பாடல் #1045

பாடல் #1045: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (சக்தியின் வடிவமான மந்திரமும் திரிபுரை சக்கரமும்)

மாமாயை மாயை வயிந்தவம் வைகரி
ஓமாயை யுள்ளொளி யோராறு கோடியில்
தாமான மந்திரஞ் சத்திதன் மூர்த்திகள்
ஆமா யலவாந் திரிபுரை யாங்கே.

விளக்கம்:

மாமாயை, மாயை, வயிந்தவம், வைகரி, ஓமாயை, உள்ளொளி ஆகிய ஆறுவிதமான மாயையின் உச்ச நிலையில் உருவாகும் மந்திரங்கள் அனைத்தும் திரிபுரை சக்தியின் வடிவமாக இருக்கின்றது. இந்த வடிவங்களும் வடிவங்கள் இல்லாமலும் திருபுரை இருக்கின்றது.

குறிப்பு: பாடல் #401 இல் உள்ளபடி அசையும் சக்தியின் மையத்திலிருந்து தோன்றிய திரிபுரை எந்தெந்த வடிவங்களாகவும் வடிவம் இல்லாமல் இருக்கின்றது என்பதை இந்தப் பாடலில் அறியலாம்.

திரிபுரையின் ஆறு மந்திர வடிவங்கள்:

மாமாயை – வினைகள் இல்லாத சுத்த மாயை
மாயை – வினைகளோடு இருக்கும் மாயை
வயிந்தவம் – மாயையால் குழம்பி இருக்கும் ஞானசக்தி
வைகரி – முறைப்படி சத்தமாக கேட்கும் ஒலிவடிவம்
ஓமாயை – மாயையால் மறைக்கப்பட்ட பிரணவம்
உள்ளொளி – மாயையால் உருவான வெளிச்சமும் சத்தமும்

பாடல் #1046

பாடல் #1046: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (சக்தியின் வடிவமான மந்திரமும் திரிபுரை சக்கரமும்)

திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துப்
பரிபுரை நாரணி யாம்பல வன்னத்
திருள்புரை யீசி மனோன்மனி யென்ன
வருபல வாய்நிற்கு மாமாது தானே.

விளக்கம்:

பாடல் #1045 இல் உள்ளபடி உருவமாகவும் உருவம் இல்லாததாகவும் இருக்கின்ற திரிபுரை சக்தி சுந்தரி, அந்தரி, சிந்து, நாரணி, மனோன்மனி ஆகிய ஐந்து பெயர்களைக் கொண்ட தேவியர்களாக இருந்து சக்தியளிக்கும் மாபெரும் சக்தியாக இருக்கின்றாள்.

ஐந்து தேவியர்கள்:

சுந்தரி – பேரழகு உடைய வெள்ளை நிறத்தைக் கொண்டவள் (சரஸ்வதி)
அந்தரி – வானம் போன்ற செம்மையான கருமை நிறத்தைக் கொண்டவள் (பார்வதி)
சிந்துப் பரிபுரை – செந்தூரம் போன்ற சிவப்பு நிறத்தைக் கொண்டவள் (மகேஸ்வரி)
நாரணி – நாராயணனுக்கு தேவியாகிய நீல நிறத்தைக் கொண்டவள் (லட்சுமி)
இருள்புரை ஈசி மனோன்மனி – அண்டத்து இருளைப் போன்ற கருமை நிறத்தைக் கொண்டவள் (மனோன்மனி)

குறிப்பு: பிரம்மாவின் படைப்புத் தொழிலுக்கு சக்தியாக சரஸ்வதியும், திருமாலின் காக்கும் தொழிலுக்கு சக்தியாக லட்சுமியும், உருத்திரனின் அழிக்கும் தொழிலுக்கு சக்தியாக பார்வதியும், மகேஸ்வரனின் மறைத்தல் தொழிலுக்கு சக்தியாக மகேஸ்வரியும், சதாசிவனின் அருளல் தொழிலுக்கு சக்தியாக மனோன்மனியும் இருக்கிறார்கள்.

பாடல் #1047

பாடல் #1047: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (சக்தியின் வடிவமான மந்திரமும் திரிபுரை சக்கரமும்)

தானா யமைந்தவ முப்புரம் தன்னிடைத்
தானான மூவுரு வோருருத் தன்மையள்
தானான பொன்செம்மை வெண்ணிறத் தாள்கல்வி
தானான போகமும் முத்தியும் நல்குமே.

விளக்கம்:

திரிபுரை சக்தியானது மூன்று புரங்களில் இருக்கும் தேவர்களுக்கும் அவரவர்களின் தன்மைக்கேற்ற உருவங்களைக் கொண்ட தேவியர்களாக தாமாகவே அமைந்திருக்கும். திரிபுரையாக இருக்கும் இந்த சக்தியே பொன் நிறம் கொண்ட லட்சுமியாக இருந்து போகத்தையும், வெண்மை நிறம் கொண்ட சரஸ்வதியாக இருந்து ஞானத்தையும், செம்மையான கருமை நிறம் கொண்ட பார்வதியாக இருந்து மாயையை அழித்து முக்தியையும் அருளும் சக்தியாக இருக்கின்றார்கள்.

பாடல் #1048

பாடல் #1048: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

நல்குந் திரிபுரை நாதநா தாந்தங்கள்
பல்கும் பரவிந்து பாரண்ட மானவை
நல்கும் பரைஅபி ராமி அகோசரி
புல்கும் அருளும்அப் போதந்தந் தாளுமே.

விளக்கம்:

பாடல் #1047 இல் உள்ளபடி அருளுகின்ற திரிபுரை சக்தியானது ஒலியாகவும் அந்த ஒலியின் எல்லையாகவும் இருக்கின்றது. திரிபுரையே உணரமுடியாத பேரொளியாகவும் இருந்து உலகங்கள் அண்டசராசரங்கள் அனைத்திற்கும் பரவிப் பெருகுகின்றது. இந்த ஒலி ஒளியாக இருக்கும் திரிபுரையே அனைத்தையும் அருளுபவளாகவும் பேரழகு மிகுந்தவளாகவும் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவளாகவும் இருந்து அன்போடு ஞானத்தை அருளி ஆட்கொள்கின்றாள்.

கருத்து: பரை எனும் அசையும் சக்தியும், பேரழகு மிகுந்த அபிராமியும், ஐந்து கோசங்களுக்கும் அப்பாற்பட்ட அகோசரியும் ஆகிய இந்த மூன்று சக்தி வடிவங்களும் திரிபுரையாகும்.

பாடல் #1049

பாடல் #1049: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

தாளணி நூபுரஞ் செம்பட்டுத் தானுடை
வாரணி கொங்கை மலர்க்கன்னல் வாளிவில்
ஏரணி யங்குச பாச மெழில்முடி
காரணி மாமணிக் குண்டலக் காதிக்கே.

விளக்கம்:

அழகிய சிலம்பணிந்த திருவடிகளும், சிவந்த பட்டு அணிந்த உடலும், அழகிய கச்சையணிந்த மார்பும், அம்பைப் போன்ற மலர்க்கொத்து வில்லைப் போன்ற கரும்பு அங்குசம் பாசக் கயிறு ஆகியவற்றை அணிந்த நான்கு கரங்களும், அழகிய நீண்ட கருமையான கூந்தலும், பெரிய மணிகள் பதித்த குண்டலங்களை அணிந்த காதுகளும் கொண்ட உருவமாக திரிபுரை இருக்கின்றாள்.

கருத்து:

திரிபுரை சக்தியானது உலகத்தை இயக்கும் முறைகளை இந்தப் பாடலில் உருவகிக்கலாம். சிலம்பிலிருந்து வரும் ஒலியும் பட்டு போல் சிகப்பாக ஜொலிக்கும் ஒளியும் உலக உருவாக்கத்தின் (படைத்தல்) காரணத்தை குறிக்கின்றது. மார்பு கச்சை உலக உயிர்களுக்கு பாதுகாப்பாக (காத்தல்) உணவு அளிப்பதை குறிக்கின்றது. நான்கு கரங்களில் உள்ளவற்றில் மலர்க்கொத்து அருளலையும், வில்லைப் போன்ற கரும்பு அழித்தலையும், பாசக் கயிறு மாயையால் மறைத்தலையும், அங்குசம் அடியவர்கள் மாயையில் சிக்கித் தவிக்கும் போது தடுப்பதையும் குறிக்கின்றது. கருமையான கூந்தல் பரந்து விரிந்த அண்டங்களைக் குறிக்கின்றது. காதுகளில் அணிந்த குண்டலங்கள் சூரிய சந்திரனைக் குறிக்கின்றது.

பாடல் #1050

பாடல் #1050: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

குண்டலக் காதி கொலைவிற் புருவத்தள்
கொண்ட அரத்த நிறமன்னு கோலத்தள்
கண்டிகை யாரங் கதிர்முடி மாமதிச்
சண்டிகை நாற்றிசை தாங்கிநின் றாளே.

விளக்கம்:

பெரிய மணிகள் பதித்த குண்டலங்களை அணிந்த காதுகளும், வில்லைப் போன்ற வளைந்த புருவங்களையும், அரக்கு நிறத்தில் இருக்கும் திருமேனியையும், சிவமணி மாலையை ஆரமாகவும், தலையில் ஒளிர் விடும் நிலாவை கிரீடமாகவும் கொண்டு சண்டிகை எனும் பெயருடன் நான்கு திசைகளையும் தாங்கி நிற்கின்றவள் திரிபுரை சக்தியாகும்.

கருத்து:

திரிபுரை சக்தியானது சண்டிகை எனும் பெயருடன் நான்கு திசைகளையும் தாங்கி இருப்பதை இந்தப் பாடலில் உருவகிக்கலாம். பாடல் #1049 இல் உள்ளபடி காதுகளில் அணிந்த குண்டலங்கள் சூரிய சந்திரனைக் குறிக்கின்றது. கொலை செய்யும் வில்லைப் போன்ற வளைந்த புருவங்கள் அழிப்பதைக் குறிக்கின்றது. கழுத்திலிருக்கும் சிவமணி மாலை உலகத்தைச் சுற்றி நிற்கும் நவகிரகங்களைக் குறிக்கின்றது. நிலவிலிருந்து வரும் குளிர்ந்த ஒளி போன்ற தலைமுடி உலகங்களுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து பாதுகாப்பதை குறிக்கின்றது. அரக்கு நிற திருமேனி எப்போதும் நில்லாமல் அசைந்து கொண்டே இருக்கின்ற சக்தியின் வேகத்தை குறிக்கின்றது.

பாடல் #1051

பாடல் #1051: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

நின்ற திரிபுரை நீளும் புராதனி
குன்றலில் மோகினி மாதிருக் குஞ்சிகை
நன்றறி கண்டிகை நாற்காற் கரீடணி
துன்றிய நற்சுத்த தாமரைச் சுத்தையே.

விளக்கம்:

பாடல் #1050 இல் உள்ளபடி நான்கு திசைகளையும் தாங்கி நிற்கின்ற திரிபுரை சக்தி ஆதியிலிருந்தே தொடர்ந்து இருக்கின்ற பராசக்தியாகும். இவள் குறையில்லாத அழகுடன் அண்டசராசரங்கள் அனைத்தையும் வசப்படுத்தி வைத்திருப்பவள். மிகவும் அழகாக அசைந்தாடும் தலை முடியைக் கொண்டவள். நன்மையை வழங்கும் உருத்திராட்சத்தை அணிந்தவள். நான்கு கால்களுடன் கரிய உருவத்தைக் கொண்ட யானையை வாகனமாகக் கொண்ட கஜலட்சுமியானவள். இவள் சுத்தமாக மலராமல் நெருங்கி இருக்கும் தாமரை இதழ்களைப் போலத் தூய்மையானவள்.

கருத்து:

திரிபுரை சக்தியானது கஜலெட்சுமி எனும் பெயருடன் அனைத்தையும் தன் வசப்படுத்தி இருப்பதை இந்தப் பாடலில் உருவகிக்கலாம். புராதனி என்பது ஆதிகாலத்திலிருந்தே அண்டசராசரங்கள் இருக்கும் வரை எப்போதும் இருப்பதைக் குறிக்கின்றது. குறைவில்லாத மோகினி என்பது அண்டசராசரங்கள் அனைத்தையும் தன் செயலுக்கு ஏற்ப வசப்படுத்தி வைத்திருப்பதைக் குறிக்கின்றது. அழகாக அசைந்தாடும் தலை முடி என்பது அண்டசராசரங்கள் அனைத்தையும் தனது அசைவுக்கு ஏற்ப ஆட்டி வைப்பதைக் குறிக்கின்றது. உருத்திராட்ச மாலை என்பது பாடல் #1050 இல் குறிப்பிட்ட நவகிரகங்கள் உலகங்களுக்கு நன்மை தருவதை குறிக்கின்றது. நான்கு கால்களுடன் கரிய உருவத்தைக் கொண்ட யானை என்பது அனைத்தையும் அருளும் அஷ்ட லட்சுமிகளில் நடுநாயகமாக இருக்கும் கஜலட்சுமியைக் குறிக்கின்றது. சுத்தமான தாமரை என்பது தண்ணீரில் இருந்தாலும் தாமரையின் இதழ்களானது தண்ணீருடன் ஒட்டாமல் இருப்பதைப் போல திரிபுரையான கஜலட்சுமி அனைத்து செயல்களையும் செய்பவளாக இருந்தாலும் அதனுடன் ஒட்டாமல் விலகி இருப்பதைக் குறிக்கின்றது.

பாடல் #1052

பாடல் #1052: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

சுத்தவம் பாரத் தளித்த சுகோதயள்
வத்துவ மாயா ளுமாசத்தி மாபரை
அத்தகை யான மனோரணி தானுமாய்
வைத்தவக் கோல மதியவ ளாகுமே.

விளக்கம்:

பாடல் #1051 இல் உள்ளபடி தூய்மையும் அனைத்து ஞானத்தின் மொத்த உருவமாகவும் இருக்கும் திரிபுரை சக்தி கருணையோடு பேரின்பத்தை அளிப்பவள். அவள் அனைத்தையும் ஆட்டுவிக்கும் மெய்ப்பொருளான உமா சக்தி எனும் பெயருடைய மாபெரும் சக்தியாக இருக்கின்றாள். அத்தகைய மாபெரும் சக்தி அணுவுக்குள் அணுவைப் போல நுண்ணியமாகவும் இருக்கின்றாள். இப்படி இருக்கும் இவளது திருக்கோலமே மொத்த ஞானத்தின் உருவமாகும்.

கருத்து: திரிபுரை சக்தி உமா சக்தி என்ற பெயரில் ஞானத்தின் முழு உருவமாக இருந்து அதைத் தேடுபவர்களுக்கு கருணையோடு அருளுபவளாக இருக்கின்றாள்.

பாடல் #1053

பாடல் #1053: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

அவளை அறியா அமரரும் இல்லை
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன்று இல்லை
அவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே.

விளக்கம்:

திரிபுரை சக்தியைத் தவிர பிறப்பு இறப்பு இல்லாத அமரர்கள் யாரும் இல்லை. திரிபுரை சக்தியை நோக்கி செய்யப்படும் தவத்தை விட சிறந்த தவம் வேறு இல்லை. திரிபுரை சக்தியின் அருள் இல்லாமல் படைத்தல், மறைத்தல், காத்தல், அருளல், அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்யும் தெய்வங்களால் எதுவும் செய்ய இயலாது. திரிபுரை சக்தியில்லாமல் முக்தி அடையும் வேறு எந்த வழியையும் நான் அறியவில்லை.

கருத்து:

பாடல் #6 இல் இதே கருத்தை சிவனுக்கு அருளியிருக்கும் திருமூலர் இப்பாடலில் சக்திக்கும் அருளியிருக்கின்றார். இதன் மூலம் அசையா சக்தியாகிய இறைவனும் அசையும் சக்தியாகிய இறைவியும் ஒன்றே என்பதை உணர்ந்து கொள்ளலாம். இதற்கு உதாரணம் (பாடல் #383 இல் உள்ளது.) நவரத்தினத்தில் உள்ள வைரமும் அந்த வைரத்தில் இருந்து வரும் ஒளியும் வேறு வேறாய் அறியப்பட்டாலும் இரண்டும் ஒன்றே ஆகும். அது போல் சிவமும் சக்தியும் ஒன்றே ஆகும்.

பாடல் #1054

பாடல் #1054: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர்
அறிவா ரருவுரு வாம்அவள் என்பர்
அறிவார் கருமம் அவள்இச்சை என்பர்
அறிவார் பரனும் அவளிடத் தானே.

விளக்கம்:

ஞானத்தின் மொத்த உருவமாக இருக்கும் திரிபுரை சக்தியானவள் தமக்கு உண்மை ஞானத்தை வழங்க முடியும் என்பதை அறிந்து கொண்டவர்கள் பராசக்தி எனும் பெயருடைய அவளே பேரானந்தத்தின் உருவமாக இருப்பதையும். உருவம் அருவம் அருவுருவம் ஆகிய அனைத்துமாக இருப்பதையும். அனைத்தையும் தன் இச்சைப் படி ஆட்டி வைப்பதையும். இறைவனின் சரிபாதியாக இருப்பதையும் அறிவார்கள்.

கருத்து: திரிபுரை சக்தி ஞானத்தின் மொத்த உருவமாக பராசக்தி எனும் பெயருடன் இருப்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம்.

குறிப்பு: உருவம் என்பது பார்க்கக்கூடிய ரூபம் (உதாரணம் சிவபெருமான்), அருவம் என்பது உணரக்கூடிய சூட்சுமம் (உதாரணம் சக்தி), அருவுருவம் என்பது சூட்சுமத்தின் ரூப வடிவம் (உதாரணம் சிவலிங்கம்).