பாடல் #762

பாடல் #762: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

கழிகின்ற அப்பொருள் காணகி லாதார்
கழிகின்ற அப்பொருள் காணலு மாகுங்
கழிகின்ற வுள்ளே கருத்துற நோக்கிற்
கழியாத அப்பொருள் காணலு மாமே.

விளக்கம்:

பாடல் #761 இல் உள்ளபடி இறை சக்தியைத் தமக்குள் கண்டு உணராததால் தம்மை விட்டுப் போகின்ற அருட்செல்வங்கள் என்ன என்பதைக் காண முடியாதவர்கள் தாம் பெரிதாக எண்ணியிருந்த உலகச் செல்வங்கள் அனைத்தும் தம் கண் முன்பே அழிந்து போவதைக் காண்கிறார்கள். அழிகின்ற உடலுக்குள்ளும் செல்வத்துக்குள்ளும் என்ன இருக்கின்றதேன்று ஆராய்ந்து பார்த்தால் அழிகின்ற அனைத்து பொருட்களுக்குள்ளும் என்றும் அழியாத பெரும் செல்வமான இறைவன் இருப்பதை அறிந்து கொள்ள முடியும்.

கருத்து:

தமக்குள் ஆழ்ந்து தேடி இறைவனை உணர்ந்தவர்களால் மட்டுமே அழிகின்ற அனைத்திலும் என்றும் அழியாத இறை சக்தி இருப்பதைக் கண்டுகொள்ள முடியும்.

பாடல் #761

பாடல் #761: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

காணகி லாதார் கழிந்தோடிப் போவர்கள்
நாணகி லார்நயம் பேசி விடுவர்கள்
காணகி லாதார் கழிந்த பொருளெலாங்
காணகி லாமலே கழிகின்ற வாறே.

விளக்கம்:

பாடல் #760 இல் உள்ளபடி இறை சக்தியைத் தமக்குள் கண்டு உணராதவர்கள் தங்களின் வாழ்க்கையை வீணே வாழ்ந்து கழித்து மீண்டும் பிறக்கும்படி இறந்து போகின்றார்கள். இறை சக்தியை அடையும் வழியைக் கற்று அறிந்தவர்கள் கூட தாம் கற்ற கல்வியை உபயோகித்துப் பயன் பெறாமல் அதைப் பற்றி பலவிதமாகப் பேசுவதில் காலத்தை கழித்துக் கொண்டு தாம் கற்றதெல்லாம் பயனில்லாமல் போகின்றதென்ற நாணம் இல்லாமல் காலத்தை வீணடிக்கின்றார்கள். இறை சக்தியைத் தமக்குள் கண்டு உணராததால் தம்மை விட்டுப் போகின்ற அருட்செல்வங்கள் என்ன என்பதையும் காணமலேயே இவர்களின் காலம் வீணாகக் கழிந்துவிடுகின்றது.

கருத்து:

இறைவனை அடையவே சாஸ்திரங்களும் கலைகளும் இறைவனால் அருளப்பட்டன. இதை அறியாமல் கற்றவர் கல்லாதவர் ஆகிய இரண்டு வகையினருமே காலத்தை வீணடித்து இறைவனை அறியாமலேயே இறந்து போகின்றார்கள்.

Image may contain: plant, outdoor and nature

பாடல் #760

பாடல் #760: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

உயருறு வாருல கத்தொடுங் கூடிப்
பயனுறு வார்பலர் தாமறி யாமற்
செயலுறு வார்சிலர் சிந்தையி லாமல்
கயலுறு கண்ணியைக் காணகி லாரே.

விளக்கம்:

பாடல் #759 இல் உள்ளபடி அனைத்திற்கும் மேலானதொரு நிலையை அடைந்த யோகியர்கள் உலகத்தவர்களின் மேல் கொண்ட கருணையினால் அவர்கள் அறியாமலேயே அவர்களோடு கலந்து நின்று பல நல்வினைகளைப் புரிந்து பயன்பெற வைக்கின்றார்கள். உலகத்தவர்களையும் பயன்பெற வைக்கின்ற உயர்வான நிலையைப் பற்றி தெரியாத அல்லது அதில் விருப்பமில்லாதவர்கள் தங்களின் கர்மவினைகளைச் செய்துகொண்டு வீணாக வாழ்க்கையைக் கழித்து மீன்களைப் போல் எப்போதும் கண்மூடாமல் அன்பர்களுக்கு அருள்கொடுக்கும் இறை சக்தியை காணாமலேயே காலத்தை கழித்து அழிந்து போகின்றார்கள்.

கருத்து:

அகயோகம் செய்து அனைத்திற்கும் மேலான உயர் நிலையை அடைந்த யோகியர்கள் உலகத்தவர் மேல் கருணை கொண்டு அவர்களுக்காக பல நல்வினைகளைப் புரிகின்றார்கள். இதை அறியாத மற்றவர்கள் தங்களின் வினைகளையே புரிந்து வீணாக காலத்தைக் கழிக்கின்றார்கள்.

No photo description available.

பாடல் #759

பாடல் #759: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

உகங்கோடி கண்டும் ஒசிவற நின்று
அகங்கோடி கண்டுள் அயலறக் காண்பர்
சிவங்கோடி விட்டுச் செறிய இருந்தங்
குகங்கோடி கண்டங் குயருறு வாரே.

விளக்கம்:

பாடல் #758 இல் உள்ளபடி கோடி யுகங்களைக் கண்ட யோகியர்கள் சிறிதும் தளர்வின்றி தமது அகயோகத்திலேயே நிலைபெற்று நின்று தான் எனும் எண்ணம் இல்லாமல் இறைவனும் தாமும் வேறு இல்லை என்பதையும் காண்பார்கள். தமக்குள் உணர்ந்த சிவத்தின் ஒளியுருவத்தையும் கடந்து உருவமும் குணமும் இல்லாத இறை நிலையை அடைந்து பல கோடி யுகங்களையும் கண்டு அனைத்திற்கும் மேலானதொரு நிலையை அடைவார்கள்.

கருத்து:

கோடி யுகங்கள் கண்டும் தளர்வில்லாமல் நிலைபெற்று நிற்கும் அகயோகிகள் அதன் பிறகு சிவ நிலையையும் கடந்த பரநிலையில் பலகோடி யுகங்கள் கண்டு அனைத்திற்கும் மேலான நிலையை அடைவார்கள்.

No photo description available.

பாடல் #758

பாடல் #758: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

சாற்றிடு நூறு தலைப்பெய்து நின்றவர்
காத்துடல் ஆயிரங் கட்டுறக் காண்பர்கள்
சேர்த்துடல் ஆயிரஞ் சேர இருந்தவர்
மூத்துடன் கோடியே யுகமது வாமே.

விளக்கம்:

பாடல் #757 இல் உள்ளபடி அகயோகம் செய்து சாஸ்திரங்கள் கூறிய முழுமையான வயதான நூறு ஆண்டுகளையும் கடந்து நிற்பவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் உடல் கட்டுக்குலையாமல் இருப்பதைக் காண்பார்கள். இறைவனோடு கலந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருந்தவர்கள் பேரறிவால் முதிர்ந்து கோடி ஆண்டுகளுக்கும் உடல் அழியாமல் இருந்து பல யுகங்களையும் காண்பார்கள்.

கருத்து:

அகயோகப் பயிற்சியை முழுமையாகச் செய்து இறைவனோடு இரண்டறக் கலந்து பேரின்பத்தில் இறைவனை தரிசித்துக்கொண்டே இருப்பவர்கள் பலகோடி வருடங்கள் ஆனாலும் அழியாமல் பல யுகங்களைக் கண்டு அறிவால் முதிர்ந்து உடல் அழியாமல் இருப்பார்கள்.

No photo description available.

பாடல் #757

பாடல் #757: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

கூத்தவன் ஒன்றிடுங் கூர்மை அறிந்தங்கே
ஏத்துவர் பத்தினில் எண்டிசை தோன்றிடப்
பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடிற்
சாத்திடு நூறு தலைப்புஎய்ய லாமே.

விளக்கம்:

பாடல் #756 ல் உள்ளபடி இறைவனோடு இரண்டறக் கலந்து தாமே சிவமாகிவிடும் வழிமுறையை அறிந்து அதன்படியே அகயோகம் செய்து ஆறு ஆதாரச் சக்கரங்களையும் தாண்டி சகஸ்ரதளத்தின் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரில் ஒளி உருவமாக வீற்றிருக்கும் இறைவனோடு கலந்து அதையும் தாண்டி துவாதசாந்த வெளியில் இருக்கும் மூன்று மண்டலங்களில் (அக்கினி, சூரிய, சந்திர மண்டலங்கள் பாடல் #746 இல் உள்ளபடி) இரண்டு மண்டலங்களைத் தாண்டி மூன்றாவதாக இருக்கும் சந்திர மண்டலத்தில் எட்டுத் திசைகளும் பரவி விரியும்படி இறைவனின் ஒளி உருவத்தை ஏற்றிவைத்து பேரின்பத்தில் திளைத்து அதைத் தரிசித்துக் கொண்டே இருப்பவர்கள் சாஸ்திரங்கள் கூறிய முழுமையான வயதான நூறு ஆண்டுகளையும் கடந்து நிற்பார்கள்.

கருத்து:

அகயோகம் செய்து ஜோதியான இறைவனோடு கலந்தவர்கள் அந்த ஜோதியை துவாதசாந்த வெளியிலுள்ள மூன்றாவது சந்திர மண்டலத்தில் எட்டுத் திசைகளுக்கும் பரவி விரியும்படி ஏற்றி வைத்தால் நூறு ஆண்டுகளைக் கடந்தும் பேரின்பத்தில் வாழ்வார்கள்.

பாடல் #756

பாடல் #756: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

ஒன்றில் வளர்ச்சி உலப்பிலி கேளினி
நன்றென்று மூன்றுக்கு நாளது சென்றிடும்
சென்றிடு முப்பதுஞ் சேர இருந்திடிற்
குன்றிடையில் பொன்திகழ் கூத்தனு மாமே.

விளக்கம்:

பாடல் #755 ல் உள்ளபடி இறைவனோடு ஒன்றாய் இரண்டறக் கலந்து தாமே சிவமாகி இருப்பவர்கள் அளவில்லாத காலங்கள் ஆயுள் வளர்ந்து அழியாமல் இருக்கின்ற முறையை கேட்டுக் கொள்ளுங்கள். தமக்குள் இருக்கும் இறைவனை அடைய உதவுவதால் மிகவும் நல்லது என்று சாதகர்கள் உணர்ந்து கொண்ட இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்று நாடிகள் வழியாகவும் மூச்சுக்காற்றை உள்ளிழுத்து மேலேற்றி கீழிறக்கி என்று சுழற்சி செய்து கொண்டே இருந்தால் பல காலங்கள் உடல் அழியாமல் சென்று கொண்டே இருக்கும். முப்பது நாட்களுக்கு முறையாகச் செய்த பின்பு குன்றின் மேல் ஏற்றிவைத்த தீபம் போல தலை உச்சியிலிருக்கும் சகஸ்ரதளத்தில் பொன் நிற ஜோதி உருவமாக இருக்கும் இறைவனே தாமாகி ஒளிப் பிரகாசமாக எங்கும் பரவிக்கொண்டே இருப்பார்கள்.

கருத்து:

அகயோகம் செய்யும் சாதகர்கள் இறைவனோடு கலந்து அவனைப் போலவே பொன் நிற ஜோதியாகி எங்கும் பரவிக்கொண்டே இருப்பார்கள்.

No photo description available.

பாடல் #755

பாடல் #755: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

கூத்தன் குறியிற் குணம்பல கண்டவர்
சாத்திரந் தன்னைத் தலைப்பெய்து நிற்பர்கள்
பார்த்திருந் துள்ளே அனுபோக நோக்கிடில்
ஆத்தனு மாகி யலர்ந்துவிடு மொன்றே.

விளக்கம்:

பாடல் #754 ல் உள்ளபடி தலை உச்சியைத் தாண்டிய துவாதசாந்த வெளியில் திருநடனம் புரிந்து கொண்டிருக்கும் இறைவனைத் தரிசித்து தமக்குள் இறைத்தன்மைகள் பலவற்றை கண்டவர்கள் சாஸ்திரங்கள் கூறும் தர்மங்களையே தலையானதாகக் கொண்டு அவற்றை விட்டு சிறிதும் விலகாமல் கடைபிடித்து நிற்பவர்கள். தர்மம் தவறாமல் நின்று தமக்குள்ளேயே இறைவனின் திருவடியையும் திருநடனத்தையும் தரிசித்துக்கொண்டு அவனருளால் பெற்ற பேரின்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் தாமே சிவமாகி அவனைப் போலவே எங்கும் வியாபித்து இருப்பார்கள்.

கருத்து:

இறைவனை தமக்குள்ளே தரிசித்து தர்மத்தை கடைபிடித்து அதன் படி நடப்பவர்கள் பேரின்பத்தில் திளைத்து தாமே சிவமாகி எங்கும் வியாபித்து இருப்பார்கள்.

No photo description available.

பாடல் #754

பாடல் #754: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

சுழல்கின்ற வாறின் துணைமலர் காணான்
தழலிடைப் புக்கிடுந் தன்னு ளிலாமற்
கழல்கண்டு போம்வழி காணவல் லார்க்குக்
குழல்வழி நின்றிடுங் கூத்தனு மாமே.

விளக்கம்:

பிறவிச் சுழற்சியில் சிக்கிக்கொண்டு பிறந்து கொண்டே இருக்கின்ற உயிர்கள் தம்மோடு எப்போதும் துணையாக இருக்கும் இறைவனின் திருவடியைத் தாங்கிக் கொண்டு இருக்கின்ற மலரைக் காண்பதில்லை. இறந்த பிறகு நெருப்பில் இடப்படும் இந்த உடலை நிரந்தரம் என்று எண்ணாமல் தமக்குள்ளேயே துணையாக இருக்கும் இறைவனே என்றும் நிரந்தரம் என்பதை உணர்ந்து அவனது திருவடிகளைச் சென்று அடையும் வழியான சுழுமுனை நாடியைக் கண்டுகொண்டவர்கள் அதன் வழியே சென்று அடையும் தலை உச்சியைத் தாண்டிய துவாதசாந்த வெளியில் திருநடனம் புரிந்து கொண்டிருக்கும் இறைவனை கண்டு உணர்ந்து அவனோடு கலந்து பேரின்பத்தில் இருக்கலாம்.

கருத்து:

இறந்த பிறகு நெருப்புக்கு இரையாகும் உடலை பற்றிக்கொண்டு பிறவிச் சுழற்சியில் சிக்கிக் கொள்ளாமல் உடலுக்குள் ஏழாவது சக்கரத்தில் இருக்கும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் இறைவன் ஒளி உருவமாக வீற்றிருப்பதை பார்த்து இறைவனின் திருவடிகளைப் பற்றிக்கொண்டு அவனோடு கலந்து பேரின்பத்தில் எப்போதும் நிலைத்து வாழலாம்.

Image may contain: night

பாடல் #753

பாடல் #753: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

பிணங்கி அழிந்திடும் பேறது கேள்நீ
அணங்குட னாதித்த னாறு விரியின்
வணங்குட னேவந்த வாழ்வு குலைந்து
சுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே.

விளக்கம்:

பிறவிச் சுழற்சியில் சிக்கிக்கொண்டு இறைவனை அடைய உதவும் இந்த பிறவி எப்படி அழிந்து போகின்றது என்பதைக் கேட்டுக்கொள்ளுங்கள். வினைகளைத் தீர்த்துக்கொண்டு தம்மை வந்து அடைய வேண்டும் என்பதற்காக இறைவன் கொடுத்த பிறவியை உயிர்கள் தங்களது ஆசைகளின் வழியிலேயே சென்று மேலும் மேலும் அதிகமாக வினைகளைச் சேர்த்துக் கொண்டே இருந்தால் இறைவனை உணர்ந்து அனைவரும் போற்றி வணங்கிடும் நிலை பெற வேண்டிய வாழ்க்கை சீர்குலைந்து எந்தவித இலக்கும் இல்லாமல் திரியும் நாய்களைப்போல் திரிந்து இறந்து மீண்டும் மீண்டும் பிறந்து அழிகின்ற வாழ்க்கையாக மாறிவிடும்.

கருத்து:

உயிர்கள் தங்கள் ஆசைகளின் வழி செல்வதால் வினைகளை சேர்த்துக்கொண்டு மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்துக்கொண்டே இருக்கின்றன.

Image may contain: indoor