பாடல் #1127

பாடல் #1127: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

கும்பக் களிறைந்துங் கோலொடு பாகனும்
வம்பிற் றிகழு மணிமுடி வண்ணனும்
இன்பக் கலவி யினிதுறை தையலும்
அன்பிற் கலவியு ளாயொழிந் தாரே.

விளக்கம்:

பாடல் #1126 இல் உள்ளபடி அடியவர்களின் உள்ளுக்குள் வந்து வீற்றிருக்கின்ற இறைவன் அவர்களின் ஐந்து புலன்களையும் அவர்களின் மனமாகிய கோலின் மூலம் ஆன்மாவாகிய பாகனைக் கொண்டு அடக்கி ஆளுகின்றான். குற்றம் குறையில்லாமல் பிரகாசிக்கும் நவரத்தினங்களால் ஆன கிரீடத்தை அணிந்து கொண்டு பிரகாசிக்கும் ஒளி வண்ணத்தில் திருமேனியை உடைய இறைவனும் அவனோடு பேரின்பத்தில் கலந்து இனிமையாக பின்னிப் பிணைந்து வீற்றிருக்கின்ற இறைவியும் உண்மையான அன்போடு இறைவனை நேசிக்கின்ற அடியவர்களின் உள்ளுக்குள் வந்து ஒன்றாக வீற்றிருப்பார்கள்.

கருத்து: அடியவர்களின் உள்ளுக்குள் வந்து வீற்றிருந்த இறைவன் அவர்களின் ஐந்து புலன்களையும் அவர்களின் மனதால் அடக்கி அவர்களின் ஆன்மாவை அன்பினால் பேரின்பத்தில் பின்னிப் பிணைத்து வீற்றிருக்கின்றான்.

பாடல் #1126

பாடல் #1126: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

உணர்ந்தில ரீசனை யூழிசெய் சக்தி
புணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள்
கணங்களைத் தன்னருள் செய்கின்ற கன்னி
கொணர்ந்த வழிகொண்டு கும்பக மாமே.

விளக்கம்:

பாடல் #1125 இல் உள்ளபடி யாம் உணர்ந்து கொண்ட இறைவனையும் பேரூழிக் காலத்தில் அனைத்தையும் அழிக்கின்ற சக்தியாக இருக்கின்ற இறைவி அவனோடு சேர்ந்து இருப்பதே பரிபூரணமான நிலை என்பதையும் யாரும் உணர்ந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள். இறைவனை அறிந்து கொண்ட அடியார்களுக்கு அருள் புரிகின்ற இறைவியானவள் இறைவனை அடையும் பூர்வ ஜென்ம புண்ணியம் பெற்றவர்களுக்கு உள்ளே குருவாக இருந்து அவரவர்களுக்கு ஏற்ற விதத்தில் அருளிய வழிமுறைகளை மேற்கொண்டு அதன் படியே கடைபிடித்து வருபவர்களின் உள்ளே இறைவன் வந்து வீற்றிருப்பான்.

பாடல் #1125

பாடல் #1125: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

அளந்தே னகலிடத் தந்தமு மீறும்
அளந்தே னகலிடத் தாதிப் பிரானை
அளந்தே னகலிடத் தாணொடு பெண்ணும்
அளந்தே னவனரு ளாய்ந்துணர்ந் தேனே.

விளக்கம்:

இந்த விரிந்து பரந்த உலகத்தின் முடிவாகவும் ஆன்மாக்களின் முடிவாகவும் உலகத்தின் ஆரம்பமாகவும் உலகத்திலுள்ள அனைத்து உயிர்களில் ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கின்ற இறைவனை எங்கெல்லாமோ அலைந்து தேடினோம். பின்பு அவனருளால் எமக்குள்ளேயே ஆராய்ந்து பரிபூரணமாக இருக்கும் அந்த சிவசக்தியை முழுவதுமாக உணர்ந்து கொண்டோம்.

பாடல் #1075

பாடல் #1075: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

பன்னிரண் டாங்கலை யாதி வயிரவி
தன்னி லகாரமு மாயையுங் கற்பித்துப்
பன்னிரண் டாதியோ டந்தம் பதினாலுஞ்
சொன்னிலை சோடச மந்தமென் றோதிடே.

விளக்கம்:

பன்னிரண்டு கலைகளாக ஆதியிலிருந்தே இருக்கின்ற வயிரவியானவள் தனக்குள் அகாரக் கலையையும் (படைத்தல்) மாயைக் கலையையும் (மறைத்தல்) சேர்த்து பதினான்கு கலைகளாகவும் அதனோடு ஆதியும் அந்தமும் சேரும் போது பதினாறு கலைகளாக முடியும். இந்த பதினாறு கலைகளை சொல்கின்ற நிலையில் அவை பதினாறு எழுத்துக்கள் கொண்ட மந்திரமாக இருக்கின்றது. வயிரவியாக இருக்கும் இந்த மந்திரத்தை ஓதுங்கள்.

கருத்து: வயிரவியானவள் பன்னிரண்டு விதமான சூட்சுமமான செயல்களை செய்கின்றாள். அவள் இயக்கம் பெற்று உலக செயல்களுக்காக படைத்தல் மற்றும் மறைத்தலுக்கான காரியத்தை செய்யும் போது பதினான்கு செயல்களை செய்கின்றாள். இந்த செயல்களை எடுத்து ஒலிவடிவமாக சொல்லும் போதும் ஒளிவடிவமாக எழுதும் போதும் அவை பதினாறு எழுத்துக்கள் கொண்ட மந்திரமாக இருக்கின்றது. இந்த மந்திரத்தை ஓதுங்கள்.

குறிப்பு: இந்த வயிரவி மந்திரத்தை எப்படி பெற்றுத் தெரிந்து கொள்வது என்பதை பின்வரும் பாடல்களின் வழியாகத் தெரிந்து கொள்ளலாம். வயிரவி மந்திரத்தை குருவிடமிருந்து மந்திர தீட்சையாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

பாடல் #1076

பாடல் #1076: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

அந்தம் பதினா லதுவே வயிரவி
முந்து நடுவும் முடிவும் முதலாகச்
சிந்தைக் கமலத் தெழுகின்ற மாசத்தி
அந்தமு மாதியு மாகிநின் றாளே.

விளக்கம்:

பாடல் #1075 இல் உள்ளபடி பதினான்கு கலைகளாகவும் இருக்கின்ற வயிரவியானவள் தான் செய்கின்ற செயல்களில் முதல் நடு கடைசி என்ற மூன்று நிலைகளிலும் பதினான்கு விதமான செயல்களையும் செய்து கொண்டு கடைசியான செயலையே முதலாகவும் ஆரம்பித்து எப்போதும் செய்து கொண்டே இருக்கின்றாள். இவளின் மந்திரத்தை செபிக்கும் சாதகர்களின் தலை உச்சியிலுள்ள சகஸ்ரதளத்தில் இருக்கும் ஆயிரம் இதழ்கொண்ட தாமரை மலரிலிருந்து வெளிப்பட்டு எழும்பும் மாபெரும் சக்தியாகவும் அச்சக்தியில் ஆதியாகவும் அந்தமாகவும் நிற்கின்றாள்.

பாடல் #1077

பாடல் #1077: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

ஆகின்ற மூவரு மங்கே யடங்குவர்
போகின்ற பூதம் பொருந்து புராதரர்
சார்கின்ற சார்வுழிச் சாரார் சதிர்பெறப்
போகுந் திரிபுரை புண்ணியத் தோருக்கே.

விளக்கம்:

பாடல் #1076 இல் உள்ளபடி ஆதியும் அந்தமுமாகி நிற்கின்ற வயிரவி மந்திரத்தில் பிரம்மன் விஷ்ணு உருத்திரன் ஆகிய மூன்று தேவர்களும் அடங்கி இருக்கின்றனர். முக்தி எனும் பெரும்பயன் பெறுவதற்கு மூன்று தேவர்களும் அடங்கி இருக்கும் வயிரவி மந்திரத்தை பஞ்சபூதங்களால் ஆன அழியக்கூடிய உலகத்தைச் சார்ந்து இருக்கின்ற வாழ்க்கை முறையை விரும்பாமல் சாதகம் செய்கின்ற சாதகர்களாகவும் அவர்கள் செய்கின்ற சாதகமாகவும் செய்யப்படுகின்ற நோக்கமாகவும் இருந்து புண்ணியத்தை வயிரவி அருளுகின்றாள்.

பாடல் #1078

பாடல் #1078: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

புண்ணிய நந்தி புனிதன் திருவாகும்
எண்ணிய நாட்க ளிருபத்தேழ் சூழ்மதி
பண்ணிய வன்னி பகலோன் மதியீறு
திண்ணிய சிந்தைதன் றென்னனும் ஆமே.

விளக்கம்:

பாடல் #1077 இல் உள்ளபடி வயிரவியிடம் புண்ணித்தைப் பெற்று குருவாக இருப்பவர்கள் இறைவனின் தன்மையில் இருந்து வயிரவி மந்திரத்தையும் அதைச் சொல்லும் முறையையும் அருளுவார். குரு சொன்ன முறைப்படி வயிரவி மந்திரத்தை எண்ணத்தில் வைத்து இருபத்தேழு நாட்களும் சூரிய கலை சந்திர கலை ஆகியவற்றின் மூலம் உள்ளிழுத்த மூச்சுக்காற்றால் மூலாதாரத்தில் இருக்கும் அக்னியை வளர்த்து அதை முழுவதுமாக ஆராய்ந்து அதன்படி தொடர்ந்து சிறிதும் மாறாத சிந்தனையுடன் மானசீகமாக செபித்து சாதகம் செய்து வருபவர்களின் சிந்தனையில் பேரழகுடைய சிவபெருமான் வந்து வீற்றிருப்பான்.

கருத்து: குரு கூறிய முறைப்படி வயிரவி மந்திரத்தை சாதகம் செய்யும் போது நொடிப் பொழுது நேரம் கூட இறைவனைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் செய்பவர்களின் சிந்தனையில் இறைவன் வந்து வீற்றிருப்பான்.

பாடல் #1079

பாடல் #1079: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

தென்னன் றிருநந்தி சேவகன் தன்னொடும்
பொன்னங் கிரியுள பூதலம் போற்றிடும்
பன்னும் பரிபிடி யந்தம் பகவனோ
டுன்னுந் திரிபுரை யோதிநின் றானுக்கே.

விளக்கம்:

திருக்கயிலாய மலையில் உலகங்கள் யாவும் போற்றி வணங்கும் மாபெரும் குருவாகவும் அனைத்திற்கும் காவலனாகவும் வீற்றிருக்கும் பேரழகுடைய சிவபெருமானுடன் திரிபுரை சக்தியாகிய அம்மையும் சேர்ந்து இருக்கின்றாள். அது போலவே வயிரவி மந்திரத்தை இடைவிடாது செபித்து வரும் சாதகர்களின் உள்ளத்தையே கயிலாய மலையாகக் கொண்டு இறைவன் வந்து வீற்றிருக்கும் போது அவனுடனே ஒன்றாகக் கலந்து திரிபுரையும் வந்து வீற்றிருப்பாள்.

பாடல் #1080

பாடல் #1080: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

ஓதிய நந்தி யுணரும் திருவருள்
நீதியில் வேத நெறிவந் துரைசெயும்
போத மிருபத் தெழுநாள் புணர்மதி
சோதி வயிரவி சூலம்வந் தாளுமே.

விளக்கம்:

பாடல் #1079 இல் உள்ளபடி சாதகர்களின் உள்ளத்திற்குள் திரிபுரையோடு ஒன்றாகக் கலந்து வீற்றிருக்கும் இறைவனின் திருவருளால் தமக்குள்ளே அவரை குருவாக உணரலாம். அப்படி குருவாக உணர்ந்த இறைவனே தருமத்தின் படி தகுதியானவர்களுக்கு வேதங்களில் உள்ள முறையில் வயிரவி மந்திரத்தையும் அதை சாதகம் செய்யும் முறையையும் அருளுகின்றார். அவர் அருளிய முறையின் படி இருபத்தேழு நாட்கள் வயிரவி மந்திரத்தை சாதகம் செய்தால் அதன் சக்தி பெருகிக் கொண்டே இருந்து வயிரவியானவள் சூலம் தாங்கிய சோதி வடிவாக வந்து சாதகரை ஆட்கொள்வாள்.

பாடல் #1081

பாடல் #1081: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

சூலங் கபாலங்கை யேந்திய சூலிக்கு
நாலங் கரமுள நாகபா சாங்குசம்
மாலங் கயனறி யாத வடிவுக்கு
மேலங்க மாய்நின்ற மெல்லிய லாளே.

விளக்கம்:

பாடல் #1080 இல் உள்ளபடி சோதி வடிவாக வந்து ஆட்கொள்கின்ற வயிரவியானவள் சூலி என்கிற பெயருடன் நான்கு கரங்களில் முறையே சூலம், கபாலம், நாக பாசாணம், அங்குசம் ஆகியவைகளை ஏந்திக்கொண்ட உருவமாக அருளுகின்றாள். இவள் திருமாலும் பிரம்மனும் அறிய முடியாத அடிமுடி காணாத பெரும் உருவமாக அனைத்திற்கும் மேலானவளாக மெல்லிய உருவம் கொண்டு நிற்கின்றாள்.

கருத்து: வயிரவி என்பவள் சூலி என்கிற பெயருடன் இருப்பதை இப்பாடலில் உருவகிக்கலாம். அவளுடைய கைகளில் உள்ள சூலம் அடியவர்களை காப்பதையும், கபாலம் அடியவர்களின் பிறவிகளாகத் தொடரும் வினைகளை அறுப்பதையும், நாக பாசாணம் பிறவியோடு வரும் பந்தபாசங்களை அறுப்பதையும், அங்குசம் அடியவர்கள் மாயையில் சிக்கித் தவிக்கும் போது தடுப்பதையும் குறிக்கின்றது.