பாடல் #1247: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
தொடங்கி யுலகினிற் சோதி மணாளன்
அடங்கி இருப்பதெ னன்பின் பெருமை
விடங்கொள் பெருஞ்சடை மேல்வரு கங்கை
ஒடுங்கி உமையொடு மோருரு வாமே.
விளக்கம்:
ஆரம்பத்திலிருந்தே உலகத்தில் எப்போதும் ஒளி வடிவான இறைவியுடன் துணையாகவே சேர்ந்து இருக்கும் இறைவனே எமது உள்ளத்திற்குள்ளும் பேரன்பின் உச்ச நிலையாக எப்போதும் வீற்றிருக்கின்றான். இந்த இறைவனே பாடல் #1245 இல் உள்ளபடி சாதகர்கள் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்ற இறைவிக்குள்ளும் எப்போதும் அடங்கி ஒரே உருவமாக தனது கழுத்தில் விஷம் கொண்ட பாம்பையும் பின்னிய நீண்ட சடையின் உச்சியில் எப்போதும் பொங்கி வழிகின்ற கங்கையையும் கொண்டு வீற்றிருக்கின்றான்.