பாடல் #1249: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
மாயம் புணர்க்கும் வளர்சடை யானடித்
தாயம் புணர்க்குஞ் சலந்தீ யமலனைக்
காயம் புணர்க்குங் கலவியுள் மாசத்தி
ஆயம் புணர்க்குமவ் வியோனியு மாமே.
விளக்கம்:
அசையா சக்தியாகிய இறைவனுக்குள் அண்ட சராசரங்களையும் அதிலிருக்கும் அனைத்து உலகங்களையும் அதற்குள் அனைத்து உயிர்களையும் படைக்க வேண்டும் என்கிற எண்ணம் வரும் போது அவரிடமிருந்து அசையும் சக்தியாகப் பிரிந்து வருகின்ற இறைவியின் மாயா அம்சத்தோடு உலகங்களும் உயிர்களும் உருவாக வேண்டும் என்ற காரணத்திற்காக சேருகின்ற நீண்ட சடையை உடைய மாசற்ற இறைவன் தம்மை அறிந்து அடைய வேண்டும் என்று ஆசைப்படுகின்ற உயிர்களுக்கு அருள வேண்டும் என்கிற பெருங்கருணையில் உயிர்களின் உடலை பஞ்ச பூதங்களிலுள்ள நீரையும் நெருப்பையும் கலந்து உருவாக்கும் போது தமது திருவடியையும் சேர்த்தே வைத்து உருவாக்கி அருளுகின்றான். உயிர்கள் பிறவி எடுப்பதற்கு தேவையான உடலை உருவாக்க வேண்டி இறைவனுடன் சேர்ந்து கலக்கின்ற பராசக்தியாகிய இறைவியும் தங்களின் கலப்புக்குள்ளிருந்து பலவித உருவங்களோடு உயிர்கள் அனைத்தையும் ஒரு மாபெரும் கூட்டமாக உலகங்கள் அனைத்திலும் சேர்ந்து பிறப்பதற்கு மாபெரும் காரணமாக இருக்கின்றாள்.
உட்கருத்து:
கர்மங்களைத் தீர்த்துக் கொள்ள மாயையுடன் உயிர்களைப் படைத்தாலும் அந்த மாயை நீங்கி உண்மையை உணர்ந்து தம்மிடம் வந்து அடைவதற்கான ஆதாரமாக தமது திருவடியை உயிர்களுக்குள் வைத்தே படைத்து அருளுகின்றான் இறைவன். தமக்குள் ஆதாரமாக இருக்கின்ற இறைவனின் திருவடிகளை உணர்ந்து பற்றிக் கொண்ட உயிர்களுக்கு கிடைக்கும் மாபெரும் ஆதேயமாக இறைவனின் திருவருள் இருக்கின்றது.