பாடல் #187

பாடல் #187: முதல் தந்திரம் – 5. உயிர் நிலையாமை

தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்ற வெல்லாம் இறக்கின்ற கண்டும்
பிழைப்பின்றி எம்பெரு மானடி யேத்தார்
அழைக்கின்ற போதறி யாரவர் தாமே.

விளக்கம்:

செடிகளிலும் கொடிகளிலும் தழைத்து வளர்கின்ற செழுமையான தளிர்களின் மேல் பூக்கின்ற பூக்களும் அது காய்க்கின்ற காய்களும் பின்பு பழுக்கின்ற பழங்களும் ஆகிய அவை உருவாக்கிய அனைத்துமே ஒரு நாள் இறந்து போவதை (பூக்கள் காய்கள் பழங்கள் பறிக்கப்படுதல் அல்லது அதுவாகவே உலர்ந்து விழுதல்) தினமும் பார்க்கும் உயிர்கள் இந்த வாழ்க்கை நிலைக்காது என்பதைப் புரிந்துகொண்டு எது நிரந்தரமானது என்பதைத் தேடி இறைவனே அனைத்திலும் நிரந்தரமானவன் என்பதைப் புரிந்துகொண்டு அவனுடைய திருவடிகளைத் தொழுது வணங்காதவர்கள் தனக்கும் இறக்கும் நாள் வரும் என்பதை அறியாத மூடர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் இறக்கும் தருணத்திலும் இறைவனை அறியாதவர்களாகவே இருக்கின்றனர்.

பாடல் #188

பாடல் #188: முதல் தந்திரம் – 5. உயிர் நிலையாமை

ஐவர்க் கொருசெய் விளைந்து கிடந்தது
ஐவரும் அச்செய்யைக் காத்து வருவார்கள்
ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால்
ஐவரும் அச்செய்யதன் காவல்விட் டாரே.

விளக்கம்:

ஐந்து நபர்களுக்கு ஒரு நிலம் கிடைத்தது. அதில் நன்றாக விவசாயம் செய்து விளைச்சல் விளைந்து கிடந்தது. ஐந்து நபர்களும் அந்த நிலத்தையும் அதன் விளைச்சலையும் கெட்டுப்போகாமல் நன்றாக காத்து பராமரித்து வந்தனர். ஒரு நாள் அந்த ஐந்து நபர்களின் தலைவன் அவர்களை உடனே தன் இடத்திற்கு வந்து சேரும்படி ஓலை அனுப்பினான். அந்த ஓலை வந்தவுடனே ஐவரும் உடனே தாங்கள் இதுவரைக் காத்து பராமரித்து வைத்திருந்த நிலத்தை விட்டுவிட்டு தங்களின் தலைவனை நாடிச் சென்றுவிட்டனர். இதில் ஐவர்கள் என்பது உடலில் இருக்கும் உயிரின் ஐந்து புலன்கள் (கண் – பார்த்தல், காது – கேட்டல், மூக்கு – நுகர்தல், வாய் – பேசுதல், தோல் – தொடுதல்), நிலம் என்பது உயிர் உலகில் எடுத்த உடல் ஆகும். ஐவர்களின் தலைவன் இறைவன் ஆவார். ஐந்து புலன்களும் உடலை கெட்டுப்போகாமல் நன்றாக காத்து பராமரித்து வந்தனர். எப்போது உயிர்களின் உலகப் பிறப்பு வினையின் காலம் முடிகிறதோ அப்போது இறைவன் அழைத்தவுடன் ஐந்து புலன்களும் உடலைவிட்டு பிரிந்து சென்றுவிடும்.

பாடல் #189

பாடல் #189: முதல் தந்திரம் – 5. உயிர் நிலையாமை

மத்தளி ஒன்றுள தாளம் இரண்டுள
அத்துள்ளே வாழும் அரசரும் அஞ்சுள்ள
அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன்
மத்தளி மண்ணாகி மயங்கிய வாறே.

விளக்கம்:

மண்ணினால் கட்டப்பட்ட கோட்டை ஒன்று இருக்கின்றது. அந்தக் கோட்டையிலிருந்து இரண்டுவித தாளங்களின் சப்தங்கள் எப்போதும் கேட்கின்றது. அந்தக் கோட்டையினுள் ஐந்து சிற்றரசர்கள் இருக்கின்றார்கள். அவர்களுடனே அவர்களின் தலைவனான பேரரசன் ஒருவனும் அந்தக் கோட்டைக்குள் இருக்கின்றான். இருக்கும் காலம் முடியும்போது அந்தப் பேரரசன் வெளியே சென்றுவிட அவனுடனே ஐந்து சிற்றரசர்களும் சென்றுவிட்டனர். அவர்கள் சென்றபின் அந்தக் கோட்டை மீண்டும் மண்ணோடு மண்ணாகி அழிந்து போய்விட்டது. இதில் கோட்டை என்பது உயிரின் உடல். தாளங்கள் என்பது உயிர் உள்ளிழுக்கும் மூச்சும் வெளிவிடும் மூச்சுக்காற்றும் (இந்த இரண்டும் சேர்ந்துதான் அவர்களின் வாழ் நாட்களைக் கணக்கிடுகின்றது). ஐந்து சிற்றரசர்களாவது உடலிலிருக்கும் ஐந்து புலன்கள் (கண் – பார்த்தல், காது – கேட்டல், மூக்கு – நுகர்தல், வாய் – பேசுதல், தோல் – தொடுதல்), பேரரசன் என்பவர் இறைவன். எப்போது உயிர்கள் இழுத்து விடும் மூச்சுக்காற்றுக்களின் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கை முடிகின்றதோ அப்போது அவர்களின் உடலிலிருந்து உயிர் பிரிந்து உடல் அழிந்து மண்ணோடு மண்ணாகி விடும்.

பாடல் #190

பாடல் #190: முதல் தந்திரம் – 5. உயிர் நிலையாமை

வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை
வேங்கடத் துள்ளே விளையாடு நந்தியை
வேங்கடம் என்றே விரகறி யாதவர்
தாங்கவல் லாரினுயிர் தாமறி யாரே.

விளக்கம்:

உயிர்களின் உடலுக்கு தீயிட்டால் வெந்து போகின்ற இந்த உடலின் தலைவனாக இருப்பவனும் வேதங்களின் வழி வினைகளை அழித்து தன்னை அடைய உயிர்களின் உள்ளே இருந்து தனது திருவிளையாடலால் உணர்த்தி குருவாக இருக்கின்றான் கூத்தனான இறைவன். உயிர்கள் தமது உடலுக்குள்ளேயே இருந்து விளையாடும் உயிராக இருப்பது இறைவனே எனும் மாபெரும் ரகசியத்தை அறியாதவர்களாகவும் அண்டசராசரங்களையும் அதிலுள்ள அனைத்தையும் தாங்கவல்ல இறைவனே தமக்குள்ளும் உயிராக இருந்து தம்மையும் தாங்குகின்றான் என்பதையும் அறியாதவர்களாகவும் இருக்கின்றார்கள்.

கருத்து: உயிர் என்பது இறைவனே அந்த உயிர் எடுக்கும் பிறவியில் உடலுக்குள் வந்து அந்தப் பிறவியின் வினைப்படி உள்ளிருந்தே ஆட்டி வைத்து வினையை அழிப்பதும் இறைவனே இந்த ரகசியத்தை அறியாமல் இருக்கின்றனர் உயிர்கள்.

பாடல் #191

பாடல் #191: முதல் தந்திரம் – 5. உயிர் நிலையாமை

சென்றுணர் வான்திசை பத்தும் திவாகரன்
அன்றுணர் வாலளக் கின்ற தறிகிலர்
நின்றுண ரார்இந் நிலத்தின் மனிதர்கள்
பொன்றுணர் வாரிற் புணர்க்கின்ற மாயமே.

விளக்கம்:

சூரியன் தானிருக்கும் இடத்திலிருந்தே பத்து திசைகளுக்கும் (வடக்கு, வட கிழக்கு, கிழக்கு, தென் கிழக்கு, தெற்கு, தென் மேற்கு, மேற்கு, வட மேற்கு, மேல், கீழ்) தனது கதிர்களை அழைத்துச் சென்று அதன் மூலம் உருவாகிய வெளிச்சத்தினால் அனைத்தையும் உணர வைக்கின்றான். அதுபோலவே இறைவனும் உயிர்களின் உடலுக்குள்ளேயே உயிராக இருந்துகொண்டு அனைத்தையும் உணர வைக்கின்றான். இந்த உண்மையை உயிர்கள் அறிவதில்லை. இந்த உலகில் மீண்டும் மீண்டும் பிறந்து இறைவன் காட்டும் அனைத்தையும் கண்டும்கூட இறைவனை உணராத இந்த உலகத்து மனிதர்கள் தம்மைப் போலவே இந்த உலகத்தில் பிறந்து அனைத்தும் இறப்பதைக் கண்டும்கூட தமக்கும் இறப்பு ஒரு நாள் வரும் என்பதை உணராமல் தாம் இறக்கும் தருணம் மட்டுமே அதை உணரும் மற்ற மனிதர்களோடே கலந்து இறைவனை அறிய முயலுவது ஆச்சரியமே.

பாடல் #192

பாடல் #192: முதல் தந்திரம் – 5. உயிர் நிலையாமை

மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகை
பீறு மதனைப் பெரிதுணர்ந் தாரில்லை
கூறுங் கருமயிர் வெண்மயி ராவதும்
ஈறும் பிறப்புமொ ராண்டெனும் நீரே.

விளக்கம்:

பட்டு நூலை சிக்கல் எடுத்து கரை வைத்து அழகு கூட்டி கண்ணும் கருத்துமாக நெய்த பட்டாடைகூட நாளாக நாளாக நைந்து ஒரு நாள் கிழிந்து போய்விடும் என்பதை உணராமல் தாம் வாங்கும் பட்டாடை எப்போதும் இருக்கும் என்று எண்ணுகின்றனர் மக்கள். நாட்கள் சென்று கொண்டிருப்பதையும் தமக்கு வயது கூடி கிழப்பருவம் வருகின்றது என்பதையும் கருப்பாக இருந்த கூந்தல் வெள்ளையாக மாறுவதையும் உணர்ந்து கொள்ளாமல் சூரியன் மறைந்து தோன்றுவதற்கு ஒரு நாள் என்று கூறும் உயிர்கள் அது குறிப்பால் தமக்கும் வாழ் நாளைக் குறைத்துக் கொண்டிருப்பதை அறியாதவர்களாக இருக்கின்றனர்.

பாடல் #193

பாடல் #193: முதல் தந்திரம் – 5. உயிர் நிலையாமை

துடுப்பிடு பானைக்கும் ஒன்றே அரிசி
அடுப்பிடு மூன்றிற்கும் அஞ்செரி கொள்ளி
அடுத்தெரி யாமற் கொடுமின் அரிசி
விடுத்தன நாள்களும் மேற்சென் றனவே.

விளக்கம்:

ஒரு பானை அரிசி கரண்டி உள்ளது. இந்த மூன்றையும் வைத்து சோறு சமைக்க அடுப்பில் வைத்து அடுப்பினடியில் ஐந்து விறகுகளை வைத்து எரிக்க வேண்டும். விறகுகள் எரிய பதம்பார்த்துச் சமைக்கப்பட்ட அரிசி சோறாக மாறி உடலை வளர்க்கும் உணவாகின்றது. இதுபோலவே அழிகின்ற இந்த உடலுக்குள் அழிவைத்தராத ஒரு அரிசி இருக்கின்றது. எப்படி எனில் தியானத்தின் வழியாக உடம்பாகிய பானையில் இடகலை பிங்கலை என்கின்ற கரண்டியை வைத்து உபயோகித்து மூச்சுக்காற்றாகிய அரிசியை விறகுகளாகிய பிராணன் (உயிர்க்காற்று), அபானன் (மலக்காற்று), சமானன் (நிரவுக்காற்று), உதானன் (ஒலிக்காற்று), வியானன் (தொழிற்காற்று) வைத்து சமைத்தால் மூச்சுக்காற்று சுழுமுனை வழியே மேலெழும்பி சகஸ்ரரதளத்தை அடைந்து அமுதமாகிய சோறாக மாறும் அந்த அமுதமாகிய சோறானது உயிரை வளர்க்கும் உணவு. அந்த உணவைத் தொடர்ந்து உண்டு வருகின்ற உயிரானது அது இருக்கும் உடலுக்குக் கொடுக்கப் பட்ட காலங்கள் முடிந்தபோதும் அழிந்துவிடாமல் தொடர்ந்து மேலும் வாழ்ந்து இறைவனை தனக்குள் உணர்ந்து பேரின்பத்திலேயே இருக்கும்.

கருத்து: உடம்பில் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காலங்கள் முடியும் வரை மட்டுமே உயிர் வாழ்ந்து அது முடிந்ததும் உடல் அழியக்கூடியவை. உடல் அழியாமல் வைத்து இறைவனை அடைய வேண்டுமெனில் மூச்சுக்காற்றை சுழுமுனை நாடி வழியே மேலேற்றி சகஸ்ரரதளத்தை அடைந்து அமுதம் பெற்று அதைப் பருகி இருக்கும் உடலிலேயே உயிரை வைத்து இறைவனுடன் பேரின்பத்தில் இருக்கலாம்.

பாடல் #194

பாடல் #194: முதல் தந்திரம் – 5. உயிர் நிலையாமை

இன்புறு வண்டங்கு இனமலர் மேற்போய்
உண்பது வாசம் அதுபோல் உயிர்நிலை
இன்புற நாடி நினைக்கிலும் மூன்றொளி
கண்புற நின்ற கருத்தினுள்நில் லானே.

விளக்கம்:

இனிமையான தேனைச் சுவைக்க ஆசைகொண்ட வண்டுகள் அந்த இனிமையான தேனைத் தன் மகரந்தத்திற்குள் வைத்திருக்கும் தேன் இன மலர்களை அவற்றின் வாசனையின் மூலம் கண்டு பிடித்து அவற்றின் மேல் போய் உட்கார்ந்து அதன் மகரந்தத்திற்கு உள்ளிருக்கும் தேனை உறிஞ்சிக் குடித்து இன்பம் அடையும். அதுபோலவே உடலுக்குள் உயிராக நிற்கும் இறைவனை அறிய விரும்பாமல் உலகத்து ஆசைகளை அனுபவிக்க ஆசைப்படும் உயிர்கள் அந்த ஆசைகளை அனுபவிக்கும் வழிகளைத் தேடிச் சென்று வினைக் காரியங்களை செய்து அனுபவித்து சிற்றின்பம் அடையும். பகலில் காட்சிகளைக் காட்டும் சூரிய ஒளியாகவும் இரவில் காட்சிகளைக் காட்டும் சந்திர ஒளியாகவும் பகலிலும் இரவிலும் காட்சிகளைக் காணும் கண்ணின் ஒளியாகவும் இருக்கின்ற இறைவன், உலக இன்பத்தில் திளைத்திருக்க விரும்பும் உயிர்கள் காணும் காட்சியில் இருப்பானே தவிர அவர்களின் உணர்வுகளில் இருக்க மாட்டான்.

பாடல் #195

பாடல் #195: முதல் தந்திரம் – 5. உயிர் நிலையாமை

ஆம்விதி நாடி அறஞ்செய்மின் அந்நிலம்
போம்விதி நாடிப் புனிதனைப் போற்றுமின்
நாம்விதி வேண்டும தென்சொலின் மானிடர்
ஆம்விதி பெற்ற அருமைவல் லாருக்கே.

விளக்கம்:

உலகத்து உயிர்கள் மீண்டும் உலகத்தில் மனிதராக பிறக்கவேண்டும் என்றாலே அதற்கு பல நல்ல அறங்களைச் செய்திருக்க வேண்டும். மீண்டும் உலகில் மனிதராகப் பிறக்க வேண்டுமானால் பல நல்ல காரியங்களைச் செய்து மற்றவர்களுக்கு நன்மை செய்யுங்கள். இந்தப் பிறவியே போதும் இனிமேல் பிறவி வேண்டாம் இறைவனை அடைந்து முக்தி பெற வேண்டும் என்றால் அதற்கு இறைவனை நாடி அவனை எண்ணத்தில் எப்போதும் வைத்துப் போற்றி வழிபடுங்கள். நல்ல அறங்களைச் செய்து இந்த பிறவியில் சிறந்த மனிதப் பிறப்பை எடுத்தவர்களுக்கு இந்த இரண்டு விதிகளைத் தவிர மிகவும் சிறப்பாக சொல்வதற்கு வேறு விதிகள் இல்லை.

பாடல் #196

பாடல் #196: முதல் தந்திரம் – 5. உயிர் நிலையாமை

அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்
வெவ்விய னாகிப் பிறர்பொருள் வவ்வன்மின்
செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொரு
தவ்விக்கொ டுஉண்மின் தலைப்பட்ட போதே.

விளக்கம்:

பொய்யும் புரட்டும் பேசி அறவழிகளை அழிக்காதீர்கள். பொறாமையும் கோபமும் கொண்டு பிறரின் பொருட்களைப் பிடுங்கிக் கொள்ளாமல் இருங்கள். எண்ணமும் செயலும் சிறப்புடையவராக மாறி வாழ்வு சிறந்திருக்கும் போது உணவு உண்ணும்போது யாராவது வந்து பசிக்கிறது என்றால் ஒரு கைப்பிடி அளவாவது உணவை அவருக்கு அளித்தபின் உண்ணுங்கள். இப்படியெல்லாம் வாழ்ந்தால் உடல் அழிந்து உயிர் பிரிந்தாலும் இறைவனை அடைந்து பேரின்பம் அடையலாம்.