பாடல் #1163: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
குத்து முலைச்சி குழைந்த மருங்கினள்
துத்தி விரிந்த சுணங்கினள் தூமொழி
பொத்தகச் சீறடிப் பாவை புணர்வினைத்
தொத்த கருத்துஅது சொல்லகில் லேனே.
விளக்கம்:
திண்ணிய முலைகளையும் சங்கு போல வளைந்து செதுக்கியது போன்ற இடுப்பையும் விருப்பத்திற்கு ஏற்ப பாம்பின் தலை போல விரித்து சுருங்கும் உடலையும் தூய்மையாக சொல்கின்ற இதழ்களையும் மயிலின் இறகு போன்ற மென்மையான திருவடிகளையும் பேரழகு பொருந்திய பெண் அம்சத்தையும் கொண்டு இருக்கும் சக்தியாக சாதகரே மாறி இறைவியோடு கலந்து இருக்கும் தன்மையை எம்மால் வார்த்தைகளில் விவரித்து சொல்ல இயலாது.
கருத்து:
பாடல் #1162 இல் உள்ளபடி இறைவியோடு சேர்ந்து இருந்து உலகத்தை தாங்கிக் கொண்டிருக்கும் இறைவியின் காரியங்களைச் செய்யும் சாதகர்கள் இறைவியின் அம்சங்களோடு வீற்றிருந்து செய்கின்ற நிலையை எம்மால் விவரித்து சொல்ல இயலவில்லை என்று அருளுகிறார்.
தத்துவ விளக்கம்:
இறைவியின் அம்சங்களில் திண்ணிய முலைகள் என்பது உயிர்களுக்குத் தேவையான அனைத்தையும் அளிக்கும் அமிழ்தப் பால் நிறைந்து இருப்பதைக் குறிக்கும். சங்கு போல வளைந்து செதுக்கியது போன்ற இடுப்பு என்பது அண்ட சராசரங்களையும் அதனதன் தன்மைக்கேற்ப தாங்கி இருப்பதைக் குறிக்கும். பாம்பின் தலை போல சுருங்கி விரியும் உடல் என்பது உலகங்கள் அனைத்தையும் தாங்கும் போது தேவைக்கு ஏற்ப தனது உருவத்தை விரிக்கவும் சுருக்கவும் கூடியவளாக இருப்பதைக் குறிக்கும். மயிலின் இறகு போன்ற மென்மையான திருவடிகள் என்பது அடியவர்களின் மனதை இனிமையாக வருடி அருளுவதைக் குறிக்கும். பேரழகு பொருந்திய பெண் என்பது அனைத்தையும் பெண் தன்மையில் இருந்து இறைவியின் சக்தி செயலாற்றுவதைக் குறிக்கும்.