்கு எல்லையாகவும் சித்தங்களுக்கு எல்லையாகவும் இருக்கின்ற இறைவனின் திருவடிகளை தம்மை நாடி வரும் அடியவர்களின் மனதிற்குள் புகுத்தி ஞானத்தை உருவாக்குகின்ற நுட்பமான முக்தி நிலையில் இருப்பவராகவும், பாசமாகிய துன்பத்தை அனுபவித்தாலும் அதனால் சிறிதும் பாதிக்கப் படாமல் சுத்தமான சைவ நெறிமுறையைக் கடைபிடித்து எப்போதும் பக்தியிலேயே நிலைத்து நிற்பவராகவும் இருப்பார்.

பாடல் #1423

பாடல் #1423: ஐந்தாம் தந்திரம் – 2. அசுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் இரண்டாவது)

இணையார் திருவடி யேத்துஞ் சீரங்கத்
திணையா ரிணைக்குழை யீரணை முத்திரை
குணமா ரிணைக்கண்ட மாலையுங் குன்றா
தணைவாஞ் சரியை கிரியையி னார்கே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இணையார திருவடி யெததுஞ சீரஙகத
திணையா ரிணைககுளை யீரணை முததிரை
குணமா ரிணைககணட மாலையுங குனறா
தணைவாஞ சரியை கிரிகையி னாரகெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இணை ஆர் திரு அடி ஏத்தும் சீர் அங்கத்து
இணை ஆர் இணை குழை ஈர் அணை முத்திரை
குணம் ஆர் இணை கண்ட மாலையும் குன்றாது
அணைவு ஆம் சரியை கிரியை இன் ஆர்க்கே.

பதப்பொருள்:

இணை (இறைவனுக்கு இணையாக) ஆர் (பேரழகு கொண்ட) திரு (மரியாதைக்கும் மேன்மைக்கும் உரிய) அடி (திருவடிகளை) ஏத்தும் (போற்றி வணங்கும் சாதகர்கள்) சீர் (சீரும் சிறப்புமாக ஒழுக்கத்துடன் பராமரிக்கும்) அங்கத்து (தமது உடலில்)
இணை (இறைவனுக்கு இணையாக) ஆர் (அழகாக இருக்கின்ற) இணை (இரண்டு) குழை (குண்டலங்களை தமது காதுகளில் அணிந்து கொண்டும்) ஈர் (இரண்டு விதமாக) அணை (இறைவனோடு எப்போதும் சேர்த்தே வைத்து இருக்கின்ற) முத்திரை (இறைவனது சின்னங்களாகிய நந்தியும் சூலமும் வைத்தும்)
குணம் (முறையான கயிற்றில்) ஆர் (அழகாக கோர்க்கப்பட்டு) இணை (இறைவனுக்கு இணையாக) கண்ட (கழுத்தில்) மாலையும் (ருத்திராட்ச மாலையை அணிந்து கொண்டும்) குன்றாது (இவை அனைத்தும் இறைவனுக்கு இணையாக இருக்கின்றது என்ற உறுதியான எண்ணத்தில் சிறிதளவும் குறைவு இல்லாமல்)
அணைவு (எப்போதும் தம்மோடு சேர்த்தே) ஆம் (வைத்துக் கொண்டு) சரியை (உடலால் பூஜித்தும்) கிரியை (உடலாலும் மனதாலும் வழிபட்டும்) இன் (இருக்கின்ற) ஆர்க்கே (சாதகர்களுக்கே).

விளக்கம்:

இறைவனுக்கு இணையாக பேரழகு கொண்ட மரியாதைக்கும் மேன்மைக்கும் உரிய திருவடிகளை போற்றி வணங்கும் சாதகர்கள் சீரும் சிறப்புமாக ஒழுக்கத்துடன் பராமரிக்கும் தமது உடலில் இறைவனுக்கு இணையாக அழகாக இருக்கின்ற இரண்டு குண்டலங்களை தமது காதுகளில் அணிந்து கொண்டும் இறைவனோடு எப்போதும் சேர்த்தே வைத்து இருக்கின்ற இறைவனது இரண்டு சின்னங்களாகிய நந்தியும் சூலமும் வைத்தும் முறையான கயிற்றில் அழகாக கோர்க்கப்பட்டு இறைவனுக்கு இணையாக இருக்கின்ற ருத்திராட்ச மாலையை கழுத்தில் அணிந்து கொண்டும் இவை அனைத்தும் இறைவனுக்கு இணையாக இருக்கின்றது என்ற உறுதியான எண்ணத்தில் சிறிதளவும் குறைவு இல்லாமல் எப்போதும் தம்மோடு சேர்த்தே வைத்துக் கொண்டு உடலால் பூஜித்தும் உடலாலும் மனதாலும் வழிபட்டும் இருக்கின்ற சாதகர்களே அசுத்த சைவமாகிய சரியை கிரியை ஆகிய இரண்டு வழிமுறைகளைப் பின்பற்றுகிறவர்கள் ஆவார்கள்.

பாடல் #1424

பாடல் #1424: ஐந்தாம் தந்திரம் – 2. அசுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் இரண்டாவது)

காதுபொன் னார்ந்த கடுக்க னிரண்டுசேர்த்
தோதுந் திருமேனி யுட்கட் டிரண்டுடன்
சோதனை செய்து துவாதெச மார்கரா
யோதி யிருப்பா ரொருசைவ ராமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

காதுபொன னாரநத கடுகக னிரணடுசெரத
தொதுந திருமெனி யுடகட டிரணடுடன
சொதனை செயது துவாதெச மாரகரா
யொதி யிருபபா ரொருசைவ ராமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

காது பொன் ஆர்ந்த கடுக்கன் இரண்டு சேர்த்து
ஓதும் திரு மேனி உள் கட்டு இரண்டு உடன்
சோதனை செய்து துவா தச மார்க்கர் ஆய்
ஓதி இருப்பார் ஒரு சைவர் ஆமே.

பதப்பொருள்:

காது (தனது காதுகளில்) பொன் (ஒளி வீசிப் பிரகாசிக்கும் தங்கத்தால்) ஆர்ந்த (அழகாக வார்க்கப்பட்ட) கடுக்கன் (கடுக்கன்கள்) இரண்டு (இரண்டையும்) சேர்த்து (காதோடு சேர்த்து அணிந்து கொண்டு)
ஓதும் (இறைவனது திருநாமத்தை ஓதுகின்ற) திரு (தமது மரியாதைக்கும் மேன்மைக்கும் உரிய) மேனி (உடலுக்கு) உள் (உள்ளே இறைவனது திருநாமத்தை ஓதுவதினால் உருவாகுகின்ற சக்திகளை) கட்டு (தம்மை சுற்றியே செயல் படுத்தும் பூனூல் மற்றும் அதை மேம்படுத்தி செயல் பட வைக்கும் ருத்திராட்சம்) இரண்டு (ஆகிய இரண்டு) உடன் (மாலைகளுடன் அணிந்து கொண்டு)
சோதனை (இவற்றின் செயல்பாடுகளை சோதனை) செய்து (செய்து கொண்டே) துவா (இரண்டும்) தச (பத்தும் ஆகிய மொத்தம் பன்னிரண்டு அங்குலம் [கழுத்துக்கு கீழே எட்டு அங்குலமும் கழுத்துக்கு மேலே நான்கு அங்குலம்]) மார்க்கர் (சுற்றிக் கொண்டு இருக்கின்ற மூச்சுக்காற்றை) ஆய் (ஆராய்ந்து)
ஓதி (அதனோடு சேர்ந்து அசபையாக மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே) இருப்பார் (இருப்பவர்களே) ஒரு (அசுத்த சைவம் வழிமுறையை கடைபிடிக்கும்) சைவர் (சைவர்கள்) ஆமே (ஆவார்கள்).

விளக்கம்:

தனது காதுகளில் ஒளி வீசிப் பிரகாசிக்கும் தங்கத்தால் அழகாக வார்க்கப்பட்ட கடுக்கன்கள் இரண்டையும் காதோடு சேர்த்து அணிந்து கொண்டு இறைவனது திருநாமத்தை ஓதுகின்ற தமது மரியாதைக்கும் மேன்மைக்கும் உரிய உடலுக்கு உள்ளே இறைவனது திருநாமத்தை ஓதுவதினால் உருவாகுகின்ற சக்திகளை தம்மை சுற்றியே செயல் படுத்தும் பூனூல் மற்றும் அதை மேம்படுத்தி செயல் பட வைக்கும் ருத்திராட்சம் ஆகிய இரண்டு மாலைகளையும் அணிந்து கொண்டு இவற்றின் செயல்பாடுகளை சோதனை செய்து கொண்டே பாடல் #457 இல் உள்ளபடி கழுத்துக்கு கீழே எட்டு அங்குலமும் கழுத்துக்கு மேலே நான்கு அங்குலம் சுற்றிக் கொண்டு இருக்கின்ற மூச்சுக்காற்றுடன் சேர்ந்து அசபையாக மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே அது சரியாக இயங்குகின்றதா என்பதை ஆராயந்து செயல் படுத்துபவர்களே அசுத்த சைவம் வழிமுறையை கடைபிடிக்கும் சைவர்கள் ஆவார்கள்.

பாடல் #1425

பாடல் #1425: ஐந்தாம் தந்திரம் – 2. அசுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் இரண்டாவது)

கண்டங்க ளொன்பதுங் கண்டவர் கண்டனர்
கண்டங்க ளொன்பதுங் கண்டா யரும்பொருள்
கண்டங்க ளொன்பதுங் கண்டவக் கண்டமாங்
கண்டங்கள் கண்டோர் கடுஞ்சுத்த சைவரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கணடஙக ளொனபதுங கணடவர கணடனர
கணடஙக ளொனபதுங கணடா யருமபொருள
கணடஙக ளொனபதுங கணடவக கணடமாங
கணடஙகள கணடொர கடுஞசுதத சைவரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கண்டங்கள் ஒன்பதும் கண்டு அவர் கண்டனர்
கண்டங்கள் ஒன்பதும் கண்டு ஆய் அரும் பொருள்
கண்டங்கள் ஒன்பதும் கண்டு அவ கண்டம் ஆம்
கண்டங்கள் கண்டோர் கடும் சுத்த சைவரே.

பதப்பொருள்:

கண்டங்கள் (தமக்குள்ளும் தம்மைத் தாண்டியும் இருக்கின்ற சக்தி மயங்கள்) ஒன்பதும் (ஒன்பதையும் [1. மூலாதாரம் 2. சுவாதிஷ்டானம் 3. மணிப்பூரகம் 4. அநாகதம் 5. விசுத்தி 6. ஆக்ஞா 7. சகஸ்ரதளம் 8. துவாதசாந்த வெளி 9. பரவெளி]) கண்டு (கண்டு) அவர் (உணர்ந்து கொண்டவர்களே) கண்டனர் (உண்மையான சக்தி மயங்களை தரிசித்தவர்கள் ஆவார்கள்)
கண்டங்கள் (தமக்குள்ளும் தம்மைத் தாண்டியும் இருக்கின்ற சக்தி மயங்கள்) ஒன்பதும் (ஒன்பதையும்) கண்டு (கண்டு உணர்ந்தவர்கள்) ஆய் (அந்த சக்தி மயங்களே) அரும் (கிடைப்பதற்கு மிகவும் அரிய) பொருள் (பரம்பொருளான இறையாக இருப்பதை அறிந்து கொள்வார்கள்)
கண்டங்கள் (தமக்குள்ளும் தம்மைத் தாண்டியும் இருக்கின்ற சக்தி மயங்கள்) ஒன்பதும் (ஒன்பதையும்) கண்டு (கண்டு உணர்ந்தவர்கள்) அவ (அந்த சக்தி மயங்களாக இருக்கும்) கண்டம் (இறை சக்தியே தாமாகவும்) ஆம் (ஆகி இருப்பதை உணர்ந்து கொள்வார்கள்)
கண்டங்கள் (தமக்குள்ளும் தம்மைத் தாண்டியும் இருக்கின்ற சக்தி மயங்கள்) கண்டோர் (ஒன்பதாகவும் இருக்கின்ற இறையை தரிசித்த சாதகர்களே) கடும் (கடுமையான) சுத்த (சுத்த நெறியை இந்த உலகிலேயே பின்பற்றும்) சைவரே (அசுத்த சைவர்கள் ஆவார்கள்).

விளக்கம்:

பாடல் #867 இல் உள்ளபடி தமக்குள்ளும் தம்மைத் தாண்டியும் இருக்கின்ற 1. மூலாதாரம் 2. சுவாதிஷ்டானம் 3. மணிப்பூரகம் 4. அநாகதம் 5. விசுத்தி 6. ஆக்ஞா 7. சகஸ்ரதளம் 8. துவாதசாந்த வெளி 9. பரவெளி எனும் சந்திர மண்டலம் ஆகிய ஒன்பது சக்தி மயங்களையும் பாடல் #1424 இல் உள்ள பயிற்சியின் படி சாதகம் செய்து கண்டு உணர்ந்து கொண்டவர்களே உண்மையான சக்தி மயங்களை தரிசித்தவர்கள் ஆவார்கள். இவற்றை கண்டு உணர்ந்து கொண்ட சாதகர்கள் அந்த சக்தி மயங்களே கிடைப்பதற்கு மிகவும் அரிய பரம்பொருளான இறையாக இருப்பதை அறிந்து கொள்வார்கள். அதன் பிறகு சாதகத்தை தொடர்ந்து செய்து அந்த சக்தி மயங்களாக இருக்கின்ற இறை சக்தியே தாமாகவும் ஆகி இருப்பதை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள். இப்படி ஒன்பது சக்தி மயங்களாக இருக்கின்ற இறையை தரிசித்த சாதகர்களே கடுமையான சுத்த நெறியை இந்த உலகிலேயே பின்பற்றும் அசுத்த சைவர்கள் ஆவார்கள்.

பாடல் #1426

பாடல் #1426: ஐந்தாம் தந்திரம் – 2. அசுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் இரண்டாவது)

ஞானி புவியெழு நன்னூ லனைத்துடன்
மோன திசையு முழுவெண்ணெண் சித்தியு
மேனை நிலமு மெழுதா மறையீறுங்
கோனொடு தன்னையுங் காணுங் குணத்தனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஞானி புவியெழு நனனூ லனைததுடன
மொன திசையு முழுவெணணெண சிததியு
மெனை நிலமு மெழுதா மறையீறுங
கொனொடு தனனையுங காணுங குணததனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஞானி புவி எழு நன் நூல் அனைத்துடன்
மோன திசையும் முழு எண் எண் சித்தியும்
ஏனை நிலமும் எழுதா மறை ஈறும்
கோன் ஓடு தன்னையும் காணும் குணத்தனே.

பதப்பொருள்:

ஞானி (ஞானியாகிய சாதகர்) புவி (உலகத்திலுள்ள உயிர்கள்) எழு (எழுச்சி பெற) நன் (நன்மையை தருகின்ற) நூல் (நூல்கள்) அனைத்துடன் (அனைத்தையும் அறிந்து கொள்பவராகவும்)
மோன (பேச்சும் அசைவும் இல்லாத மோன நிலையில் இருந்தாலும்) திசையும் (அனைத்து திசைகளிலும் நிகழும் அனைத்தையும் அறிந்தவராகவும்) முழு (தமது முழு) எண் (எண்ணத்திலும் இறைவனை வைத்து) எண் (எட்டு விதமான) சித்தியும் (சித்திகளையும் பெற்றவராகவும்)
ஏனை (இந்த உலகம் தாண்டி இருக்கின்ற) நிலமும் (அனைத்து உலகங்களிலுள்ள உயிர்களும்) எழுதா (அடைய வேண்டிய இறைவனை வெளிப்படையாக எழுதாமல் உட்பொருளாக) மறை (மறைத்து வைத்து இருக்கும் வேதங்களையும்) ஈறும் (அதன் எல்லையாக இருக்கின்ற இறைவனையும் உணர்ந்தவராகவும்)
கோன் (அனைத்தையும் ஆளுகின்ற அரசனாக இருக்கின்ற) ஓடு (இறைவனோடு) தன்னையும் (தன்னையும்) காணும் (சரிசமமாக பாவிக்கும்) குணத்தனே (குணத்தை கொண்டவராகவும் இருப்பார்).

விளக்கம்:

பாடல் #1425 இல் உள்ளபடி சக்தி மயங்களாகிய இறையை இந்த உலகிலேயே உணர்ந்து கொண்ட ஞானியாகிய சாதகர் உலகத்திலுள்ள உயிர்கள் எழுச்சி பெற நன்மையை தருகின்ற நூல்கள் அனைத்தையும் அறிந்து கொள்பவராகவும் பேச்சும் அசைவும் இல்லாத மோன நிலையில் இருந்தாலும் அனைத்து திசைகளிலும் நிகழும் அனைத்தையும் அறிந்தவராகவும் தமது எண்ணம் முழுவதிலும் இறைவனையே வைத்து எட்டு விதமான சித்திகளையும் பெற்றவராகவும் இந்த உலகம் தாண்டி இருக்கின்ற அனைத்து உலகங்களிலுள்ள உயிர்களும் அடைய வேண்டிய இறைவனை வெளிப்படையாக எழுதாமல் உட்பொருளாக மறைத்து வைத்து இருக்கும் வேதங்களையும் அதன் எல்லையாக இருக்கின்ற இறைவனையும் உணர்ந்தவராகவும் அனைத்தையும் ஆளுகின்ற அரசனாக இருக்கின்ற இறைவனோடு தன்னையும் சரிசமமாக பாவிக்கும் குணத்தை கொண்டவராகவும் இருப்பார்.

பாடல் #1419

பாடல் #1419: ஐந்தாம் தந்திரம் – 1. சுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் முதலாவது)

ஊரு முலகமு மொக்கப் பணைக்கின்ற
பேரறி வாளன் பெருமை குறித்திடில்
மேருவு மூவுல காளியிலங் கெழுந்
தாரணி நால்வகைச் சைவமு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஊரு முலகமு மொககப பணைககினற
பெரறி வாழன பெருமை குறிததிடில
மெருவு மூவுல காழியிலங கெழுந
தாரணி நாலவகைச சைவமு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஊரும் உலகமும் ஒக்க பணைக்கின்ற
பேர் அறிவாளன் பெருமை குறித்திடில்
மேருவும் மூ உலகு ஆளி இலங்கு எழும்
தாரணி நால் வகை சைவமும் ஆமே.

பதப்பொருள்:

ஊரும் (அனைத்து உயிர்களையும்) உலகமும் (அவை இருக்கின்ற உலகத்தையும்) ஒக்க (ஒன்றாக) பணைக்கின்ற (கலந்து நின்று இயக்குகின்ற)
பேர் (பேரறிவு) அறிவாளன் (ஞானமாக இருக்கின்ற இறைவனின்) பெருமை (பெருமைகளை) குறித்திடில் (குறித்து சொல்லப் போனால்)
மேருவும் (அனைத்து சக்திகளின் ஒன்றியமாகிய மேரு மலையயும்) மூ (மேலோகம், பூலோகம், பாதாள லோகம் ஆகிய முன்று) உலகு (உலகங்களையும்) ஆளி (ஆளுகின்ற இறைவனை) இலங்கு (தெளிவாகப் புரிந்து கொள்ளும் படி) எழும் (அவனிடமிருந்தே வெளிவந்து)
தாரணி (அவனை அறிவதற்கு முயலுகின்ற அடியவர்களுக்கு ஆதார இடமாக இருக்கின்ற) நால் (நான்கு) வகை (வகையான நெறிமுறைகளே) சைவமும் (சைவம்) ஆமே (என்று அழைக்கப்படும் பெருமைக்கு உரியதாகும்).

விளக்கம்:

அனைத்து உயிர்களையும் அவை இருக்கின்ற உலகத்தையும் ஒன்றாக கலந்து நின்று இயக்குகின்ற பேரறிவு ஞானமாக இருக்கின்ற இறைவனின் பெருமைகளை குறித்து சொல்லப் போனால் அனைத்து சக்திகளின் மொத்த உருவமாகிய மேரு மலையயும் மேலோகம் பூலோகம் பாதாள லோகம் ஆகிய முன்று உலகங்களையும் ஆளுகின்ற இறைவனை தெளிவாகப் புரிந்து கொள்ளும் படி அவனிடமிருந்தே வெளிவந்து அவனை அறிவதற்கு முயலுகின்ற அடியவர்களுக்கு ஆதார இடமாக இருக்கின்ற நான்கு வகையான நெறிமுறைகளே சைவம் என்று அழைக்கப்படும் பெருமைக்கு உரியதாகும்.

குறிப்பு: இறைவனை உணர்ந்து அடைவதற்கு அவனால் அருளப்பட்ட நான்கு விதமான நெறிமுறைகளே சைவம் ஆகும். அந்த சைவ நெறிமுறைகளை அறிந்து கொண்டவர்கள் சைவர்கள் ஆவார்கள்.

பாடல் #1420

பாடல் #1420: ஐந்தாம் தந்திரம் – 1. சுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் முதலாவது)

சத்து மசத்துஞ் சதசத்துந் தான்கண்டுஞ்
சித்து மசித்தையுஞ் சேர்வுறாமே நீத்துஞ்
சுத்த மசுத்தமுந் தோய்வுறாமே நின்று
நித்தம் பரசுத்த சைவர்க்கு நேயமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சதது மசததுஞ சதசததுந தானகணடுஞ
சிதது மசிததையுஞ செரவுறாமெ நீததுஞ
சுதத மசுததமுந தொயவுறாமெ நினறு
நிததம பரசுதத சைவரககு நெயமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சத்தும் அசத்தும் சத சத்தும் தான் கண்டும்
சித்தும் அசித்தையும் சேர்வு உறாமே நீத்தும்
சுத்தம் அசுத்தமும் தோய்வு உறாமே நின்று
நித்தம் பர சுத்த சைவர்க்கு நேயமே.

பதப்பொருள்:

சத்தும் (நிலையானதாகிய சிவமும்) அசத்தும் (நிலையில்லாததாகிய உடலும்) சத (நிலையில்லாத உடலுக்குள்) சத்தும் (நிலையாக நிற்கின்ற ஆன்மாவும்) தான் (ஆகிய இவை மூன்றையும்) கண்டும் (கண்டு உணர்ந்தும்)
சித்தும் (உலக அறிவும்) அசித்தையும் (அறியாமையும்) சேர்வு (சேர்ந்து) உறாமே (கலந்து விடாமல்) நீத்தும் (அதிலிருந்து விலகி இருந்தும்)
சுத்தம் (சுத்த மாயை) அசுத்தமும் (அசுத்த மாயை) தோய்வு (ஆகிய இரண்டிலும் மயங்கி) உறாமே (இல்லாமல்) நின்று (உண்மை ஞானத்தில் நின்றும்)
நித்தம் (எப்பொழுதும்) பர (பரம்பொருளாகிய இறைவனின்) சுத்த (அதி சுத்த நிலையில் இருப்பதே) சைவர்க்கு (சைவர்களின்) நேயமே (பேரன்பு ஆகும்).

விளக்கம்:

நிலையானதாகிய சிவமும் நிலையில்லாததாகிய உடலும் நிலையில்லாத உடலுக்குள் நிலையாக நிற்கின்ற ஆன்மாவும் ஆகிய இவை மூன்றையும் கண்டு உணர்ந்தும், உலக அறிவும் அறியாமையும் சேர்ந்து விடாமல் அதிலிருந்து விலகி இருந்தும், சுத்த மாயை அசுத்த மாயை ஆகிய இரண்டிலும் மயங்கி விடாமல் உண்மை ஞானத்தில் நின்றும், எப்பொழுதும் பரம்பொருளாகிய இறைவனின் அதி சுத்த நிலையில் இருப்பதே சைவர்களின் பேரன்பு ஆகும்.

குறிப்பு: சைவ நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றி சடங்குகளில் சிக்கிக் கொள்ளாமல் சம்பிரதாயங்களைக் கடந்து இறைவனிடம் அன்பு செலுத்துபவர்களே சுத்த சைவர்கள் ஆவார்கள்.

பாடல் #1421

பாடல் #1421: ஐந்தாம் தந்திரம் – 1. சுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் முதலாவது)

கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோக
முற்பத ஞான முறைமுறை நண்ணியே
சொற்பத மேவித் துரிசற்று மேலான
தற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கறபன கறறுக கலைமனனு மெயயொக
முறபத ஞான முறைமுறை நணணியெ
சொறபத மெவித துரிசறறு மெலான
தறபரங கணடுளொர சைவசித தாந்தரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கற்பன கற்று கலை மன்னும் மெய் யோகம்
முற் பதம் ஞான முறை முறை நண்ணியே
சொற் பதம் மேவி துரிசு அற்று மேலான
தற் பரம் கண்டு உளோர் சைவ சித்தாந்தரே.

பதப்பொருள்:

கற்பன (இறைவனை அடைய வேண்டியதற்கு கற்க வேண்டிய கல்விகள்) கற்று (அனைத்தையும் கற்றுக் கொண்டு) கலை (அதன் மூலம் பெற்ற கலை அறிவின்) மன்னும் (மிகவும் உன்னதமான உச்ச நிலையில்) மெய் (உண்மையான) யோகம் (யோகத்தை அறிந்து கொண்டு)
முற் (அந்த அறிவிற்கு முதல் மூல) பதம் (தன்மையாக இருக்கின்ற) ஞான (ஞானத்தை) முறை (அடைய வேண்டிய முறைகளை அறிந்து கொண்டு) முறை (அந்த முறைகளை முறைப்படி) நண்ணியே (கடைபிடித்து அதன் மூலம் அந்த ஞானத்தை பெற்றுக் கொண்டு)
சொற் (தாம் சொல்லுகின்ற வாக்கில்) பதம் (சத்தியத்தின் தன்மையை) மேவி (கடைபிடித்து) துரிசு (தம்மிடம் இருக்கும் அழுக்குகளான மும்மலங்களும்) அற்று (நீங்கப் பெற்று) மேலான (அனைத்திற்கும் மேலாக)
தற் (தானாகவே இருக்கின்ற) பரம் (பரம்பொருளை) கண்டு (தரிசித்து) உளோர் (அதை தமக்குள்ளேயே உணர்ந்து இருப்பவர்களே) சைவ (சைவத்தின்) சித்தாந்தரே (சித்தாந்தத்தை கடைபிடிக்கின்ற சைவ சிந்தாந்தர்கள் ஆவார்கள்).

விளக்கம்:

இறைவனை அடைய வேண்டியதற்கு கற்க வேண்டிய கல்விகள் அனைத்தையும் கற்றுக் கொண்டு அதன் மூலம் பெற்ற கலை அறிவின் மிகவும் உன்னதமான உச்ச நிலையில் உண்மையான யோகத்தை அறிந்து கொண்டு அந்த அறிவிற்கு முதல் மூல தன்மையாக இருக்கின்ற ஞானத்தை அடைய வேண்டிய முறைகளை அறிந்து கொண்டு அந்த முறைகளை முறைப்படி கடைபிடித்து அதன் மூலம் அந்த ஞானத்தை பெற்றுக் கொண்டு தாம் சொல்லுகின்ற வாக்கில் சத்தியத்தின் தன்மையை கடைபிடித்து தம்மிடம் இருக்கும் அழுக்குகளான மும்மலங்களும் நீங்கப் பெற்று அனைத்திற்கும் மேலாக தானாகவே இருக்கின்ற பரம்பொருளை தரிசித்து அதை தமக்குள்ளேயே உணர்ந்து இருப்பவர்களே சைவ சிந்தாந்தர்கள் ஆவார்கள்.

குறிப்பு: சைவ நெறிமுறைகளின் மூலம் இறைவனை அடைந்தவர்களே சைவ சிந்தாந்தர்கள் ஆவார்கள்.

பாடல் #1422

பாடல் #1422: ஐந்தாம் தந்திரம் – 1. சுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் முதலாவது

வேதாந்தஞ் சுத்தம் விளங்கிய சித்தாந்தம்
நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற காட்சியோர்
பூதாந்த போதாந்த மாகப் புனஞ்செய்ய
நாதாந்த பூரண ஞானநே யத்தரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வெதாநதஞ சுததம விளஙகிய சிததாநதம
நாதாநதங கணடொர நடுககறற காடசியொர
பூதாநத பொதாநத மாகப புனஞசெயய
நாதாநத பூரண ஞானநெ யததரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வேத அந்தம் சுத்தம் விளங்கிய சித்த அந்தம்
நாத அந்தம் கண்டோர் நடுக்கு அற்ற காட்சியோர்
பூத அந்தம் போத அந்தம் ஆக புனம் செய்ய
நாத அந்தம் பூரணம் ஞான நேயத்தரே.

பதப்பொருள்:

வேத (வேதங்களின்) அந்தம் (எல்லையாக இருக்கின்றவனை) சுத்தம் (மும்மலங்களும் நீங்கிய பரிசுத்தமான நிலையில்) விளங்கிய (விளங்குகின்ற) சித்த (எண்ணங்களின்) அந்தம் (எல்லையாக இருக்கின்றவனை)
நாத (நாதத்தின்) அந்தம் (எல்லையாக இருக்கின்றவனை) கண்டோர் (கண்டு தரிசித்தவர்கள்) நடுக்கு (அசைகின்ற எண்ணங்கள்) அற்ற (இல்லாமல்) காட்சியோர் (எப்போதும் தரிசித்துக் கொண்டே இருக்கின்றவர்கள்)
பூத (ஐந்து பூதங்களுக்கும்) அந்தம் (எல்லையாக இருக்கின்றவனை) போத (கற்றுக் கொடுக்கின்ற அனைத்து ஞானத்திற்கும்) அந்தம் (எல்லையாக இருக்கின்ற) ஆக (இறைவனாகவே ஆகுகின்ற) புனம் (பக்குவத்தை) செய்ய (பெறுவதற்கான செயல்களை செய்து)
நாத (நாதத்தின்) அந்தம் (எல்லையாக இருக்கின்ற இறைவனை) பூரணம் (பரிபூரணமாக உணர்ந்து கொள்பவர்களே) ஞான (பேரறிவு ஞானமாகவும்) நேயத்தரே (பேரன்பாகவும் ஒன்றாக கலந்து இருப்பவர்கள் ஆவார்கள்).

விளக்கம்:

வேதங்களின் எல்லையாக இருக்கின்றவனும் மும்மலங்களும் நீங்கிய பரிசுத்தமான நிலையில் விளங்குகின்ற எண்ணங்களின் எல்லையாக இருக்கின்றவனும் நாதத்தின் எல்லையாக இருக்கின்றவனும் ஆகிய இறைவனை கண்டு தரிசித்தவர்கள் அசைகின்ற எண்ணங்கள் இல்லாமல் எப்போதும் தரிசித்துக் கொண்டே இருக்கின்றவர்கள். ஐந்து பூதங்களுக்கும் எல்லையாக இருக்கின்றவனும் கற்றுக் கொடுக்கின்ற அனைத்து ஞானத்திற்கும் எல்லையாக இருக்கின்றவனும் ஆகிய இறைவனாகவே ஆகுகின்ற பக்குவத்தை பெறுவதற்கான செயல்களை செய்து நாதத்தின் எல்லையாக இருக்கின்ற இறைவனை பரிபூரணமாக உணர்ந்து கொள்பவர்களே பேரறிவு ஞானமாகவும் பேரன்பாகவும் ஒன்றாக கலந்து இருப்பவர்கள் ஆவார்கள்.

குறிப்பு: இறைவனை அடைந்து அவனது பேரறிவு ஞானமாகவும் பேரன்பாகவும் ஒன்றாக கலந்து இருப்பவர்களே ஞான நேயத்தர்கள் ஆவார்கள்.