திருமந்திரம் பாடல் # 845 முதல் 850 வரை உள்ள ஆறு அமுரி தாரணை பாடல்கள் பற்றி பலர் பல கேள்விகள் கேட்டுள்ளார்கள். அதற்கான சிறு விளக்கம் இது. பாடலில் உள்ள விளக்கத்தின்படி அமுரி நீர் என்பது சுக்கிலம் மற்றும் திரோணிதம் ஆகும். இதனை 8 ஆண்டுகள் பிராணாயாமம் மற்றும் அகயோக பயிற்சிகள் மூலம் பயிற்சி செய்து தலை உச்சிக்கு கொண்டு சென்று நிலைத்திருக்க வைப்பது அமுரி தாரணை ஆகும். அமுரிநீரை தலை உச்சியில் கொண்டு சென்று நிலைத்திருக்க வைத்தால் முதுமை தன்மை மறைந்து இளமையுடன் எப்போதும் இருக்கலாம். இந்த அமுரி நீரை திருமூலர் சிவநீர் என்று குறிப்பிடுகிறார்.
சிவன் சொத்து குலநாசம் என்று ஒரு தத்துவம் நமது ஆன்மீகத்தில் உள்ளது. அதற்கு சரியான அர்த்தம் இப்பாடல்களே. சிவன் சொத்து என்பது சிவநீரான சுக்கிலம் ஆகும் இதனை மகளிருடன் போகத்தின் மூலம் விரையம் செய்தால் சந்ததியினர் உருவாகி குலம் விரித்தியடையும். இந்த சிவநீரை யோகப்பயிற்சிகள் மூலம் தலை உச்சிக்கு கொண்டு சென்று நிலைத்திருக்க வைப்பதினால் முதுமை தன்மை மறைந்து இளமையுடன் எப்போதும் பேரின்பத்தில் இருக்கலாம். அதனால் சாதகருக்கு வாரிசு இருக்காது. சந்ததியினர் இல்லாமல் குலம் நாசமாகிறது. இதுவே சிவன் சொத்து குலநாசம் என்பதன் முழு அர்த்தமாகும்.






