பாடல் #177

பாடல் #177: முதல் தந்திரம் – 4. இளமை நிலையாமை

கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டும் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டும் தேறார் வியனுல கோரே.

விளக்கம்:

தினமும் காலையில் கிழக்கில் உதிக்கின்ற சூரியன் மாலையில் மேற்கில் விழுந்து மறைந்து விடுவதைக் கண்டும் அதன் காரணத்தைப் புரிந்து கொள்ளாத உயிர்கள் கண்கள் இருந்தும் உண்மையைக் காணாத குருடர்களே. பசுமாடு ஈன்ற குழந்தையாக மண்ணில் வந்த கன்றுக்குட்டியும் சில நாட்களில் எருதாக மாறுவதும் பின்னர் அது முதுமையடைந்து இறந்து விழுவதையும் கண்டுகொண்ட பிறகும் தமக்கும் அதுபோல ஒரு நாள் இளமை நீங்கி முதுமை வந்துவிடும் என்கின்ற உண்மையை உணராத மூடர்களாக உலகத்து உயிர்கள் இருப்பது மிகவும் வியப்புக்கு உரியதே.

பாடல் #178

பாடல் #178: முதல் தந்திரம் – 4. இளமை நிலையாமை

ஆண்டு பலவும் கழிந்தன அப்பனைப்
பூண்டு கொண்டாரும் புகுந்தறிவா ரில்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்
தூண்டு விளக்கின் சுடருமறி யாரே.

விளக்கம்:

உயிர்கள் பிறந்து பல ஆண்டுகள் உலகத்தில் கழித்தாலும் இறைவனைப் பற்றிக்கொண்டு அவனைத் தமது ஆன்மாவிற்குள் புகுந்து உணர்ந்து அறிபவர்கள் யாரும் இல்லை. எரிகின்ற தீபச் சுடரை எத்தனை காலங்கள் தூண்டு கோலால் திரிநூலை நீட்டி நீட்டி எரிய வைத்தாலும் திரிநூல் தீர்ந்தபின் விளக்கு அணைந்து போகும் என்கின்ற உண்மையை யாரும் அறியாமல் இருக்கின்றார்கள். திரி போன்ற உடலின் உள்ளே தீபம் போல் இருக்கும் உயிர் பிறந்து வளர வளர எரியும் தீபத்தின் திரிநூல் தீர்ந்துவிடுவதுபோல உடலும் இளமை மாறி முதுமை கூடி ஒரு நாள் அழிந்து போய்விடும்.

கருத்து : உடல் என்றும் இளமையுடன் இருக்காது என்ற உண்மையை உணர்ந்து உயிர் பிரிந்து போவதற்குள் இருக்கும் காலத்தில் என்றும் நிலைத்திருக்கும் இறைவனைத் தமக்குள் உணர்ந்து அவனுடன் பேரின்பத்தில் இணைந்து எப்போதும் நிலைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும்.

பாடல் #179

பாடல் #179: முதல் தந்திரம் – 4. இளமை நிலையாமை

தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறை
ஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள்
பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியை
ஓர்ந்துஉற்றுக் கொள்ளும் உயிருள்ள போதே.

விளக்கம்:

உயிர்கள் பிறந்து வளர வளர உடலும் தேய்ந்து இளமை மாறி முதுமை வந்து ஒரு நாள் இறந்தும் போகின்ற இயற்கையின் விதிகளை ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள். அவ்வாறு அறிந்துகொண்ட பின்பு பாய்ந்து வரும் கங்கையைத் தன் திருமுடியில் சூடிக்கொண்டிருக்கும் இறைவனே என்றும் நிரந்தரமானவன் என்பதை உணர்ந்து அவனைச் சென்று அடையத் தேவையான பல அரிய தவங்களையும் தியானங்களையும் குருநாதர் மூலம் கற்றுக் கொண்டு மனதை ஒருமுகப்படுத்தி அந்த அரிய செயல்களை உயிர் உடலில் இருக்கும்போதே செய்து இறைவனைச் சென்றடையுங்கள்.

பாடல் #180

பாடல் #180: முதல் தந்திரம் – 4. இளமை நிலையாமை

விரும்புவர் முன்னென்னை மெல்லியல் மாதர்
கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல்
அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்குக்
கரும்பொத்துக் காஞ்சிரங் காயும் ஒத்தனே.

விளக்கம்:

ஆண்களின் உடல் முன்பு இளமையாக இருந்த காலங்களில் மென்மையான இயல்புடைய பெண்கள் கரும்பை உடைத்து அதன் அடிக்கரும்பிலிருந்து எடுக்கும் சாறு போன்ற இனிப்பாக நினைத்து விரும்பினார்கள். பூக்களின் அரும்பு போன்ற மென்மையான மார்புகளும் ஆலமரத்தின் இலை போன்ற இடையையும் உடைய இந்தப் பெண்களுக்கு இப்போது வயதாகி வலுவிழந்து சுருங்கி இருக்கும் ஆண்களின் உடம்பு எட்டிக் காய் போல கசக்கிறது. அவர்களுக்கு முன்பு கரும்புச் சாறு போல இனித்ததும் இன்று எட்டிக் காய் போல கசப்பதும் ஒரே உடல்தான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

கருத்து : நிலையில்லாத இந்த இளமையான உடலில் கிடைக்கும் சிற்றின்பத்தில் மூழ்கிவிடாமல் என்றும் நிரந்தரமான இறைவனால் கிடைக்கும் பேரின்பத்திலேயே மூழ்கி இருங்கள்.

பாடல் #181

பாடல் #181: முதல் தந்திரம் – 4. இளமை நிலையாமை

பாலன் இளையன் விருத்தன் எனநின்ற
காலம் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலம் கடந்தண்டம் ஊடறுத் தானடி
மேலும் கிடந்து விரும்புவன் நானே.

விளக்கம்:

குழந்தை இளைஞன் வயோதிகன் என்று காலம் கழியக் கழிய உடல் மாறுவதைக் கண்டும் அதன் உண்மையை அறிந்து கொள்ளாதவர்கள் உலகத்தவர்கள். உலகத்தையும் தாண்டி அண்டங்கள் அனைத்திலும் கலந்து இருப்பவனும் அதிலே தோன்றுபவை அனைத்தையும் ஒரு நாள் அழித்து ஆட்கொள்பவனுமான இறைவனின் திருவடிகளின் கீழே எத்தனைக் காலங்கள் ஆனாலும் கிடந்து இருப்பதையே நான் விரும்புகின்றேன்.

கருத்து: உயிர்களின் உடல் காலம் செல்லச் செல்ல மாறி அழியக்கூடியது. அப்படி அழியும் உடலின் ஆசை வைக்காமல் என்றும் அழியாமல் எங்கும் வியாபித்து இருக்கும் இறைவனின் திருவடிகளில் சென்றடைந்து பேரின்பத்தில் கிடப்பதன் மேல் ஆசை வைக்க வேண்டும்.

பாடல் #182

பாடல் #182: முதல் தந்திரம் – 4. இளமை நிலையாமை

காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்
மாலை படுவதும் வாணாள் கழிவதும்
காலுமவ் வீசன் சலவிய னாகிலும்
ஏல நினைப்பவருக் கின்பஞ்செய் தானே.

விளக்கம்:

தினந்தோறும் காலையில் எழுகின்ற உயிர்கள் மாலையில் தூங்கச் செல்லும் வரை பலவித செயல்கள் செய்து அவர்களின் வாழ் நாட்களை வீணாகக் கழிக்கின்றனர். அவ்வாறு வீணாக வாழ்க்கை கழிந்தபின் இறக்கும் உயிர்களை அழிக்கும் ஈசுவரன், கோபம் கொண்ட உருத்திரனைப் போலத் தெரிந்தாலும், அவனைத் தம் அறிவு முதிர்ச்சிக்கு ஏற்ப அன்போடு நினைத்து வாழும் உயிர்களுக்குப் பேரின்பத்தை வழங்கி அருளுவான்.

கருத்து: தினந்தோறும் பல காரியங்கள் செய்து வெட்டியாக வாழ்க்கையைக் கழித்து பின் இறக்கும்போது இறைவனைப் பார்த்து அவன் கோபத்தோடு அழிப்பவன் என்று பயப்படாமல் உயிரோடு இருக்கும்போதே இறைவனின் பெருங்கருணையைப் புரிந்துகொண்டு அவனை அன்போடு நினைத்து வழிபட்டு வந்தால் இறக்கும் போதும் அவன் பேரின்பத்தையே அளித்து அருளுவான்.

பாடல் #183

பாடல் #183: முதல் தந்திரம் – 4. இளமை நிலையாமை

பருவூசி ஐந்துமோர் பையினுள் வாழும்
பருவூசி ஐந்தும் பறக்கும் விருகம்
பருவூசி ஐந்தும் பனித்தலைப் பட்டால்
பருவூசி பையும் பறக்கின்ற வாறே.

விளக்கம்:

உடலாகிய இந்தப் பையினுள் புலன்களாகிய ஐந்து பெரிய ஊசிகள் இருக்கின்றன. (பார்த்தல் – கண், கேட்டல் – காது, பேசுதல் – வாய், நுகர்தல் – மூக்கு, தொடுதல் – தோல்) இந்த ஐந்து பெரிய ஊசிகளும் தன் விருப்பத்திற்கு பறக்கின்ற பறவைகள் போன்றவை. வெயில் காலத்தில் அங்கும் இங்கும் பறந்து தன் விருப்பம் போல திரியும் பறவைகள் பனிக்காலத்தில் பறந்து செல்ல வழியின்றி குளிரினில் நடுங்கிக்கொண்டு கூட்டுக்குள்ளேயே இருக்கும். அதுபோலவே இளமைக் காலங்களில் ஆசைகளில் வயப்பட்டு ஐந்து புலன்களையும் அதன் விருப்பத்திற்கு பறக்க விட்டால் பின்பு வயதாகி முதுமை வந்தபிறகு இறைவனை அடைய எண்ணம் இருந்தாலும் குளிர் காலம் நீண்ட நாள் நீடித்து கூட்டிற்கு உள்ளேயே பறவை இருந்து இறந்து போவது போல ஐந்து புலன்களும் உடலுக்குள்ளேயே அடங்கிக் கிடந்து உடலுக்குள் இருந்த உயிர் பறந்து போய் அதிலிருந்த ஐந்து புலன்களும் முற்றும் செயலிழந்துவிடும்.

கருத்து: உயிரோடும் இளமையோடும் இருக்கும்போது ஆசை செல்லும் வழியில் புலன்களைச் செலுத்தாமல் அவைகளைக் கட்டுப்படுத்தி இறைவனின் மேல் நாட்டத்தை ஏற்படுத்தி அவனை அடையும் வழிகளைத் தேடி அடைய வேண்டும்.

பாடல் #184

பாடல் #184: முதல் தந்திரம் – 4. இளமை நிலையாமை

கண்ணதும் காய்கதி ரோனும் உலகினை
உண்ணின் றளக்கின்ற தொன்றும் அறிகிலார்
விண்ணுறு வாரையும் மண்ணுறு வாரையும்
எண்ணுறு முப்பதில் ஈர்ந்துஒழிந் தாரே.

விளக்கம்:

உயிரின் கண்களில் பார்வையாய் இருப்பவனும் பார்க்கப்படும் பொருளாய் இருப்பவனும் இறைவனே. ஆனால் உயிர்கள் பார்க்கப்படும் பொருளின் மீது மாயையினால் ஆசைப்பட்டு உலக இன்பங்களில் ஈடுபட்டு வினைகளைச் சேர்ப்பதை அந்த உயிரின் உள்ளிருந்தே இறைவன் அளந்து கொண்டு இருப்பதை யாரும் உணரவில்லை. இறைவனை அடையும் வழிகளைத் தேடி அதன் பயனாக விண்ணுலத்தில் இறைவனை அடைவதும் ஆசைகளில் வயப்பட்டு அதை அனுபவித்து அதன் பயனாகப் பல வினைகளைச் சேர்த்துக்கொண்டு அதைத் தீர்க்க மீண்டும் மீண்டும் மண்ணுலகில் பிறப்பதும் உயிர்களின் எண்ணத்தின் படி உடலின் இளமை இருக்கும் முப்பது ஆண்டுகளில் உயிர்கள் தேர்ந்தெடுக்கும் வழிகளில் இருக்கிறது.

பாடல் #185

பாடல் #185: முதல் தந்திரம் – 4. இளமை நிலையாமை

ஒன்றிய ஈரெண் கலையும் உடன்றன
நின்றது கண்டு நினைக்கிலர் நீதர்கள்
கன்றிய காலன் கருக்குழி வைத்தபின்
சென்றதில் வீழ்வர் திகைப்புஒழி யாரே.

விளக்கம்:

பெளர்ணமி அன்று முழுவதாக இருக்கும் நிலா பிறகு 16 கலைகளில் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்துப் பின் முழுவதுமாக அமாவாசை அன்று மறைந்துவிடும் வழக்கத்தை ஒவ்வொரு மாதமும் பார்த்தாலும் அதன் பொருளை நினைக்காமல் இருக்கின்றனர் மூடர்கள். உயிர்களின் மூடத்தன்மையினால் அவர்கள் செய்யும் பல வினைகளைக் கண்டு கோபம் கொள்ளும் எமதர்மன் அவர்கள் மீண்டும் பிறக்க வைக்கும் குழிகளை (ஆசைகளை) வைத்தவுடன் அந்த குழிகளில் ஆசையினால் சென்று விழுகின்றன உயிர்கள். அப்படி ஆசையில் விழுந்தபின் இளமை அழிந்து முதுமைப் பெற்று இறக்கும் தறுவாயில் எமனைக் கண்டு ஏன் இப்படி நமக்கு நடக்கிறது என்று திகைப்பு மாறாமல் இருக்கின்றார்கள் இந்த மூடர்கள்.

பாடல் #186

பாடல் #186: முதல் தந்திரம் – 4. இளமை நிலையாமை

எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
எய்திய நாளில் எறிவ தறியாமல்
எய்திய நாளில் இருந்ததுகண் டேனே.

விளக்கம்:

உயிர்கள் வினைப் பயனாக உலகத்தில் பிறக்கும் பொழுதே இந்த உலகில் எத்தனைக் காலம் இருக்க வேண்டும் என்பதை ஒரு நாளில் எத்தனை முறை மூச்சுவிடுகின்றன என்கிற கணக்கின்படி எத்தனை நாள் வாழ வேண்டும் என்று வரையறுக்கப்பட்டே பிறக்கின்றன. இந்த வரையறுக்கப்பட்ட நாள்களில் இளமையாக இருக்கும் நாட்கள் கொஞ்சம் சிறிது நாட்களே. இளமை இருக்கும் போதே எப்போதும் நிரந்தரமான இறைவனைப் பாடித் தொழுது வாழ்வதே சிறந்தது. இளமை இருக்கும் நாட்களிலேயே இறைவனைப் பற்றிய எண்ணங்கள் வரவிடாமல் தடுத்துவிடும் பலவித ஆசைகளை எடுத்து வெளியே எறிந்துவிடத் தெரியாமல் உயிர்கள் ஆசைக்கு அடிமை ஆகித் தங்களின் வாழ்க்கையை இழந்து பின்பு வயதாகி இறந்துவிடுகின்றன. ஆசைக்கு அடிமையாகாமல் உயிரோடு இருக்கும் காலங்களிலேயே இறைவனைப் பற்றிய சிந்தனையில் வாழ்ந்த உயிர்கள் இறைவனை அடைவதை நானும் இருந்து கண்டேன்.