பாடல் #1726

பாடல் #1726: ஏழாம் தந்திரம் – 3. பிண்ட லிங்கம் (உயிர்களின் உடலில் இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

மானிட ராக்கை வடிவு சிவலிங்க
மானிட ராக்கை வடிவு சிதம்பர
மானிட ராக்கை வடிவு சதாசிவ
மானிட ராக்கை வடிவு திருக்கூத்தே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மானிட ராககை வடிவு சிவலிஙக
மானிட ராககை வடிவு சிதமபர
மானிட ராககை வடிவு சதாசிவ
மானிட ராககை வடிவு திருககூததே.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மானிடர் ஆக்கை வடிவு சிவ இலிங்கம்
மானிடர் ஆக்கை வடிவு சிதம்பரம்
மானிடர் ஆக்கை வடிவு சதா சிவம்
மானிடர் ஆக்கை வடிவு திரு கூத்தே.

பதப்பொருள்:

மானிடர் (உயிர்களின்) ஆக்கை (உடம்பின்) வடிவு (வடிவமானது) சிவ (இறைவனின் அடையாளமாகிய) இலிங்கம் (இலிங்கமாகவே இருக்கின்றது)
மானிடர் (உயிர்களின்) ஆக்கை (உடம்பின்) வடிவு (வடிவமானது) சிதம்பரம் (சித் (சித்தமாகிய) + அம் (ஆகாயத்தில்) + பரம் (வீற்றிருக்கின்ற பரம்பொருள்) = சிதம்பரம் என்று எண்ணங்களாக இருக்கின்றது)
மானிடர் (உயிர்களின்) ஆக்கை (உடம்பின்) வடிவு (வடிவமானது) சதா (அசையாத சக்தியாகிய) சிவம் (பரம்பொருளின் அம்சமான ஆன்மாவாக இருக்கின்றது)
மானிடர் (உயிர்களின்) ஆக்கை (உடம்பின்) வடிவு (வடிவமானது) திரு (இறைவன் ஆடுகின்ற) கூத்தே (திருக்கூத்தின் அசைவுகளாக இருக்கின்றது).

விளக்கம்:

இறைவனின் அடையாளமாகிய சிவ இலிங்கமே உயிர்களின் உடம்பின் வடிவமாகவும், சித் (சித்தமாகிய) + அம் (ஆகாயத்தில்) + பரம் (வீற்றிருக்கின்ற பரம்பொருள்) = சிதம்பரமே உயிர்களின் உடலுக்குள் இருக்கின்ற எண்ணங்களாகவும், அசையா சக்தியாகிய பரம்பொருளே உயிர்களின் உடம்பிற்குள் இருக்கின்ற ஆன்மாவாகவும், இறைவன் ஆடுகின்ற திருக்கூத்தே உயிர்களின் உடலில் இருக்கின்ற அசைவுகளாகவும் இருக்கின்றது.

பாடல் #1727

பாடல் #1727: ஏழாம் தந்திரம் – 3. பிண்ட லிங்கம் (உயிர்களின் உடலில் இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

உலந்தனர் பின்னு முளரென நிற்பர்
நிலந்தரு நீர்தெளி யூனவை செய்யப்
புலந்தரு பூதங்க ளைந்து மொன்றாக
வலந்தரு தேவரை வந்தி செயீரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உலநதனர பினனு முளரென நிறபர
நிலநதரு நீரதெளி யூனவை செயயப
புலநதரு பூதஙக ளைநது மொனறாக
வலநதரு தெவரை வநதி செயீரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உலந்தனர் பின்னும் உளர் என நிற்பர்
நிலம் தரும் நீர் தெளி ஊன் அவை செய்ய
புலம் தரும் பூதங்கள் ஐந்தும் ஒன்று ஆக
வலம் தரும் தேவரை வந்தி செயீரே.

பதப்பொருள்:

உலந்தனர் (இந்த பிறவிக்கான வினைகள் தீர்ந்து இறந்து போன) பின்னும் (பிறகும்) உளர் (இனியும் பிறவி வேண்டும்) என (என்று) நிற்பர் (இன்னமும் தீர்க்க வேண்டிய வினைகளை அனுபவிக்க நிற்பார்கள்)
நிலம் (அவர்களுக்கு தேவையான உடலை நிலத்தை) தரும் (தருகின்ற) நீர் (நீரினால்) தெளி (தெளிந்து உருவாகிய உணவினால்) ஊன் (வளர்கின்ற தசையும்) அவை (அவர்களுக்கு ஏற்ற வடிவத்தை) செய்ய (செய்ய)
புலம் (அவர்களின் உயிர் இருக்கின்ற இடமாகிய உடம்பை) தரும் (தருகின்ற) பூதங்கள் (பூதங்கள்) ஐந்தும் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து) ஒன்று (ஒன்று) ஆக (சேர்ந்து கொடுக்க)
வலம் (அந்த உடம்பிற்குள் நிகழ்கின்ற அனைத்து இயக்கங்களையும்) தரும் (தருகின்ற) தேவரை (தேவர்களை) வந்தி (வணங்கி வழிபடுவதை) செயீரே (செய்யுங்கள்).

விளக்கம்:

இந்த பிறவிக்கான வினைகள் தீர்ந்து இறந்து போன பிறகும் இனியும் பிறவி வேண்டும் என்று இன்னமும் தீர்க்க வேண்டிய வினைகளை அனுபவிக்க நிற்பார்கள். அவர்களுக்கு தேவையான உடலை நிலத்தை தருகின்ற நீரினால் தெளிந்து உருவாகிய உணவினால் வளர்கின்ற தசையும் அவர்களுக்கு ஏற்ற வடிவத்தை செய்து கொடுக்கும். அவர்களின் உயிர் இருக்கின்ற இடமாகிய உடம்பை தருகின்ற பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் ஒன்று சேர்ந்து கொடுக்கும். அந்த உடம்பிற்குள் நிகழ்கின்ற அனைத்து இயக்கங்களையும் தருகின்ற தேவர்களை வணங்கி வழிபடுவதை செய்யுங்கள்.

கருத்து:

உயிர்களின் உடம்பாக இருப்பதே இறைவனின் சிவ இலிங்கமாகும். அதற்குள் இறைவனாகவே இருக்கின்ற அனைத்து தேவர்களும் இருக்கின்றார்கள். ஆகவே உயிர்களின் உடம்பையே கோயிலாக வணங்கி வந்தால் இனி பிறவி இல்லாத நிலையை அடையலாம். பாடல் #1823 இல் வருகின்ற “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்கிற வாசகம் இந்த பொருளையே குறிக்கின்றது.

பாடல் #1728

பாடல் #1728: ஏழாம் தந்திரம் – 3. பிண்ட லிங்கம் (உயிர்களின் உடலில் இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

கோயில்கொண் டன்றே குடிகொண்ட தைவரும்
வாயில்கொண் டாங்கே வழிநின் றருளுவர்
தாயில்கொண் டாப்போற் றலைவனென் னுள்புக
வாயில்கொண் டீசனும் வாழவந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கொயிலகொண டனறெ குடிகொணட தைவரும
வாயிலகொண டாஙகெ வழிநின றருளுவர
தாயிலகொண டாபபொற றலைவனென னுளபுக
வாயிலகொண டீசனும வாழவந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கோ இல் கொண்ட அன்றே குடி கொண்டது ஐவரும்
வா இல் கொண்டு ஆங்கே வழி நின்று அருளுவர்
தா இல் கொண்டால் போல் தலைவன் என் உள் புக
வா இல் கொண்டு ஈசனும் வாழ வந்தானே.

பதப்பொருள்:

கோ (உயிர்கள் பிறப்பு எடுக்கும் போதே இறைவன் இருக்கின்ற கோயிலுக்கு) இல் (உயிர்களின் உடலை இடமாக) கொண்ட (கொண்ட) அன்றே (அந்த பொழுதே) குடி (உயிர்களின் உடம்புக்குள் குடி) கொண்டது (புகுந்து கொண்டது) ஐவரும் (ஐந்து தெய்வங்களும் தத்தமது தொழில்களுடன் ஐந்து பூதங்களாகவும் புலன்களாகவும் நின்று)
வா (அந்த புலன்கள் நுழைகின்ற) இல் (இடமாக) கொண்டு (கொண்டு) ஆங்கே (அந்த) வழி (வழியாகவே) நின்று (நின்று) அருளுவர் (அருளுகின்றனர்)
தா (எப்போது புலன்களை விட்டு விட்டு குழந்தை தாயை தேடி அழுவது போல இறைவனை தேடுகின்றோமோ அப்போது) இல் (குழந்தை இருக்கும் இடம் தேடி) கொண்டால் (தாய் தானாகவே வருவது) போல் (போலவே) தலைவன் (இறைவனும் தலைவனாகவே) என் (அடியவரின்) உள் (உள்ளே) புக (புகுந்து)
வா (தமது அருள் நுழைகின்ற) இல் (இடமாக) கொண்டு (அடியவரை ஆட்கொண்டு) ஈசனும் (இறைனும்) வாழ (அடியவரின் உடலையே தாம் வாழுகின்ற இடமாக கொண்டு) வந்தானே (வந்து வீற்றிருந்து அருளுவான்).

விளக்கம்:

உயிர்கள் பிறப்பு எடுக்கும் போதே அவற்றை தாம் இருக்கும் கோயிலாகவே படைக்கின்றான் இறைவன். அப்படி உயிர்கள் கோயிலாக உடலெடுத்து பிறக்கும் போதே ஐந்து தெய்வங்களும் தத்தமது தொழில்களுடன் ஐந்து பூதங்களாகவும் புலன்களாகவும் நின்று அந்த புலன்கள் நுழைகின்ற இடமாக உயிர்களின் உடலை ஏற்றுக் கொண்டு அதன் வழியாகவே நின்று அருளுகின்றனர். உயிர்கள் எப்போது புலன்களின் வழியே வாழ்வதை விட்டு விட்டு குழந்தை தாயை தேடி அழுவது போல இறைவனை தேடுகின்றார்களோ அப்போது குழந்தை இருக்கும் இடம் தேடி தாய் தானாகவே வருவது போல இறைவனும் தலைவனாகவே அந்த அடியவரின் உடலுக்கு உள்ளே இருந்து அடியவரை ஆட்கொண்டு அடியவரின் உடலையே தாம் வாழுகின்ற இடமாக கொண்டு வீற்றிருந்து அருளுவான்.

ஐவர்கள்:

ஐந்து தெய்வங்கள் – ஐந்து தொழில்கள் – பஞ்ச பூதங்கள் – ஐந்து பொறிகள் – ஐந்து புலன்கள்

  1. பிரம்மன் – படைத்தல் – நிலம் – மூக்கு – நுகர்தல்
  2. திருமால் – காத்தல் – நீர் – நாக்கு – சுவைத்தல்
  3. உருத்திரன் – அழித்தல் – நெருப்பு – கண் – பார்த்தல்
  4. மகேஸ்வரன் – மறைத்தல் – காற்று – தோல் – உணர்தல்
  5. சதாசிவன் – அருளல் – ஆகாயம் – காது – கேட்டல்

பாடல் #1729

பாடல் #1729: ஏழாம் தந்திரம் – 3. பிண்ட லிங்கம் (உயிர்களின் உடலில் இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

கோயில்கொண் டானடி கொல்லைப் பெருமுறை
வாயில்கொண் டானடி நாடிகள் பத்துள
பூசைகொண் டானடி புனைந்தும் புற்கிட்டு
வாயில்கொண் டானெங்கள் மாநந்தி தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கொயிலகொண டானடி கொலலைப பெருமுறை
வாயிலகொண டானடி நாடிகள பததுள
பூசைகொண டானடி புனைநதும புறகிடடு
வாயிலகொண டானெஙகள மாநநதி தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கோ இல் கொண்டான் அடி கொல்லை பெரும் உறை
வா இல் கொண்டான் அடி நாடிகள் பத்து உள
பூசை கொண்டான் அடி புனைந்தும் புற்கு இட்டு
வா இல் கொண்டான் எங்கள் மா நந்தி தானே.

பதப்பொருள்:

கோ (தாம் வீற்றிருக்கும் கோயில்) இல் (இடமாக) கொண்டான் (உயிர்களின் உடலை ஆட்கொண்ட இறைவன்) அடி (தமது திருவடிகளால்) கொல்லை (அழுக்குகளை மட்டுமே கொண்ட) பெரும் (பெரிய) உறை (உறை போல் தசைகளால் மூடி இருக்கும் உடலையே)
வா (தமது அருள் நுழைகின்ற) இல் (இடமாக) கொண்டான் (ஏற்றுக் கொண்டு) அடி (தமது திருவடிகளால்) நாடிகள் (உடலுக்குள் இருக்கின்ற நாடிகள்) பத்து (பத்தும்) உள (இயங்குகின்ற இயக்கத்தையே)
பூசை (தமக்கு செய்யும் பூசையாக) கொண்டான் (ஏற்றுக் கொண்டு) அடி (தமது திருவடிகளால்) புனைந்தும் (அடியவரின் உடலை ஒழுங்கு செய்து) புற்கு (அனைத்து அழுக்குகளையும்) இட்டு (அவரை விட்டு நீக்கி விட்டு சுத்தம் செய்து)
வா (தாம் வாசம் செய்கின்ற) இல் (இடமாக) கொண்டான் (அந்த சுத்தப் படுத்திய உடலை ஏற்றுக் கொண்டான்) எங்கள் (எங்களை வழிநடத்துகின்ற) மா (மாபெரும்) நந்தி (குருநாதனாகிய) தானே (இறைவன்).

விளக்கம்:

அழுக்குகளை மட்டுமே கொண்டு தசைகளால் மூடப்பட்டு இருக்கின்ற உயிர்களின் உடலையே தாம் வீற்றிருக்கும் கோயிலாக ஆட்கொண்ட இறைவன் தமது திருவடிகளால் அந்த உடலில் இருக்கின்ற பத்து விதமான நாடிகளின் இயக்கத்தையே தமக்கு செய்கின்ற பூசையாக ஏற்றுக் கொண்டு தமது திருவடிகளின் அருளாலேயே அந்த உடலில் இருக்கின்ற அனைத்து அழுக்குகளையும் நீக்கி, ஒழுங்கு படுத்தி, சுத்தம் செய்து, அந்த உடலைக் கொண்ட அடியவரை தம்மை நோக்கி வழி நடத்திச் செல்கின்ற மாபெரும் குருநாதனாக அவரின் உடலுக்குள் வீற்றிருக்கின்றான்.

பத்து நாடிகள் – வியாபித்து இருக்கும் இடங்கள்

  1. இடகலை – இடது நாசி
  2. பிங்கலை – வலது நாசி
  3. சுழிமுனை – நடு முதுகெலும்பு
  4. புருஷன் – பிறப்பு உறுப்பு
  5. காந்தாரி – இடது கண்
  6. அத்தி – வலது கண்
  7. அலம்புடை – நாக்கு
  8. சங்கினி – தலை
  9. சிங்குவை – இடது கை
  10. குரு – வலது கை