பாடல் #1

பாடல் #1: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

ஒன்றவன் றானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தான்இருந் தான்உணர்ந் தெட்டே.

விளக்கம்:

இறைவன் ஒருவனே அவனைத்தவிர வேறு தெய்வங்கள் இல்லை. அதாவது உலகத்தில் உள்ள அனைத்து தெய்வங்களும் அண்டசராசரங்களும், அதிலுள்ள அனைத்தும் இறைவன் ஒருவனாகவே இருக்கின்றான்.

ஒன்றாக இருக்கும் இறைவனின் அருளானது இரண்டாக இருக்கின்றது. அசையா சக்தியான இறைவனின் அருள் அவனிடமிருந்து அசையும் சக்தியாக வெளிப்படுகிறது. அதாவது எப்படி கசப்பான மருந்தும் இனிப்பான மருந்தும் நோயைக் குணப்படுத்துகிறதோ அதுபோலவே இன்பம் துன்பம் ஆகிய இரண்டும் இறைவனின் அருளாகும்.

இரண்டாக இருக்கும் இறைவனே பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களாகவும் நின்று படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றுவிதமான தொழில்களையும் புரிகின்றான்.

மூன்றாய் நின்ற இறைவனே உயிர்கள் தன்னை அறிந்துகொள்ள வேண்டும் என்கிற மாபெரும் கருணையில் ரிக், யஜூர், சாம, அதர்வண ஆகிய நான்கு விதமான வேதங்களாகவும் நிற்கின்றான்.

நான்கு வேதங்களாக இருக்கும் இறைவனே நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களகவும் இருக்கின்றான். அதாவது தெய்வம் அருளும் ஐந்து வகை தொழில்களாகிய படைத்தல், காத்தல், மாயையால் மறைத்தல், அருளல், மாயையை அழித்தல் ஆகிய ஐந்தின் தலைவன் அவன் ஒருவனே.

ஐம்பூதங்களாக இருக்கும் இறைவனே உயிர்களின் உடலில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தம், ஆஞ்ஞை ஆகிய ஆறு சக்கரங்களாக விரிந்து இருக்கின்றான்.

ஆறு சக்கரங்களாக விரிந்திருக்கும் இறைவனே மூலாதாரத்தில் குண்டலினி சக்தியாக இருந்து யோகங்கள் புரிவதன் மூலம் ஆறு சக்கரங்களுக்கும் மேலேறி ஏழாவது சகஸ்ரரதளத்திற்கு சென்று அதையும் தாண்டி பரவெளியில் உறைந்திருக்கின்றான்.

ஏழு சக்கரங்களிலும் உறைந்திருக்கும் இறைவனை தனக்குள்ளே உணர்ந்து உயிர்கள் அவனை எட்டுதலே முக்தியாகும்.

பாடல் #2

பாடல் #2: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கு நாதனை
மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்
கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே.

விளக்கம் :

இறைவனைப் போற்றிப் புகழ்ந்து, இசைத்துப் பாடும் அடியவர்களின் உள்ளத்தில் வீற்றிருக்கும் புனிதமானவனும் நான்கு திசைகளுக்கும் (உலகமனைத்திற்கும்) நன்மை புரியும் மாதுவாகிய சக்திக்குத் தலைவனானவனும். மேற்கூறிய நான்கு திசைகளுக்குள் தென் திசைக்கு தலைவனானவனும் காலத்தின் அதிபதியான எமனை எட்டி உதைத்ததால் காலத்தை வென்றவனும் ஆகிய இறைவனை யான் கூறிகின்றேன்.

பாடல் #3

பாடல் #3: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்
நக்கனென் றேத்திடு நாதனை நாள்தொறும்
பக்கநின் றார்அறி யாத பரமனைப்
புக்குநின் றுன்னியான் போற்றிசெய் வேனே.

விளக்கம்:

அனைத்து உயிர்களுடனும் கலந்திருக்கும் இறைவனை எண்ணிலடங்காத தேவர்கள் தினந்தோறும் போற்றித் தொழுகின்ற இறைவனை தத்துவங்களைக் கடந்து அனைத்திற்கும் தலைவனாக இருக்கும் இறைவனை பக்கத்தில் இருந்தாலும் அறிந்துகொள்ள முடியாத இறைவனை யாம் அவனுள் அடங்கி நின்று அவனைத் தியானித்து அவன் புகழைப் போற்றி உரைப்போம்.

பாடல் #4

பாடல் #4: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத் தென்றெனைப் போதவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே.

விளக்கம்:

அழிந்து போகக்கூடிய அண்டசராசரங்களுக்கும் அதிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் உண்மைப் பொருளாகவும் அனைத்திற்கும் ஆரம்பமாகவும் இருக்கும் இறைவனை மண்ணுலகில் எம்மை வந்து இருக்குமாறு செய்து மண்ணுலக மாயையிலிருந்து விடுபடும் வழியாக தனது திருவடியையும் எமக்கு அருளிய இறைவனை இடைவெளியின்றி பகலிலும் இரவிலும் அவன் பாதங்களைப் பணிந்து அவனைத் துதித்து எம்முள் இருக்கும் மாயையாகிய இருளை நீக்கி அவனுடைய உண்மைப் பொருளை உணர்ந்து இருந்தோம்.

பாடல் #5

பாடல் #5: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை
அவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
தவனச் சடைமுடித் தாமரை யானே.

விளக்கம்:

சிவத்தோடு ஒப்பிட்டுப் பார்க்குமளவிற்கு எங்கு தேடினாலும் வேறு எந்த தெய்வமும் கிடையாது. அவன் ஈடுஇணை இல்லாதவன். அனைத்து தெய்வங்களுக்கும் மேலானவன். அவனோடு ஒப்பிட்டுப் பார்க்குமளவிற்கு வேறு யாருமே இந்த உலகத்தில் இல்லை. இந்த உலகத்தையும் தாண்டிய பரவெளியில் சூரியனைப் போன்ற ஒளியுடன் பிரகாசித்துக்கொண்டும் சூரியனின் ஒளிக்கற்றைகள் போல மின்னும் சடையைக் கொண்டும் அவன் ஆயிரம் தாமரை மலரின் மேல் வீற்றிருக்கின்றான்.

பாடல் #6

பாடல் #6: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

அவனை ஓழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறறி யேனே.

விளக்கம்:

சிவத்தைத் தவிர பிறப்பு இறப்பு இல்லாத அமரர்கள் யாரும் இல்லை. சிவத்தை நோக்கி செய்யப்படும் தவத்தை விட சிறந்த தவம் வேறு இல்லை. சிவமுடைய அருள் இல்லாமல் படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்யும் தெய்வங்களால் எதுவும் செய்ய இயலாது. சிவமில்லாமல் முக்தி அடையும் வேறு எந்த வழியையும் நான் அறியவில்லை.

பாடல் #7

பாடல் #7: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

முன்னையொப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன்
தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன்
தன்னையப் பாஎனில் அப்பனு மாய்உளன்
பொன்னையொப் பாகின்ற போதகத் தானே.

விளக்கம்:

ஆதியிலிருந்து இருக்கும் மூன்று தெய்வங்களான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவருக்கும் மூத்தவன் சதாசிவமூர்த்தி. தனக்கு ஈடுஇணை இல்லாத தலைவன் அவன். அவனை அப்பா என்று அழைத்தால் உயிர்களுக்கு அப்பாவாகவே தோன்றுவான் (அவனை என்ன சொல்லி அழைத்தாலும் அதுவாகவே உயிர்களுக்குத் தோன்றி அருள்பாலிப்பான்). பொன் போன்ற அறிவு ஒளியைத் தரும் பல உபதேசங்களை குருவாக நின்று வழங்குபவனும் அவனே. பொன்னைப் போன்ற பேரொளியாக இருப்பவன் வேதங்களை தனக்குள்ளே கொண்டவன் அவன்.

பாடல் #8

பாடல் #8: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வார்இல்லை
சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.

விளக்கம்:

உயிர்கள் இறைவனை அடைவதற்காக அவர்களின் கர்மாக்களை அழிக்கும் போது இறைவன் தீயைவிடவும் அதிக வெப்பமானவானாக இருக்கின்றான். உயிர்கள் இறைவனை நாடும் போது தண்ணீரைவிடவும் குளிர்ந்தவனாக இருக்கின்றான். விருப்பு வெறுப்பின்றி தன்னலம் இல்லாத குழந்தையைவிட இறைவன் நல்லவன். காதுகளில் குண்டலங்களை அணிந்துகொண்டும் நீண்ட சடையைக் கொண்டவனுமான இறைவன் தன்னை நாடும் அன்பர்களுக்குத் பெற்ற தாயைவிடவும் மிகவும் அன்பு செலுத்துபவனாகத் திகழ்கின்றான். இருந்தும், அவனுடைய திருவருளை அறிந்தவர்கள் யாரும் இல்லை.

பாடல் #9

பாடல் #9: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னால் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
தன்னால் தொழப்படு வாரில்லை தானே.

விளக்கம்:

பொன்னாலே பின்னப்பட்ட சடையை பின்னால் உடைய எம்மால் வணங்கப்படுகின்ற இறைவன் பெயர் நந்தி என்கின்ற சிவபெருமான் அவனால் வணங்கப்படுகின்றவர் இந்த உலகில் இல்லை.

பாடல் #10

பாடல் #10: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறுந் திங்களும்
தானே மழைபொழி தையலுமாய் நிற்கும்
தானே தடவரை தண்கட லாமே.

விளக்கம்:

சதாசிவமூர்த்தியாகிய இறைவனே மேலுலகம் கீழுலகம் ஆகிய இரண்டு வகையான உலகங்களையும் அண்ட சராசரங்களில் விரிந்திருக்கும் ஆகாயமாகவும் உயிர்களுக்கு வெப்பத்தை தருகின்ற நெருப்பாகவும் உலகத்திற்கு ஒளியையும் சக்தியையும் தருகின்ற சூரியனாகவும் இரவில் குளிர்ச்சியான ஒளியைத் தருகின்ற நிலவாகவும் மழையைப் பொழிய வைக்கின்ற மேகங்களாகவும் உலகம் முழுவதும் விரிந்து பரந்திருக்கும் மலைகளாகவும், குளிர்ந்த நீரைக் கொண்டிருக்கும் கடல்களாகவும் இருக்கின்றான்.