பாடல் #1248: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
உருவம் பலவுயி ராய்வல்ல நந்தி
தெருவம் புகுந்தமை தேர்வுற நாடிப்
புரிவளைக் கைச்சியெம் பொன்னணி மாதை
மருவி யிறைவன் மகிழ்வன மாயமே.
விளக்கம்:
பல்வேறு விதமான உயிர்களில் அந்தந்த உருவமாகவே இருக்கும் வல்லமையை உடையவனும் பாடல் #1247 இல் உள்ளபடி இறைவியைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்ற சாதகருக்குள் பாம்பும் கங்கையையும் அணிந்து இருக்கின்றவனும் ஆகிய இறைவனை தமக்குள் ஆராய்ந்து தேடிப் பார்த்து உணர்ந்து கொண்டால் அவனே குருநாதகராக வீற்றிருந்து பலவிதமான செயல்களைப் புரிந்து அருளும் அழகிய வளையல்களை அணிந்த திருக்கைகளையும் தங்க அணிகலன்களை முழுவதும் அணிந்திருக்கும் திருமேனியையும் உடைய இறைவியாகவே தான் மாறி இருக்கும் திருக்கோலத்தைக் காட்டி அருளுவதை பேரின்பத்தோடு பார்த்தால் ஒரு மாபெரும் அதிசயமாகவே இருக்கின்றது.