பாடல் #1639

பாடல் #1639: ஆறாம் தந்திரம் – 6. தவ நிந்தை (இறைவன் உள்ளுக்குள் இருப்பதை அறியாமல் வெளியில் தேடுவது பயனற்றது என்பதை கூறுவது)

ஒத்து மிகவு நின்றானை யுரைப்பது
பத்தி கொடுக்கும் பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுக்கு முனிவ னெனும்பதஞ்
சத்தான செய்வது தான்றவந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஒதது மிகவு நினறானை யுரைபபது
பததி கொடுககும பணிநதடி யாரதொழ
முததி கொடுககு முனிவ னெனுமபதஞ
சததான செயவது தானறவந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஒத்து மிகவும் நின்றானை உரைப்பது
பத்தி கொடுக்கும் பணிந்து அடியார் தொழ
முத்தி கொடுக்கும் முனிவன் எனும் பதம்
சத்து ஆன செய்வது தான் தவம் தானே.

பதப்பொருள்:

ஒத்து (தம்முடைய பக்குவத்திற்கு இணையாக கூடவே இருந்தாலும்) மிகவும் (பேரான்மாவாக மிகுந்து) நின்றானை (தம்மோடு சேர்ந்தே நிற்கின்றவனாகிய இறைவனின்) உரைப்பது (புகழ்களை தாம் போற்றி உரைப்பது)
பத்தி (பக்தியை) கொடுக்கும் (கொடுக்கும்) பணிந்து (அதனுடன் பணிவும் சேர்ந்து) அடியார் (அடியவர்கள்) தொழ (இறைவனை தொழும் போது)
முத்தி (அதுவே முக்தியையும்) கொடுக்கும் (கொடுப்பதற்கு காரணமாகிய) முனிவன் (முனிவன்) எனும் (என்கின்ற) பதம் (பக்குவத்தில்)
சத்து (தாம் செய்கின்ற சாதகத்தை இறை சக்தியோடு) ஆன (சிறப்பாக) செய்வது (செய்வது) தான் (தான்) தவம் (தவத்தை) தானே (தானாகவே கொடுக்கும்).

விளக்கம்:

தம்முடைய பக்குவத்திற்கு இணையாக கூடவே இருந்தாலும் பேரான்மாவாக மிகுந்து தம்மோடு சேர்ந்தே நிற்கின்றவனாகிய இறைவனின் புகழ்களை தாம் போற்றி உரைப்பது பக்தியை கொடுக்கும். அதனுடன் பணிவும் சேர்ந்து அடியவர்கள் இறைவனை தொழும் போது முனிவன் என்கின்ற பக்குவத்தில் தாம் செய்கின்ற சாதகத்தை இறை சக்தியோடு சிறப்பாக செய்வது முக்தியை கொடுப்பதற்கு காரணமாகிய தவத்தை தானாகவே கொடுக்கும்.

பாடல் #1638

பாடல் #1638: ஆறாம் தந்திரம் – 6. தவ நிந்தை (இறைவன் உள்ளுக்குள் இருப்பதை அறியாமல் வெளியில் தேடுவது பயனற்றது என்பதை கூறுவது)

மனத்திடை நின்ற மதிவா ளுருவி
யினத்திடை நீக்கி யிரண்டற வீர்ந்து
புனத்திடை நஞ்சையும் போக மறித்தாற்
றவத்திடை யாறொளி தன்னொளி யாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மனததிடை நினற மதிவா ளுருவி
யினததிடை நீககி யிரணடற வீரநது
புனததிடை நஞசையும பொக மறிததாற
றவததிடை யாறொளி தனனொளி யாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மனத்து இடை நின்ற மதி வாள் உருவி
இனத்து இடை நீக்கி இரண்டு அற ஈர்ந்து
புனத்து இடை நஞ்சையும் போக மறித்தால்
தவத்து இடை ஆறு ஒளி தன் ஒளி ஆமே.

பதப்பொருள்:

மனத்து (மனதிற்கு) இடை (நடுவில்) நின்ற (நிற்கின்ற) மதி (அறிவு வடிவான இறைவனின் ஞானமாகிய) வாள் (வாளினை) உருவி (தமது தவத்தின் வழியாக உருவி எடுத்து)
இனத்து (தம்மை சூழ்ந்து இருக்கின்ற பந்த பாசங்களாகிய) இடை (தளைகளையெல்லாம்) நீக்கி (அறுத்து நீக்கி) இரண்டு (தாமும் இறைவனும் வேறு வேறு என்கின்ற இருமைத் தத்துவத்தை) அற (அறுத்து) ஈர்ந்து (இறைவனோடு ஒன்றாக சேர்ந்து)
புனத்து (எவ்வளவு நீர் இருந்தாலும்) இடை (அதற்கு நடுவில்) நஞ்சையும் (ஒரு துளி நஞ்சை விட்டாலும் மொத்த நீரும் விஷமாகி விடுவது போல ஆசைகள் இல்லாத மனதில் ஒரு சிறு ஆசையும் இனி சேர்ந்து விடாமல்) போக (போகும் படி) மறித்தால் (தடுத்து நிறுத்தினால்)
தவத்து (தாம் செய்து வருகின்ற தவத்தின்) இடை (மேன்மை பெற்ற நிலையில்) ஆறு (தமக்குள் இருக்கும் ஆறு ஆதாரங்களாகிய) ஒளி (ஒளிகளின் மூலம் ஏறிச் சென்று ஏழாவது சக்கரமாகிய சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் பேரொளியாகிய இறைவனாகவே) தன் (தமது) ஒளி (ஒளியும்) ஆமே (ஆகி விடும்).

விளக்கம்:

மனதிற்கு நடுவில் நிற்கின்ற அறிவு வடிவான இறைவனின் ஞானமாகிய வாளினை தமது தவத்தின் வழியாக உருவி எடுத்து தம்மை சூழ்ந்து இருக்கின்ற பந்த பாசங்களாகிய தளைகளையெல்லாம் அறுத்து நீக்கி, தாமும் இறைவனும் வேறு வேறு என்கின்ற இருமைத் தத்துவத்தை அறுத்து, இறைவனோடு ஒன்றாக சேர்ந்து, எவ்வளவு நீர் இருந்தாலும் அதற்கு நடுவில் ஒரு துளி நஞ்சை விட்டாலும் மொத்த நீரும் விஷமாகி விடுவது போல ஆசைகள் இல்லாத மனதில் ஒரு சிறு ஆசையும் இனி சேர்ந்து விடாமல் போகும் படி தடுத்து நிறுத்தினால், தாம் செய்து வருகின்ற தவத்தின் மேன்மை பெற்ற நிலையில் தமக்குள் இருக்கும் ஆறு ஆதாரங்களாகிய ஒளிகளின் மூலம் ஏறிச் சென்று, ஏழாவது சக்கரமாகிய சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் பேரொளியாகிய இறைவனாகவே தமது ஒளியும் ஆகி விடும்.

பாடல் #1637

பாடல் #1637: ஆறாம் தந்திரம் – 6. தவ நிந்தை (இறைவன் உள்ளுக்குள் இருப்பதை அறியாமல் வெளியில் தேடுவது பயனற்றது என்பதை கூறுவது)

மனத்துறை மாக்கட லேழுங்கை நீங்கித்
தவத்திடை யாளர்தஞ் சர்வத்து வந்தார்
பவத்திடை யாளரவர் பணி கேட்கில்
முகத்திடை நந்தியை முந்தலு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மனததுறை மாககட லெழுஙகை நீஙகித
தவததிடை யாளரதஞ சரவதது வநதார
பவததிடை யாளரவர பணி கெடகில
முகததிடை நநதியை முநதலு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மனத்து உறை மா கடல் ஏழும் கை நீங்கி
தவத்து இடை ஆளர் தம் சர்வத்து வந்தார்
பவத்து இடை ஆளர் அவர் பணி கேட்கில்
முகத்து இடை நந்தியை முந்தலும் ஆமே.

பதப்பொருள்:

மனத்து (மனதில்) உறை (வீற்றிருக்கின்ற) மா (மாபெரும்) கடல் (கடலாகிய) ஏழும் (மாயை, காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன் ஆகிய ஏழு விதமான மாயைகளாகிய) கை (குற்றங்களும்) நீங்கி (நீங்கி போகும் படி)
தவத்து (தாம் செய்கின்ற தவத்தில்) இடை (தகுதி) ஆளர் (பெற்றவர்கள்) தம் (தமது) சர்வத்து (தவத்தில் முழுமை பெற்று) வந்தார் (வந்தார்கள்)
பவத்து (வாழ்க்கையின்) இடை (நடுவில்) ஆளர் (சிக்கிக் கொண்டு தவம் செய்ய முயற்சி செய்கின்றவர்கள்) அவர் (தமது தவத்தில் முழுமை பெற்ற அவர்களின்) பணி (தொண்டு என்ன விதம் என்பதை) கேட்கில் (கேட்டுத் தெளிந்து அதை கடை பிடித்து தாமும் தவம் புரிந்தால்)
முகத்து (தங்களின் முகத்தின்) இடை (நடுவில்) நந்தியை (குருநாதராகிய இறைவனை) முந்தலும் (தரிசிக்கும்) ஆமே (நிலையை பெறுவார்கள்).

விளக்கம்:

மனதில் வீற்றிருக்கின்ற மாபெரும் கடலாகிய மாயை, காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன் ஆகிய ஏழு விதமான மாயைகளாகிய குற்றங்களும் நீங்கி போகும் படி தாம் செய்கின்ற தவத்தில் தகுதி பெற்றவர்கள் தமது தவத்தில் முழுமை பெற்று வந்தார்கள். அவ்வாறு வந்தவர்களிடம் வாழ்க்கையின் நடுவில் சிக்கிக் கொண்டு தவம் செய்ய முயற்சி செய்கின்றவர்கள் அவர்கள் செய்த தொண்டு என்ன விதம் என்பதை கேட்டுத் தெளிந்து அதை கடை பிடித்து தாமும் தவம் புரிந்தால் தங்களின் முகத்தின் நடுவில் குருநாதராகிய இறைவனை தரிசிக்கும் நிலையை பெறுவார்கள்.

பாடல் #1636

பாடல் #1636: ஆறாம் தந்திரம் – 6. தவ நிந்தை (இறைவன் உள்ளுக்குள் இருப்பதை அறியாமல் வெளியில் தேடுவது பயனற்றது என்பதை கூறுவது)

கூடித் தவஞ்செய்து கண்டேன் குரைகழல்
தேடித் தவஞ்செய்து கண்டேன் சிவகதி
வாடித் தவஞ்செய்வ தேதமிவை களைந்
தூடிற் பலவுல கோரெத்தவ மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கூடித தவஞசெயது கணடென குரைகழல
தெடித தவஞசெயது கணடென சிவகதி
வாடித தவஞசெயவ தெதமிவை களைந
தூடிற பலவுல கொரெததவ மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கூடி தவம் செய்து கண்டேன் குரை கழல்
தேடி தவம் செய்து கண்டேன் சிவ கதி
வாடி தவம் செய்வது ஏதம் இவை களைந்து
ஊடில் பல உலகோர் எத் தவம் ஆமே.

பதப்பொருள்:

கூடி (மனம் ஒன்று கூடி) தவம் (தவம்) செய்து (செய்து) கண்டேன் (தரிசித்தேன்) குரை (இறைவனின் பேரழகு வாய்ந்த) கழல் (திருவடிகளை)
தேடி (அவரை அடைய வேண்டும் என்று எமக்குள்ளே தேடி) தவம் (தவம்) செய்து (செய்து) கண்டேன் (கண்டு) சிவ (சிவனின்) கதி (திருவடியே சரணாகதியாக அடைந்தேன்)
வாடி (இவ்வாறு மனம் ஒன்று படாமலும், இறைவனை அடைய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலும், உடலை வருத்திக் கொண்டும், வெறும் உலக ஆசைகளுக்காகவும்) தவம் (தவம்) செய்வது (செய்வது) ஏதம் (குற்றமாகும்) இவை (இவைகளை எல்லாம்) களைந்து (நீக்கி விட்டு தவம் செய்யாமல்)
ஊடில் (தமக்குள்ளே ஒன்றுக்கொன்று மாறுபட்ட சிந்தனைகளால் குழப்பிக் கொண்டு) பல (பல) உலகோர் (உலகத்தவர்கள் செய்கின்றதெல்லாம்) எத் (எந்த) தவம் (தவம்) ஆமே (ஆகும்?).

விளக்கம்:

மனம் ஒன்று கூடி தவம் செய்து இறைவனின் பேரழகு வாய்ந்த திருவடிகளை தரிசித்தேன். அவரை அடைய வேண்டும் என்று எமக்குள்ளே தேடி தவம் செய்து கண்டு சிவனின் திருவடியே சரணாகதியாக அடைந்தேன். இவ்வாறு மனம் ஒன்று படாமலும் இறைவனை அடைய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலும் உடலை வருத்திக் கொண்டும் வெறும் உலக ஆசைகளுக்காகவும் தவம் செய்வது குற்றமாகும். இவைகளை எல்லாம் நீக்கி விட்டு தவம் செய்யாமல் தமக்குள்ளே ஒன்றுக்கொன்று மாறுபட்ட சிந்தனைகளால் குழப்பிக் கொண்டு பல உலகத்தவர்கள் செய்கின்றதெல்லாம் எந்த தவம் ஆகும்? ஆகாது.

பாடல் #1635

பாடல் #1635: ஆறாம் தந்திரம் – 6. தவ நிந்தை (இறைவன் உள்ளுக்குள் இருப்பதை அறியாமல் வெளியில் தேடுவது பயனற்றது என்பதை கூறுவது)

விளைவறி வார்பண்டை மெய்த்தவஞ் செய்வார்
விளைவறி வார்பண்டை மெய்யுரை செய்வார்
விளைவறி வார்பண்டை மெய்யறஞ் செய்வார்
விளைவறி வார்விண்ணின் மண்ணின்மிக் காரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

விளைவறி வாரபணடை மெயததவஞ செயவார
விளைவறி வாரபணடை மெயயுரை செயவார
விளைவறி வாரபணடை மெயயறஞ செயவார
விளைவறி வாரவிணணின மணணினமிக காரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

விளைவு அறிவார் பண்டை மெய் தவம் செய்வார்
விளைவு அறிவார் பண்டை மெய் உரை செய்வார்
விளைவு அறிவார் பண்டை மெய் அறம் செய்வார்
விளைவு அறிவார் விண்ணின் மண்ணின் மிக்காரே.

பதப்பொருள்:

விளைவு (தவத்தினால் கிடைக்கும் பயன் இது என்பதை) அறிவார் (அறிந்து உணர்ந்தவர்களே) பண்டை (ஆதிகாலத்தில் இருந்து) மெய் (உண்மையான) தவம் (தவத்தை) செய்வார் (செய்கின்றார்கள்)
விளைவு (தவத்தினால் கிடைக்கும் பயன் இது என்பதை) அறிவார் (அறிந்து உணர்ந்தவர்களே) பண்டை (ஆதிகாலத்தில் இருந்து) மெய் (உண்மையாக) உரை (தாம் அறிந்து கொண்ட தவத்தை செய்கின்ற வழிமுறைகளை தகுதியானவர்களும் அறிந்து கொள்ளும் படி காட்டிக்) செய்வார் (கொடுப்பார்கள்)
விளைவு (தவத்தினால் கிடைக்கும் பயன் இது என்பதை) அறிவார் (அறிந்து உணர்ந்தவர்களே) பண்டை (ஆதிகாலத்தில் இருந்து) மெய் (உண்மையான) அறம் (தர்மத்தை) செய்வார் (செய்தவர்கள் ஆகின்றார்கள்)
விளைவு (அதனால் தவத்தினால் கிடைக்கும் பயன் இது என்பதை) அறிவார் (அறிந்து உணர்ந்தவர்களே) விண்ணின் (விண்ணுலகில் இருக்கும் தேவர்களுக்கும்) மண்ணின் (மண்ணுலகில் இருக்கின்ற உயிர்களுக்கும்) மிக்காரே (உயர்ந்தவர்களாக இருக்கின்றார்கள்).

விளக்கம்:

தவத்தினால் கிடைக்கும் பயன் இது என்பதை அறிந்து உணர்ந்தவர்களே ஆதிகாலத்தில் இருந்து உண்மையான தவத்தை செய்கின்றார்கள். தவத்தினால் கிடைக்கும் பயனை அறிந்து உணர்ந்து கொண்டவர்கள் அந்த பயனை மற்றவர்களும் பெறுவதற்காக தாம் அறிந்து கொண்ட தவத்தை செய்யும் வழிமுறைகளை தகுதியானவர்களும் அறிந்து கொள்ளும் படி காட்டிக் கொடுக்கின்றார்கள். இப்படி மற்றவர்களும் பயன் பெற வழி வகுத்துக் கொடுத்ததினால் உண்மையான தர்மத்தை செய்தவர்கள் ஆகின்றார்கள். ஆகவே இவர்களே விண்ணுலகில் இருக்கும் தேவர்களுக்கும் மண்ணுலகில் இருக்கின்ற உயிர்களுக்கும் உயர்ந்தவர்களாக இருக்கின்றார்கள்.

பாடல் #1634

பாடல் #1634: ஆறாம் தந்திரம் – 6. தவ நிந்தை (இறைவன் உள்ளுக்குள் இருப்பதை அறியாமல் வெளியில் தேடுவது பயனற்றது என்பதை கூறுவது)

கத்தவும் வேண்டாங் கருத்தறிந் தாறினாற்
சத்தமும் வேண்டாஞ் சமாதியைக் கூடினாற்
சுத்தமும் வேண்டாந் துடக்கற்று நிற்றலாற்
சித்தமும் வேண்டாஞ் செயலற் றிருக்கிலே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கததவும வெணடாங கருததறிந தாறினாற
சததமும வெணடாஞ சமாதியைக கூடினாற
சுததமும வெணடாந துடககறறு நிறறலாற
சிததமும வெணடாஞ செயலற றிருககிலெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கத்தவும் வேண்டாம் கருத்து அறிந்து ஆறினால்
சத்தமும் வேண்டாம் சமாதியை கூடினால்
சுத்தமும் வேண்டாம் துடக்கு அற்று நிற்றல் ஆல்
சித்தமும் வேண்டாம் செயல் அற்று இருக்கிலே.

பதப்பொருள்:

கத்தவும் (மந்திரங்களை அசபையாகவோ உரக்கவோ சொல்லி செபிக்க) வேண்டாம் (தேவை இல்லை) கருத்து (மாயை நீங்கிய உண்மையை) அறிந்து (அறிந்து) ஆறினால் (மனம் அமைதி அடைந்து விட்டால்)
சத்தமும் (மனதில் எந்த விதமான எண்ணங்களும்) வேண்டாம் (தேவை இல்லை) சமாதியை (சமாதி நிலையை) கூடினால் (அடைந்து விட்டால்)
சுத்தமும் (வெளிப்புற சுத்தங்கள்) வேண்டாம் (தேவை இல்லை) துடக்கு (உள்ளுக்குள் எந்த விதமான அழுக்குகளும்) அற்று (இல்லாமல்) நிற்றல் (நிற்கின்ற) ஆல் (நிலையை அடைந்து விட்டால்)
சித்தமும் (சிந்தனை செய்வதற்கு எதுவுமே) வேண்டாம் (தேவை இல்லை) செயல் (செயல்) அற்று (இல்லாமல்) இருக்கிலே (இருக்கின்ற நிலையை அடைந்து விட்டால்).

விளக்கம்:

மாயை நீங்கிய உண்மையை அறிந்து மனம் அமைதி அடைந்து விட்டால் மந்திரங்களை அசபையாகவோ உரக்கவோ சொல்லி செபிக்க வேண்டியது இல்லை. சமாதி நிலையை அடைந்து விட்டால் எந்த விதமான எண்ணங்களும் இருக்காது. உள்ளுக்குள் எந்த விதமான அழுக்குகளும் இல்லாமல் நிற்கின்ற நிலையை அடைந்து விட்டால் வெளிப்புற சுத்தங்கள் எதுவும் தேவை இல்லை. சிந்தனை செய்வதற்கு எதுவுமே தேவை இருக்காது செயலே இல்லாமல் இருக்கின்ற நிலையை அடைந்து விட்டதால்.

பாடல் #1633

பாடல் #1633: ஆறாம் தந்திரம் – 6. தவ தூடணம் (இறைவன் உள்ளுக்குள் இருப்பதை அறியாமல் வெளியில் தேடுவது பயனற்றது என்பதை கூறுவது)

ஓதலும் வேண்டா முயிர்க்குயி ருள்ளுற்றாற்
காதலும் வேண்டா மெய்காய மிடங்கண்டாற்
சாதலும் வேண்டாஞ் சமாதியைக் கூடினாற்
போதலும் வேண்டாம் புலன்வழி போகார்க்கே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஓதலும வெணடா முயிரககுயி ருளளுறறாற
காதலும வெணடா மெயகாய மிடஙகணடாற
சாதலும வெணடாஞ சமாதியைக கூடினாற
பொதலும வெணடாம புலனவழி பொகாரககெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஓதலும் வேண்டாம் உயிர்க்கு உயிர் உள் உற்றால்
காதலும் வேண்டாம் மெய் காயம் இடம் கண்டால்
சாதலும் வேண்டாம் சமாதியை கூடினால்
போதலும் வேண்டாம் புலன் வழி போகார்க்கே.

பதப்பொருள்:

ஓதலும் (மந்திரங்களை ஓதுதல்) வேண்டாம் (தேவை இல்லை) உயிர்க்கு (தங்களின் உயிருக்கு) உயிர் (உயிராக) உள் (உள்ளுக்குள் இருக்கின்ற இறைவனை) உற்றால் (உணர்ந்து அடைந்து விட்டால்)
காதலும் (எந்த விதமான விருப்பங்களும்) வேண்டாம் (தேவை இல்லை) மெய் (அரியதான பேருண்மையாகிய சிவப் பரம்பொருள்) காயம் (தங்களின் உடலையே) இடம் (கோயிலாக) கண்டால் (ஏற்றுக் கொண்டு வீற்றிருந்தால்)
சாதலும் (அழிவு என்பதே) வேண்டாம் (தேவை இல்லை) சமாதியை (சமாதி நிலையை) கூடினால் (கைவரப் பெற்று விட்டால்)
போதலும் (இறைவனை தேடி எங்கும் போவது) வேண்டாம் (தேவை இல்லை) புலன் (ஐந்து புலன்களும்) வழி (காட்டுகின்ற வழிகளில்) போகார்க்கே (போகாமல் அவற்றை தன் இஷ்டத்திற்கு மாற்றி இருப்பவர்களுக்கு).

விளக்கம்:

தங்களின் உயிருக்கு உயிராக உள்ளுக்குள் இருக்கின்ற இறைவனை உணர்ந்து அடைந்து விட்டால் மந்திரங்களை ஓத வேண்டியது இல்லை. அரியதான பேருண்மையாகிய சிவப் பரம்பொருள் தங்களின் உடலையே கோயிலாக ஏற்றுக் கொண்டு வீற்றிருந்தால் எந்த விதமான தேவைகளும் இல்லை. சமாதி நிலையை கைவரப் பெற்று விட்டால் உடலுக்கு அழிவு என்பதே இருக்காது. ஐந்து புலன்களும் காட்டுகின்ற வழிகளில் போகாமல் அவற்றை தன் இஷ்டத்திற்கு மாற்றி இருப்பவர்களுக்கு இறைவனை தேடி எங்கும் போக வேண்டியது இல்லை.

பாடல் #1632

பாடல் #1632: ஆறாம் தந்திரம் – 5. தவம் (துறவின் முழுமை பெற்ற நிலையே தவம் ஆகும்)

தவம்வேண்டு ஞானந் தலைபட வேண்டிற்
றவம்வேண்டா ஞான சமாதிகை கூடிற்
றவம்வேண்டா மச்சக சன்மார்க்கத் தோர்க்குத்
தவம்வேண்டா மாற்றந் தனையறி யாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தவமவெணடு ஞானந தலைபபட வெணடிற
றவமவெணடா ஞான சமாதிகை கூடிற
றவமவெணடா மசசக சனமாரககத தொரககுத
தவமவெணடா மாறறந தனையறி யாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தவம் வேண்டும் ஞானம் தலை பட வேண்டில்
தவம் வேண்டாம் ஞான சாமாதி கை கூடில்
தவம் வேண்டாம் அச் சக சன் மார்க்கத்தோர்க்கு
தவம் வேண்டாம் மாற்றம் தனை அறியாரே.

பதப்பொருள்:

தவம் (தவ நிலை என்பது) வேண்டும் (வேண்டும்) ஞானம் (உண்மை ஞானம்) தலை (தலை) பட (படுகின்ற சித்தியாகின்ற நிலை) வேண்டில் (வேண்டும் என்றால்)
தவம் (தவ நிலை என்பதே) வேண்டாம் (தேவை இல்லை) ஞான (உண்மை ஞானமும்) சாமாதி (சமாதி நிலையும்) கை (அடைந்து) கூடில் (விட்டால்)
தவம் (தவ நிலை என்பதே) வேண்டாம் (தேவை இல்லை) அச் (அந்த) சக (சகம்) சன் (சன் ஆகிய) மார்க்கத்தோர்க்கு (மார்க்கங்களை கடை பிடிப்போர்களுக்கு)
தவம் (தவ நிலை என்பதே) வேண்டாம் (தேவை இல்லை) மாற்றம் (மாற்றம்) தனை (அதனை) அறியாரே (அறியாதவர்களுக்கு).

விளக்கம்:

உண்மை ஞானம் என்பது சித்தியாக வேண்டும் என்றால் அதற்கு தவம் செய்ய வேண்டும். உண்மை ஞானமும் சமாதி நிலையும் கை கூடப் பெற்றவர்களுக்கும் சன் மார்க்கம் சக மார்க்கம் ஆகிய மார்க்கங்களை கடை பிடிப்பவர்களுக்கும் மாற்றமே இல்லாத மேன்மையான சமாதி நிலையை அடைந்து விட்டவர்களுக்கும் எந்த விதமான தவ நிலையும் வேண்டாம்.

பாடல் #1631

பாடல் #1631: ஆறாம் தந்திரம் – 5. தவம் (துறவின் முழுமை பெற்ற நிலையே தவம் ஆகும்)

சாத்திர மோதுஞ் சதிர்களை விட்டுநீர்
மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்
பார்த்தவப் பார்வை பசுமரத் தாணிபோ
லார்த்த பிறவி அகலவிட் டோடுமே

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சாததிர மொதுஞ சதிரகளை விடடுநீர
மாததிரைப பொது மறிததுளளெ நொககுமின
பாரததவப பாரவை பசுமரத தாணிபொ
லாரதத பிறவி யகலவிட டொடுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சாத்திரம் ஒதும் சதிர்களை விட்டு நீர்
மாத்திரை போது மறித்து உள்ளே நோக்குமின்
பார்த்த தவ பார்வை பசு மரத்து ஆணி போல்
ஆர்த்த பிறவி அகல விட்டு ஓடுமே.

பதப்பொருள்:

சாத்திரம் (சாத்திரங்களை படித்து விட்டு) ஒதும் (அதை பேசித் திரிகின்ற) சதிர்களை (பெருமைகளை) விட்டு (விட்டு விடுங்கள்) நீர் (நீங்கள்)
மாத்திரை (ஒரு கண) போது (நேரமாவது) மறித்து (மூச்சுக்காற்றை தடுத்து நிறுத்தி) உள்ளே (தமக்குள்ளே) நோக்குமின் (உற்றுப் பாருங்கள்)
பார்த்த (அப்படி பார்த்த) தவ (அந்த தவ) பார்வை (பார்வையானது) பசு (பசுமையான) மரத்து (மரத்தில்) ஆணி (அடித்த ஆணி) போல் (போல உறுதியாக நினைவில் நின்று)
ஆர்த்த (போராடுகின்ற கடினமான) பிறவி (பிறவிகள் அனைத்தையும்) அகல (தம்மை விலகி) விட்டு (விட்டு) ஓடுமே (ஓடி விடும்).

விளக்கம்:

சாத்திரங்களை படித்து விட்டு அதன் பெருமைகளையே பேசித் திரிகின்றதை விட்டு விடுங்கள் நீங்கள். ஒரு கண நேரமாவது மூச்சுக்காற்றை தடுத்து நிறுத்தி தமக்குள்ளே உற்றுப் பாருங்கள். அப்படி பார்த்த அந்த தவ பார்வையானது பசுமையான மரத்தில் அடித்த ஆணி போல உறுதியாக நினைவில் நின்று போராடுகின்ற கடினமான பிறவிகள் அனைத்தையும் தம்மை விட்டு விலகி ஓடி விடும்.

பாடல் #1630

பாடல் #1630: ஆறாம் தந்திரம் – 5. தவம் (துறவின் முழுமை பெற்ற நிலையே தவம் ஆகும்)

அமைச்சரு மானைக் குழாமு மரசும்
பகைத்தெழு பூசலுட் பட்டன் னடுவே
யமைத்ததோர் ஞானமு மாக்கமு நோக்கி
யிமைத்தழி யாதிருப் பாரவர் தாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அமைசசரு மானைக குழாமு மரசும
பகைததெழு பூசலுட படடன னடுவெ
யமைதததொர ஞானமு மாககமு நொககி
யிமைததழி யாதிருப பாரவர தாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அமைச்சரும் ஆனை குழாமும் அரசும்
பகைத்து எழு பூசல் உள் பட்டு அந் நடுவே
அமைத்தது ஓர் ஞானமும் ஆக்கமும் நோக்கி
இமைத்து அழியாது இருப்பார் அவர் தாமே.

பதப்பொருள்:

அமைச்சரும் (நுண்ணறிவு மிக்க அமைச்சர்களைக் கொண்டு) ஆனை (வலிமை மிக்க யானைப்) குழாமும் (படைகளுடன்) அரசும் (உயர்ந்த பேரரசர்களாக)
பகைத்து (இருந்தாலும் ஒரு பகை நாட்டு அரசன் அவர்கள் மேல் கொண்ட விரோதத்தால்) எழு (எழுகின்ற) பூசல் (போருக்கு) உள் (உள்ளே) பட்டு (அகப் பட்டுக் கொண்டு அழிந்து போகின்றார்கள்) அந் (அப்படி அழிகின்றவர்களுக்கு) நடுவே (நடுவில்)
அமைத்தது (இறைவன் தமது மாபெரும் கருணையினால் வைத்து அருளிய) ஓர் (ஒரு) ஞானமும் (உண்மை ஞானத்தையும்) ஆக்கமும் (அதனால் கிடைக்கின்ற முக்தி பேறையும்) நோக்கி (குறிக்கோளாகக் கொண்டு)
இமைத்து (ஒரு கணப் பொழுதும் இறைவனை மறக்காமல் தவ நிலையில் இருந்து) அழியாது (எப்போதும் அழிந்து போகாத நிலையில்) இருப்பார் (இருப்பவர்களே) அவர் (தவசிகள்) தாமே (ஆவார்கள்).

விளக்கம்:

நுண்ணறிவு மிக்க அமைச்சர்களைக் கொண்டு வலிமை மிக்க யானைப் படைகளுடன் உயர்ந்த பேரரசர்களாக இருந்தாலும் ஒரு பகை நாட்டு அரசன் அவர்கள் மேல் கொண்ட விரோதத்தால் எழுகின்ற போருக்கு உள்ளே அகப் பட்டுக் கொண்டு அழிந்து போகின்றார்கள். அப்படி அழிகின்றவர்களுக்கு நடுவில் இறைவன் தமது மாபெரும் கருணையினால் வைத்து அருளிய ஒரு உண்மை ஞானத்தையும் அதனால் கிடைக்கின்ற முக்தி பேறையும் குறிக்கோளாகக் கொண்டு ஒரு கணப் பொழுதும் இறைவனை மறக்காமல் தவ நிலையில் இருந்து எப்போதும் அழிந்து போகாத நிலையில் இருப்பவர்களே தவசிகள் ஆவார்கள்.