பாடல் #1125

பாடல் #1125: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

அளந்தே னகலிடத் தந்தமு மீறும்
அளந்தே னகலிடத் தாதிப் பிரானை
அளந்தே னகலிடத் தாணொடு பெண்ணும்
அளந்தே னவனரு ளாய்ந்துணர்ந் தேனே.

விளக்கம்:

இந்த விரிந்து பரந்த உலகத்தின் முடிவாகவும் ஆன்மாக்களின் முடிவாகவும் உலகத்தின் ஆரம்பமாகவும் உலகத்திலுள்ள அனைத்து உயிர்களில் ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கின்ற இறைவனை எங்கெல்லாமோ அலைந்து தேடினோம். பின்பு அவனருளால் எமக்குள்ளேயே ஆராய்ந்து பரிபூரணமாக இருக்கும் அந்த சிவசக்தியை முழுவதுமாக உணர்ந்து கொண்டோம்.

பாடல் #1126

பாடல் #1126: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

உணர்ந்தில ரீசனை யூழிசெய் சக்தி
புணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள்
கணங்களைத் தன்னருள் செய்கின்ற கன்னி
கொணர்ந்த வழிகொண்டு கும்பக மாமே.

விளக்கம்:

பாடல் #1125 இல் உள்ளபடி யாம் உணர்ந்து கொண்ட இறைவனையும் பேரூழிக் காலத்தில் அனைத்தையும் அழிக்கின்ற சக்தியாக இருக்கின்ற இறைவி அவனோடு சேர்ந்து இருப்பதே பரிபூரணமான நிலை என்பதையும் யாரும் உணர்ந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள். இறைவனை அறிந்து கொண்ட அடியார்களுக்கு அருள் புரிகின்ற இறைவியானவள் இறைவனை அடையும் பூர்வ ஜென்ம புண்ணியம் பெற்றவர்களுக்கு உள்ளே குருவாக இருந்து அவரவர்களுக்கு ஏற்ற விதத்தில் அருளிய வழிமுறைகளை மேற்கொண்டு அதன் படியே கடைபிடித்து வருபவர்களின் உள்ளே இறைவன் வந்து வீற்றிருப்பான்.

பாடல் #1127

பாடல் #1127: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

கும்பக் களிறைந்துங் கோலொடு பாகனும்
வம்பிற் றிகழு மணிமுடி வண்ணனும்
இன்பக் கலவி யினிதுறை தையலும்
அன்பிற் கலவியு ளாயொழிந் தாரே.

விளக்கம்:

பாடல் #1126 இல் உள்ளபடி அடியவர்களின் உள்ளுக்குள் வந்து வீற்றிருக்கின்ற இறைவன் அவர்களின் ஐந்து புலன்களையும் அவர்களின் மனமாகிய கோலின் மூலம் ஆன்மாவாகிய பாகனைக் கொண்டு அடக்கி ஆளுகின்றான். குற்றம் குறையில்லாமல் பிரகாசிக்கும் நவரத்தினங்களால் ஆன கிரீடத்தை அணிந்து கொண்டு பிரகாசிக்கும் ஒளி வண்ணத்தில் திருமேனியை உடைய இறைவனும் அவனோடு பேரின்பத்தில் கலந்து இனிமையாக பின்னிப் பிணைந்து வீற்றிருக்கின்ற இறைவியும் உண்மையான அன்போடு இறைவனை நேசிக்கின்ற அடியவர்களின் உள்ளுக்குள் வந்து ஒன்றாக வீற்றிருப்பார்கள்.

கருத்து: அடியவர்களின் உள்ளுக்குள் வந்து வீற்றிருந்த இறைவன் அவர்களின் ஐந்து புலன்களையும் அவர்களின் மனதால் அடக்கி அவர்களின் ஆன்மாவை அன்பினால் பேரின்பத்தில் பின்னிப் பிணைத்து வீற்றிருக்கின்றான்.

பாடல் #1128

பாடல் #1128: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

இன்பக் கலவியி லிட்டெழு கின்றதோர்
அன்பிற் புகவல்ல னாமெங்க ளப்பனுந்
துன்பக் குழம்பிற் துயருறு பாசத்துள்
என்பிற் பராசக்தி யென்னம்மை தானே.

விளக்கம்:

பாடல் #1127 இல் உள்ளபடி உன்மையான அன்போடு நேசிக்கின்ற அடியவர்களின் உள்ளுக்குள் வந்து வீற்றிருக்கின்ற இறைவன் அவர்களை பேரின்பத்தில் ஆழ்த்தி இருக்கும்படி செய்து அதிலிருந்து வெளிப்படுகின்ற தூய்மையான அன்பில் வீற்றிருந்து ஆருயிர்களின் தந்தையாக இருக்கின்றார். அடியவர்கள் இந்த உலகத்தில் ஆசையினாலும் பாசத்தினாலும் எடுத்த பிறவியில் அனுபவிக்கின்ற துன்பங்களைத் தாங்குகின்ற அன்பை அருளுகின்றவளாக பரம்பொருளாகிய இறைவியும் அவர்களுக்குள் புகுந்து வீற்றிருந்து ஆருயிர்களின் தாயாக இருக்கின்றாள்.

கருத்து:

அடியவர்களின் உள்ளுக்குள் பூரண சக்தியாக இருக்கும் சிவசக்தி அம்மையும் அப்பனுமாக சேர்ந்தே வீற்றிருக்கின்றார்கள். உயிர்கள் துன்பத்தை அனுபவிக்கும் போது அதை தாங்கிக் கொள்கின்ற பக்குவத்தை அன்பாக அம்மை அருளுகின்றாள். துன்பத்தை அனுபவித்துக் கழித்த உயிர்கள் இறைவனை நினைத்து உருகி கிடைக்கும் பேரின்பத்தை அனுபவிக்கும் போது அதிலிருந்து வெளிப்படுகின்ற தூய்மையான அன்பாக அப்பன் வீற்றிருக்கின்றார்.

பாடல் #1129

பாடல் #1129: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

என்னம்மை யென்னப்ப னென்னுஞ் செருக்கற்று
உன்னம்மை யூழித் தலைவனு மங்குளன்
மன்னம்மை யாகி மருவி யுரைசெய்யும்
பின்னம்மை யாய்நின்ற பேர்நந்தி தானே.

விளக்கம்:

எமது அம்மையாகவும் அப்பனாகவும் இறைவியும் இறைவனுமே இருக்கின்றார்கள் என்கிற பெருமையான எண்ணங்களை நீக்கிவிட்டு எவர் ஒருவர் இறைவியை நினைத்து தியானிக்கின்றார்களோ அவர்களின் உள்ளுக்குள் தாயாக வந்து வீற்றிருக்கும் இறைவியோடு பேரூழிக்காலத்தின் தலைவனாகிய இறைவனும் வந்து உடன் வீற்றிருக்கின்றான். இறைவியை நினைப்பவர்களின் மனமே இறைவியாகி அவர்களின் உலகம் சார்ந்த மாய சிந்தனைகளை மாற்றி உண்மையை சொல்லி அருளுகின்றாள். பிறகு அந்த அம்மையே இறைவனோடு சேர்ந்து நின்று குருவாக இருந்து வழிகாட்டுகின்றாள்.

பாடல் #1130

பாடல் #1130: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

தார்மே லுறைகின்ற தண்மலர் நான்முகன்
பார்மே லிருப்ப தொருநூறு தானுள
பூமே லுறைகின்ற போதகம் வந்தனள்
நாமே லுறைகின்ற நாயகி ஆணையே.

விளக்கம்:

தண்டின் மேல் வளர்ந்து விரிந்து இருக்கும் குளிர்ந்த தாமரை மலரின் மேல் வீற்றிருக்கும் நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மன் உலகத்தில் வந்து பிறவி எடுக்க வேண்டி உயிர்களுக்கு அந்தந்த யுகங்களுக்கு ஏற்ப ஆயுளைக் கொடுத்து படைக்கின்றான். வெள்ளைத் தாமரை மலரின் மேல் வீற்றிருக்கின்ற சரஸ்வதி தேவியும் அவனோடு சேர்ந்து வந்து உயிர்களுக்கு ஞானத்தை அருளுகின்றாள். ஞானத்தின் தலைவியாக உயிர்களின் நாக்கின் மேல் அமர்ந்த சரஸ்வதி தேவி அருளிய அனைத்தும் ஆணையாக இருக்கின்றது.

குறிப்பு: பிரம்மன் தன்னுடைய தேவியாகிய சரஸ்வதியுடன் பூரண சக்தியாக சேர்ந்து இருந்து உயிர்களுக்கு ஞானத்தை அருளுவதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம்.

பாடல் #1131

பாடல் #1131: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

ஆணைய மாயருந் தாதுள் ளிருந்தவர்
மாணைய மாய மனத்தை யொருக்கிப்பின்
பாணைய மாய பரத்தை யறிந்தபின்
தாணைய மாயதன் னாதனத் தானே.

விளக்கம்:

பாடல் #1130 இல் உள்ளபடி இறைவனை அடைவதற்கு வேண்டிய ஞானத்தை ஆணையாக இறைவி அருளிய படியே இன்ப துன்பங்களை அனுபவிக்காமல் உள்ளுக்குள் இறைவியை தியானித்துக் கொண்டே இருக்கின்ற அடியவர்களின் மாயையால் மயங்கி ஆசையின் வழியே செல்கின்ற மனதை அடக்கி ஒருமுகப்படுத்தி அனைத்திற்கும் மேலான பரம்பொருளாகிய இறைவனை அவர்களுக்குள் அறிந்து உணர்ந்து கொள்ளும்படி இறைவி அருளுகின்றாள். அவ்வாறு பரம்பொருளை அறிந்து கொண்ட அடியவர்களின் உள்ளத்தையே தமக்கு மிகவும் பிடித்த ஆசனமாக எடுத்துக் கொண்டு இறைவனும் வந்து வீற்றிருப்பான்.

பாடல் #1132

பாடல் #1132: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

தானே யெழுந்தஇத் தத்துவ நாயகி
வானே ரெழுந்து மதியை விளக்கினள்
தேனே ரெழுகின்ற தீபத் தொளியுடன்
மானே நடமுடை மன்றுஅறி யீரே.

விளக்கம்:

பாடல் #1131 இல் உள்ளபடி அடியவர்களின் உள்ளத்திற்குள் இறைவனோடு ஒன்றாக வீற்றிருக்கும் அனைத்து தத்துவங்களின் தலைவியான இறைவி சிதகாய மண்டலமாகிய சித்தத்திற்குள் (சிந்தனை) இருந்து குண்டலினியை மேலேற்றும் ஞானத்தை விளக்கி அருளுகின்றாள். அதன் படியே சாதகம் செய்து தங்களின் மூலாதாரத்தில் இருந்து குண்டலினி சக்தியை எழுப்பி அதனோடு சேர்ந்து கிடைக்கும் பேரின்பத்தை அனுபவித்துக் கொண்டே இருந்தால் அது மெதுவாக அசைந்து ஒவ்வொரு சக்கரமாக ஏற்றிச் சென்று தலை உச்சியில் இருக்கும் சகஸ்ரதளத்தில் ஜோதியாக வீற்றிருக்கும் இறைவனோடு கலந்த பிறகு அங்கே இறைவன் ஆடுகின்ற அம்பலத்தை தரிசிக்கலாம் என்பதை அறியாமல் பலர் இருக்கின்றனர்.

பாடல் #1133

பாடல் #1133: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

அறிவான மாயையு மைம்புலக் கூட்டத்து
அறிவான மங்கை அருளது சேரிற்
பிரியா வறிவறி வாருள்ளம் பேணும்
நெறிவாய சித்த நினைந்திருந் தாளே.

விளக்கம்:

உயிர்களின் உண்மை அறிவை மாயை மறைத்து இருப்பதால் அவர்களுக்குள் இருக்கும் ஐந்து புலன்களும் உலக அறிவை மட்டுமே கொடுக்கின்றன. இதை மாற்றி அவர்களின் மாயையை நீக்கி உண்மை அறிவைக் கொடுக்கின்ற இறைவியின் அருள் அவர்களுக்கு கிடைத்து விட்டால் அவர்களுக்கு இறைவனும் தாமும் வேறில்லை என்கிற பேரறிவு ஞானம் கிடைத்து விடும். அதன் பிறகு அவர்கள் தமக்குள் இருக்கும் இறைவனை நினைத்து எப்போதும் பேரின்பத்திலேயே இருப்பதினால் இறைவியும் அவர்களின் சித்தத்தில் சேர்ந்து வீற்றிருப்பதை தமது செயலாக வைத்திருப்பாள்.

குறிப்பு:

பாடல் #1132 இல் உள்ளபடி தமக்குள் இறைவன் ஆடுகின்ற அம்பலத்தை தரிசிக்க முடியும் என்கிற அறிவு இல்லாமல் இருக்கின்றவர்களுக்கு உண்மை ஞானத்தை கொடுக்கும் இறைவியின் அருள் கிடைத்து விட்டால் அவர்கள் தாமே இறைவனாக இருப்பதை உணர்ந்து எப்போதும் பேரின்பத்திலேயே இருப்பார்கள். இவர்கள் பேரின்பத்தில் இறைவனை எப்போதும் நினைத்துக் கொண்டே இருப்பதால் இறைவியும் அவர்களின் சித்தத்துடன் சேர்ந்திருப்பதை தனது தர்மமாக வைத்திருப்பாள்.

பாடல் #1134

பாடல் #1134: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

இரவும் பகலு மிலாத விடத்தே
குரவஞ்செய் கின்ற குழலியை நாடி
அரவம்செய் யாம லருளுடன் தூங்கப்
பருவம்செய் யாததோர் பாலனு மாமே.

விளக்கம்:

காலை மாலை என்று வரையறுக்கப்பட்ட காலங்கள் இல்லாமல் எந்தக் காலத்திலும் நமக்குள்ளேயே வீற்றிருக்கின்ற நறுமணம் கமழ்கின்ற அழகிய கூந்தலை உடைய இறைவியைத் தமக்குள்ளேயே தேடி அடைந்து அவளுடைய திருவருளைத் தவிர வேறு எந்த எண்ணத்தாலும் சிறிதும் அசைந்து விடாத மனநிலையில் ஆழ்நிலை தியானத்தில் இருப்பவர்கள் எப்போதும் மாறாமல் இருக்கும் உடலைப் பெற்று என்றும் இளமையுடனே இருப்பார்கள்.

குறிப்பு:

பாடல் #1133 இல் உள்ளபடி சித்தத்தில் வீற்றிருக்கும் இறைவியானவள் எப்படி வீற்றிருக்கின்றாள் அவளை எப்படி அடைந்து அவளை மட்டுமே எண்ணி இருந்து அழியாத உடலை எப்படி பெறலாம் என்பதை இப்பாடலில் அறிந்து கொள்ளலாம்.