பாடல் #1200: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
ஆரே திருவின் திருவடி காண்பர்கள்
நேரே நின்றோதி நினையவும் வல்லார்க்குக்
காரேர் குழலி கமல மலரன்ன
சீரேயுஞ் சேவடி சிந்தைவைத் தாளே.
விளக்கம்:
இறைவியின் திருவடியை யாரால் தரிசிக்க முடியும் என்றால் இறைவனை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக தியானத்தில் வீற்றிருந்து பாடல் #1193 இல் உள்ளபடி தமக்குளிருந்து கிடைத்த மந்திரத்தை ஓதிக் கொண்டே இருக்க முடிந்தவர்களுக்கு கிடைக்கும் பேறாகும். இப்படி சாதகம் செய்பவர்களுக்கு மழை பொழியும் மேகங்களைப் போல கருமையான நிறத்தில் பேரழகு பொருந்திய கூந்தலை உடைய இறைவியானவள் தனது தாமரை மலர் போன்ற சீரும் சிறப்பும் வாய்ந்த மேன்மை மிக்க திருவடிகளை அவர்களது சிந்தையில் வைத்து அருளுவாள்.