வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின் ஓதத் தகும்அறம் எல்லம் உளதர்க்க வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே.
விளக்கம்:
வேதங்களை விட இறைவன் வழங்கிய அறம் வேறொன்றும் இல்லை. ஓதுவதற்கும் அதன்படி நடப்பதற்கும் ஏற்ற அறங்கள் எல்லாம் வேதத்தில் உள்ளது. நமது முன்னோரான அறிவிற் சிறந்த ஞானிகள் அனைவரும் இறைவன் வழங்கிய வேதத்தை ஏன் எதற்கு என்கிற வீண் விவாதங்கள் செய்யாமல் அனைவரும் இறைவன் வழங்கிய வேதத்தை ஓதியே முக்தியைப் பெற்றார்கள்.
வேதங்கள் ஓதுபவர்கள் அனைவரும் வேதியர்கள் ஆக மாட்டார்கள். வேதங்களின் அர்த்தங்களை உணர்ந்து அதன்படி நடப்பவர்களே உண்மையான வேதியர்கள் ஆவார்கள். இறைவன் வேதங்களை வழங்கியது உயிர்கள் அறங்களை தெரிந்து கொண்டு அதன்படி நடந்து உண்மைப் பொருளான இறைவனை உணர்ந்து மெய்ப்பொருளான இறைவனை அடைவதற்க்காகவே.
இருக்குரு வாம்எழில் வேதத்தின் உள்ளே உருக்குணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி வெருக்குரு வாகிய வேதியர் சொல்லும் கருக்குரு வாய்நின்ற கண்ணனும் ஆமே.
விளக்கம்:
சொல்லழகு மிகுந்த வேதத்தின் உள்ளே மந்திர வடிவாக இருப்பவனும் உணர்ந்து வேதத்தை சொல்லும் வேதியர் உள்ளத்தில் உணர்வாக இருப்பவனும் வேதம் சொல்லும் வழி நடக்கும் சிறந்த வேதியர்கள் ஓதும் வேதத்தின் சொற்களில் மறைப் பொருளாகவும் அனைத்தையும் உருவாக்கிய சக்தியாக நின்று அருளுபவனும் எம்பெருமான் முக்கண் முதல்வன் சிவபெருமானே ஆவான்.
திருநெறி யாவது சித்தசித் தன்றிப்
பெருநெறி யாய பிரானை நினைந்து
குருநெறி யாம்சிவ மாநெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.
விளக்கம்:
இறைவனை அடைந்து முக்தி பெறும் வழிகளாகிய சித்தாந்தம் (அறிந்த கருத்துக்கள்) அசித்தாந்தம் (அறியாத கருத்துக்கள்) மற்றும் இறைவனை மனதில் எப்போதும் நினைத்து அவனை பூஜிக்கும் பெருமைக்குரிய பக்தி வழியும் குருவானவர் அருளும் மாபெரும் சிவ வழியில் ஒன்று கூடும் சன்மார்க்க வழியும் ஆகிய இவை அனைத்தும் இறைவனை அடையும் ஒரு வழியே ஆகும் என்பதையே வேதங்கள் ஓதுகின்றன.
ஆறு அங்கங்களாக விளங்கும் மாபெரும் வேதங்களை (சிட்சை, கற்பம், வியாபகரணம், சந்தோபிசிதம், சோதிடம், நிருத்தம்) ஓதி அருளிய இறைவனை தனது உடம்பினுள்ளே ஒரு அங்கமாக வைத்து அவனின் தன்மைகளை உணர்பவர்கள் யாரும் இல்லை. அவனைத் தமது உடலிலிருந்து வெளியே இருக்கும் ஒரு அங்கமாக எண்ணிக்கொண்டு பலவித செயல்களைச் செய்கின்றனர். அப்படிச் செய்து கிடைத்த பயன்களையே உயர்வாகக் கருதி அதையே பெருக்கிக் கொண்டு இறைவனை உணராமலேயே வாழ்கின்றார்கள்.
இறைவனைப் பற்றிய பாடல்களை இசையோடு ஒலித்துப் பாடி அதற்கேற்ப பாவமும் காட்டி நடனமாடும் இளம்பெண்கள் அந்தப் பாடல்களின் மூலம் இறைவனை உணர்ந்து முக்திபெறுவதற்கு முயற்சிக்காமல் தங்களின் நடனங்களின் மூலம் பொருள் பெறவே முயற்சிக்கின்றனர். அப்பெண்களின் நடனத்தைக் கண்டு களிப்பவர்களும் அதன் உண்மைப் பொருளை உணராமல் அவர்களின் நடனத்தைக் கண்டு சிற்றின்பத்திலேயே இருக்கின்றார்கள். உயர்வான வேதங்களை உயிர்கள் உய்யும் பொருட்டு உண்மைப் பொருளுணர்ந்து ஓதவேண்டிய அந்தணர்கள் மோட்சம் அடையவேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் அதற்கான ஒழுக்கங்களைக் (விரதங்கள்) கடைப்பிடிக்காமல் பிறர் கொடுக்கும் பொருளுக்காக வேதங்களை ஓதி யாகங்களை வளர்ப்பதால் இந்தப் பெண்களைப் போன்றவர்கள் ஆகின்றார்கள். இவர்களால் செய்யப்படும் யாகங்களைப் பெறுபவர்களும் உண்மைப் பொருள் உணராமல் உலகப் பொருள்களிலேயே மனம் செலுத்துவதால் அப்பெண்களின் நடனத்தைக் காண்பவர்கள் ஆகின்றார்கள். இவ்வர்கள் கொடுக்கும் பொருளுக்கு ஆசைப்படும் அந்தணர்களோ அப்படி பொருள் கிடைக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று தங்களின் உயர்வான பிறப்பை இழிபிறப்பாக மாற்றித் துன்பத்தில் வாழ்கின்றார்கள்.
உள் விளக்கம்:
வேதங்களில் இறைவனை அடையும் வழிகளும் அதைக் கடைபிடிக்கும் போது இருக்க வேண்டிய ஒழுக்கங்களும் (விரதங்கள்) கொடுக்கப்பட்டிருந்தாலும் அதைச் சிரத்தையோடு மேற்கொள்ளாமல் வெறும் சிற்றின்பத்தில் சிக்கி உலகப் பொருள்களை நாடி அலையும் உயிர்கள் தங்களின் பிறவிப் பயனை எய்யாமல் இழிந்து போகின்றார்கள். அவ்வாறு இல்லாமல் பேரின்பப் பொருளான இறைவனை வேதங்கள் மூலம் உணர்ந்து முக்தியை அடைவீர்களாக என்று திருமூலர் இங்கு அருளுகின்றார்.