பாடல் #492

பாடல் #492: இரண்டாம் தந்திரம் – 15. மூவகைச் சீவவர்க்கம் (மூன்று விதமான உயிர்கள்)

சத்தி சிவன்விளை யாட்டால் உயிராக்கி
ஒத்த இருமாயா கூட்டத் திடைபூட்டிச்
சுத்தம தாகுந் துரியம் பிரிவித்துச்
சித்தம் புகுந்து சிவமய மாக்குமே.

விளக்கம்:

அசையா சக்தியாகிய சிவமும் அசையும் சக்தியாகிய சக்தியும் தங்கள் திருவிளையாட்டால் ஆன்மா ஆசைப்படும் போது அதைத் தீர்த்துக் கொள்ள வினைகளைச் சேர்த்து உயிராக்கி உலகத்தில் பிறக்க வைத்து அந்த உயிருக்கு சுத்த மாயை அசுத்த மாயை என்ற இரண்டு விதமான மாயைகளையும் வினைகள் தீரும் வரை உடலுக்குள் வைத்து பூட்டுகின்றார்கள். பின்பு உயிர்களின் எண்ணத்தில் புகுந்து சுத்த மாயை அசுத்த மாயை ஆகிய இரண்டு விதமான மாயைகளையும் நீங்கி உயிர் உருவாகுவதற்கு முன்பு இருந்த துரியம் எனும் ஆழ்நிலை உறக்க நிலையில் ஆன்மாவை சிவமாக்குகின்றார்கள்.

உட்கருத்து: இறைவன் தனது திருவிளையாட்டினால் தன்னிடம் துரிய நிலையில் கலந்திருக்கும் ஆன்மாவை மாயையை சேர்த்து பிறக்க வைத்து பின்பு மாயை நீக்கி தன்னிடமே சேர்த்துக்கொள்கிறார். துரிய நிலையையும் மாயை சேரும் நிலையையும் பாடல் #460 இல் காண்க.

பாடல் #493

பாடல் #493: இரண்டாம் தந்திரம் – 15. மூவகைச் சீவவர்க்கம் (மூன்று விதமான உயிர்கள்)

விஞ்ஞானர் நால்வர் மெய்பிரள யாகலத்
தஞ்ஞானர் மூவருந் தாங்கு சகலத்தின்
அஞ்ஞானர் மூவரு மாகும் பதின்மராம்
விஞ்ஞான ராதிகளும் வேற்றுமை தானே.

விளக்கம்:

உடலோடு இருக்கும் போதே இறைவனை உணர்ந்து உண்மை ஞானத்தை அடைந்தவர்கள் அதமர், மத்திமர், உத்தமர், சித்தர் என நான்கு வகைப்படுவார்கள். இவர்கள் ஆணவ மலத்தை மட்டுமே கொண்ட விஞ்ஞானர் ஆவார்கள்.

மாயை நீங்கப் பெற்றாலும் ஆணவமும் கன்மமும் நீங்கப் பெறாததால் பிரளய ஊழிக்காலம் வரை இறைவனோடு கலப்பதற்கு காத்திருப்பவர்கள் அபக்குவர், பரமுத்தர், அபரமுத்தர் என மூன்று வகைப்படுவார்கள். இவர்கள் மெய்பிரளய அகலர் ஆவார்கள்.

ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் கொண்டவர்கள் முத்தர், சாதகர், சகலர் என்று மூன்று வகைப்படுவார்கள். இவர்கள் அஞ்ஞானர் ஆவார்கள்.

விஞ்ஞானர், மெய்பிரளய அகலர், அஞ்ஞானர் என உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் 3 பகுதியாக பத்து வகையினராக வேறுபட்டு இருக்கின்றார்கள்.

குறிப்பு:

முதல் வகையினர் கன்மம், மாயை அனைத்தும் நீங்கப்பெற்று நான் என்ற எண்ணம் நீங்கி ஞானம் அடைந்தாலும் இறைவனுடன் கலக்காமல் தனிப்பட்ட தனது பெயரினால் அழைக்கப்படுவதினால் ஆணவமலம் இருக்கின்றது. இவர்கள் மரணமில்லாத உடலுடன் இருக்கும் சித்தர்கள், யோகிகள், ரிஷிகள், தேவர்கள் ஆகின்றார்கள்.

2 வது வகையினர் மாயை நீங்கி ஆணவம் கன்மம் ஆகிய இரண்டு மலங்களை மட்டுமே உடையவர்கள். இவர்கள் இறைவனை உணர்ந்து ஞானம் அடைந்தாலும் இறைவனோடு கலக்காமல் உலக நன்மைக்காக அவ்வப்போது மீண்டும் மீண்டும் உடலேடுத்து பிறந்து இறப்பார்கள் இவர்கள் பிரளய ஊழிக்காலம் வரை இறைவனோடு கலப்பதற்கு காத்திருக்கும் ஞானிகள் ஆவார்கள்.

3 வது வகையினர் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களையும் கொண்டு உலக வாழ்க்கையிலேயே மூழ்கி இருக்கின்றவர்கள்.

ஆன்மாவின் மூன்று வகைகளும் பத்து உப வகைகளும்:

 1. விஞ்ஞானர் = 1. அதமர், 2. மத்திமர், 3. உத்தமர், 4. சித்தர்.
 2. மெய்பிரளய அகலர் = 5. அபக்குவர், 6. பரமுத்தர், 7. அபரமுத்தர்.
 3. அஞ்ஞானர் = 8. முத்தர், 9. சாதகர், 10. சகலர்.

பாடல் #494

பாடல் #494: இரண்டாம் தந்திரம் – 15. மூவகைச் சீவவர்க்கம் (மூன்று விதமான உயிர்கள்)

விஞ்ஞானர் கேவலத் தாரது விட்டவர்
தஞ்ஞானர் அட்டவித் தேசுரஞ் சார்ந்துளோர்
எஞ்ஞானம் ஏழ்கோடி மந்திர நாயகர்
மெய்ஞ்ஞானர் ஆணவமும் விட்டுநின் றாரே.

விளக்கம்:

உயிர்களின் வகைகளில் முதலாவதாக இருக்கும் விஞ்ஞானர் மாயையும் கன்மமும் நீங்கப் பெற்ற ஜீவன் முக்தர்களாக நான்கு வகைப்பட்டு இருப்பவர்கள். முதலாவது வகையினர் ஞானம் பெற்றும் ஆணவம் நீங்காத தஞ்ஞானர் (அதமர்). இரண்டாவது வகையினர் அட்டவித்தீசுர நிலையை அடைந்த எஞ்ஞானர் (மத்திமர்). மூன்றாவது வகையினர் ஏழு கோடி மந்திரங்களின் நிலையை அடைந்த மந்திர நாயகர் (உத்தமர்). நான்காவது வகையினர் உண்மை ஞானமாகிய பேரறிவை பெற்று ஆணவ மலத்தையும் விட்டு நின்ற மெய்ஞ்ஞானர் (சித்தர்).

1, அதமர் விளக்கம்: (ரிஷிகள்)

ஞானம் அடைந்தாலும் தனிப்பட்ட தனது பெயரினால் அழைக்கப்பட்டு இறைவனுடன் கலக்காலம் இறைவனுக்காக யாகங்கள் பூஜைகள் செய்து கொண்டிருப்பவர்கள் அதமர் என்று அழைக்கப்படுகின்றார்கள்.

2, அட்டவித்தீசுர நிலை பெற்ற மத்திமர் விளக்கம்: (யோகிகள்)

யோகத்தின் வழியாக எட்டு விதமான ஞானம் தத்துவ நிலைகளைப் பெற்று ஈஸ்வர நிலையை அடைந்து எட்டுவிதமான ஞானத்தைப் பெற்றவர்கள் மத்திமர் என்று அழைக்கப்படுகின்றார்கள்.

3, ஏழு கோடி மந்திர நிலை பெற்ற உத்தமர் விளக்கம்: (தேவர்கள்)

மந்திரங்களில் முக்கியமான 1. நம 2. சுவாஹா 3. சுவதா 4. வெளஷட் 5. வஷ்ட் 6. பட் 7. ஹம் ஆகிய ஏழு விதமான வார்த்தைகளில் முடிகின்ற மந்திரங்கள் ஒவ்வொன்றும் ஒரு கோடி வீதம் மொத்தம் ஏழு கோடி ஆகும். இந்த ஏழு கோடி மந்திரங்களாலும் உச்சரித்துப் போற்றி வணங்கப்படும் நிலையை அடைந்தவர்கள் மந்திர நாயகர் என்றும் உத்தமர் என்று அழைக்கப்படுகின்றார்கள்.

4, சித்தர்கள் விளக்கம்: இறத்தால் தானே பிறப்பதற்கு என்று என்றும் இறப்பில்லாமல் இருப்பதற்கு பல தியான, யோகமுறைகளை கையாண்டு அட்டமா சித்திகள் அடைந்து ஆணவம், கன்மம், மாயை நீங்கி இறைவனை உணர்ந்து ஞானத்தை அடைந்து உடலோடு தானே இறைவன் என்ற நிலையில் இருப்பவர்கள்.

பாடல் #495

பாடல் #495: இரண்டாம் தந்திரம் – 15. மூவகைச் சீவவர்க்கம் (மூன்று விதமான உயிர்கள்)

இரண்டா வதில்முத்தி எய்துவர் அத்தன்
இரண்டாவ துள்ளே இருமல பெத்தர்
இரண்டாகு நூற்றெட்டு ருத்திரர் என்பர்
முரண்சேர் சகலத்தர் மும்மலத் தாரே.

விளக்கம்:

உயிர்களின் வகைகளில் இரண்டாவதாக இருக்கும் மெய்பிரளய அகலர் அனைவரும் பிரளயகாலப் பேரழிவில் முக்தியைப் பெறுபவர்கள். ஆணவம், கன்மம் ஆகிய இரண்டு மலங்களை மட்டும் கொண்டிருக்கும் இவர்கள் அபக்குவர் பரமுத்தர் அபரமுத்தர் என்ற பெயருடன் இருக்கின்றனர். அபக்குவர் பரமுத்தர் என்கிற இரண்டு வகையாக 54- 54 என்ற எண்ணிக்கையில் நூற்று எட்டு உருத்திரர்களாக இருக்கின்றனர். அபரமுக்தர் ஒரு வகையாகவும் மொத்தம் மூன்று வகைகளாக இருக்கின்றனர். பாடல் #494ல் உள்ள விஞ்ஞானர். இந்த பாடலில் கூறிய மெய்பிரளய அகலர் ஆகிய இரு வகையில் இல்லாத மற்ற அனைவரும் ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்று மலங்களையும் கொண்ட அஞ்ஞானர் ஆவார்கள்.

அபரமுக்தர் விளக்கம்:

இவர்கள் ஞானம் அடைந்து உலகத்தில் படைத்தல் மறைத்தல் காத்தல் அருளல் அழித்தல் ஆகிய இறைவனின் தொழில்களை செய்து பிறவி இல்லாத நிலையில் ஆணவம், கன்மம் என இரண்டு மலங்களை மட்டுமே கொண்டு பிரளய ஊழிக்காலம் வரை இறைவனோடு கலப்பதற்கு காத்திருக்கும் ஞானிகள் ஆவார்கள்.

பரமுக்தர் விளக்கம்:

உலக நன்மைக்காக உயிர்களை உய்விக்க உலகத்தில் பிறப்பதற்கு வானுலகத்தில் இறைவனின் கட்டளைக்காக காத்திருப்பவர்கள் பரமுக்தர் என்கின்ற ஞானிகள் ஆவார்கள். இவர்கள் 54 வகையான ருந்திரர் என்கின்ற பதவியில் இருக்கின்றார்கள்

அபக்குவர் விளக்கம்:

உலக நன்மைக்காக உயிர்களை உய்விக்க உலகத்தில் பிறந்து அனைத்து உயிர்களோடு வாழ்ந்து வருபவர்கள் அபக்குவர் என்கின்ற ஞானிகள் ஆவார்கள். இவர்கள் 54 ருந்திரர் வகையான என்கின்ற பதவியில் இருக்கின்றார்கள்

குறிப்பு: பரமுக்தர் அபக்குவர் இருவகையினரும் உலக நன்மைக்காக உயிர்களை உய்விக்க உலகத்தில் பிறந்து உயிர்களோடு உயிராக வாழ்ந்து பல நல்கருத்துக்களை கூறி ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களையும் கொண்ட அஞ்ஞானர்களை பிறவியில்லா நிலையை அடையச்செய்வதற்கும் இறைவனை உணர்வதற்க்கான காரியத்தையும் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

பாடல் #496

பாடல் #496: இரண்டாம் தந்திரம் – 15. மூவகைச் சீவவர்க்கம் (மூன்று விதமான உயிர்கள்)

பெத்தத்தர் சித்தொடு பேண்முத்திச் சித்தது
ஒத்திட் டிரண்டிடை யூடுற்றார் சித்துமாய்
மத்தத்து மும்மலம் வாடுகை மாட்டாதார்
சத்தத்து அமிழ்ந்து சகலத்து ளாரே.

விளக்கம்:

உயிர்களின் வகைகளில் மூன்றாவதாக இருப்பவர்கள் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களையும் கொண்ட அஞ்ஞானர். இவர்கள் முத்தர் சாதகர் சகலர் ஆகிய மூன்று விதமாக இருக்கிறார்கள்.

முக்தர்:

முன் ஜென்ம நல்வினைப் பயனால் இறைவனே குருவாக மனித உருவில் வந்து கொடுத்த ஞானத்தைப் பெற்று மும்மலம் கொண்ட தங்களின் ஆன்மாவை சிவத்தோடு இரண்டறக் கலந்து முக்தி பெற்ற முத்தர் ஆவார்கள்.

சாதகர்:

முன் ஜென்ம வினைப் பயனால் இறையருளைப் பெற்று தியானம் தவம் யோகப்பயிற்சிகள் பூஜைகள் செய்து கொண்ணிருப்பார்கள். இவர்கள் சாதகர் ஆவார்கள். இவர்கள் தாம் மேற்கொண்ட சாதகங்களின் பயனால் மும்மலங்களால் உருவாகும் துன்பங்களிலிருந்து பாதிக்காமல் இருப்பார்கள்.

சகலர்:

இவர்கள் மாயையால் உலக வாழ்க்கையிலேயே அமுங்கிக் கிடந்து மும்மலங்களின் வலிமை அதிகமாகப் பெற்ற சகலர் ஆவார்கள்.

பாடல் #497

பாடல் #497: இரண்டாம் தந்திரம் – 15. மூவகைச் சீவவர்க்கம் (மூன்று விதமான உயிர்கள்)

சிவமாகி ஐவகைத் திண்மலஞ் செற்றோர்
அவமாகாச் சித்தர்முத் தாந்தத்து வாழ்வார்
பவமான தீர்வோர் பசுபாசம் அற்றோர்
நவமான தத்துவம் நாடிக்கண் டாரே.

விளக்கம்:

ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி என்னும் ஐந்து வலிமை மிகுந்த மலங்களை வென்று தாமே சிவமாகி சித்தர்கள் சாயுச்சியம் என்னும் பேரின்பப் பெருவாழ்வு பெற்று அதிலேயே என்றும் திளைத்து இருப்பார்கள். இவர்கள் இறவாத நிலை பெற்றதால் எப்போதும் பிறவி இல்லாத நிலையைப் பெற்று பசு பாசம் ஆகிய இரண்டும் நீங்கி பதியாக இருக்கும் ஒன்பது வகை தத்துவங்களை தமது தவத்தினால் உணர்ந்து அடைந்தார்கள்.

பதி பசு பாசம் விளக்கம்:

பதி என்பது இறைவனின் பேரான்மா. பசு என்பது இறைவனின் பேரான்மாவிலிருந்து பிரிந்து வந்து உலகங்களில் பிறந்த ஜீவ ஆன்மா. பாசம் என்பது பேரான்மாவுடம் ஜீவ ஆன்மா சேராதவாறு பிரித்து ஐந்து வகை மலங்களால் கட்டி இருப்பது. எப்போது பசுவாகிய ஜீவ ஆன்மா தனது பாசமாகிய மலங்களை அறுத்துக் கொண்டு பதியாகிய பரமாத்மாவை சென்று அடைகிறதோ அப்போது அது முக்தியைப் பெற்று இனி பிறவி இல்லாத நிலையை அடைகிறது.

ஒன்பது தத்துவ விளக்கம்:

உலகம் உருவாகுவதற்கும் உலக தொழில்கள் நடைபெறுவதற்கு காரணமாய் இருப்பவை ஒன்பது தத்துவங்களாகும். இந்த ஒன்பது தத்துவங்களையும் சித்தர்கள் தமது தவத்தினால் தமக்குள் கண்டு உணர்பவர்கள்.

 1. சிவம் – அசையா சக்தி
 2. சக்தி – அசையும் சக்தி
 3. ஒலி – சத்தம்
 4. ஒளி – வெளிச்சம்
 5. சதாசிவம் – அருளல்
 6. மகேசுவரன் – மறைத்தல்
 7. உருத்திரன் – அழித்தல்
 8. திருமால் – காத்தல்
 9. பிரம்மன் – படைத்தல்

பாடல் #498

பாடல் #498: இரண்டாம் தந்திரம் – 15. மூவகைச் சீவவர்க்கம் (மூன்று விதமான உயிர்கள்)

விஞ்ஞானர் ஆணவங் கேவல மேவுவோர்
தஞ்ஞானர் மாயையில் தங்கும் இருமலர்
அஞ்ஞானர் அச்சக லத்தர் சகலராம்
விஞ்ஞான ராதி ஒன்பான்வே றுயிர்களே.

விளக்கம்:

விஞ்ஞானர் என்பவர் ஆணவம் மலம் மட்டுமே கொண்டு கன்மம், மாயை ஆகிய இரண்டு கேவல நிலைகளுக்கும் மேலே இருப்பவர்கள். இவர்கள் கன்மம், மாயை ஆகியவற்றில் சிக்க மாட்டார்கள். மெய்பிரளய அகலர் என்பவர் ஆணவம், கன்மம் ஆகிய இரண்டு மலம் கொண்டு இருப்பவர்கள். இவர்கள் மாயையில் சிக்க மாட்டார்கள். அஞ்ஞானர் என்பவர் இந்த மூன்று மலங்களும் கொண்ட மற்ற அனைவரும் ஆவார்கள். சித்தர்களைத் தவிர்த்து விஞ்ஞானர், மெய்பிரளய அகலர், அஞ்ஞானர் மொத்தம் ஒன்பது வகையினராக இருக்கின்றனர்.

குறிப்பு

இந்த பாடலில் ஏற்கனவே சொல்லப்பட்ட கருத்துக்கள் இந்த பாடலிலும் இருந்தாலும் மூவகைச் சீவவர்க்கம் தலைப்பில் உள்ள மூன்று விதமான உயிர்களில் 10 வகையினரில் சித்தர்களை மேன்மையானவர்களாக இந்த பாடல் கூறிப்பிடுகின்றது.

பாடல் #499

பாடல் #499: இரண்டாம் தந்திரம் – 15. மூவகைச் சீவவர்க்கம் (மூன்று விதமான உயிர்கள்)

விஞ்ஞான கன்மத்தால் மெய்யகங் கூடிய
அஞ்ஞான கன்மத்தினால் சுவர் யோனிபுக்
கெஞ்ஞான மெய்தீண்டி யேயிடை யிட்டுபோய்
மெய்ஞ்ஞான ராகிச் சிவமேவல் உண்மையே.

விளக்கம்:

விஞ்ஞானர் தன்னுடைய ஞான கன்மத்தினால் எடுத்த பிறவியிலேயே தன் உள்ளமும் மெய்யான இறைவனும் கூடி ஒன்றாக கலந்து தாமே சிவமாகி இருப்பார்கள்.

மெய்பிரளய அகலர் அஞ்ஞான கன்மத்தினால் ஞானிகளாகப் பிறந்து பாடல் #493 ல் உள்ள குறிப்பின் படி பிரளய ஊழிக்காலம் வரை இறைவனோடு கலப்பதற்கு காத்திருந்து பிரளய ஊழிக்காலத்தில் சிவத்தோடு கலப்பார்கள்.

அஞ்ஞானர்கள் தன்னுடைய சாதகத்தினாலோ அல்லது மெய்பிரளய அகலர்களாக உள்ள ஞானிகளாலோ உயர்வதற்கு ஏதுவாகிய ஞானம் பெற்று ஒரு நாள் மெய்பிரளய அகலர்களாகவோ விஞ்ஞானர்களாகவோ மாறி சிவத்தோடு கலப்பார்கள்.

அசையா சக்தியாக இருக்கும் இறைவனுடன் கலந்து பேரின்பத்தில் இருக்கும் சிவசாயுச்சியம் என்பது அனைவருக்கும் உறுதியாகக் கிடைக்கும் இது உண்மை.

பாடல் #500

பாடல் #500: இரண்டாம் தந்திரம் – 15. மூவகைச் சீவவர்க்கம் (மூன்று விதமான உயிர்கள்)

ஆணவத் துற்ற வவித்தா நனவற்றோர்
காணிய விந்துவா நாத சகலாதி
ஆணவ மாதி அடைந்தோ ரவரன்றே
சேணுயர் சத்தி சிவதத்துவ மாமே.

விளக்கம்:

ஆணவம் முதலான 5 மலங்களும் இருப்பதினால் கண்ணால் பார்த்தும் அறியாமையால் அதில் உள்ள உண்மை தெரிந்து கொள்ளாதவர்கள் ஒளி ஒலி முதலான அனைத்து இறை தத்துவங்களையும் உணர முடியாது. ஆணவம் முதலான 5 மலங்களும் கடந்தவர்கள் உயர்வான இடத்தில் இருக்கும் சிவசக்தி தத்துவத்தை உணரலாம்

உட்கருத்து:

ஆணவம் என்கிற மலத்தை விட்டு நீங்காத வரை இறைவனை முழுவதுமாக உணர முடியாது. ஐந்து மலங்களையும் இறையருளால் வென்றவர்கள் மட்டுமே ஆதிப்பரம்பொருளாக இருக்கும் சிவம் (அசையா சக்தி) சக்தி (அசையும் சக்தி) எனும் இரண்டு தத்துவங்களையும் உணர முடியும்.