பாடல் #1231: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
அதுவிது வென்றவ மேகழி யாதே
மதுவிரி பூங்குழல் மங்கைநல் லாளைப்
பதிமது மேவிப் பணியவல் லார்க்கு
விதிவழி தன்னையும் வென்றிட லாமே.
விளக்கம்:
பாடல் #1230 இல் உள்ளபடி முக்திக்கான ஆரம்பத்தை அறிந்து கொள்ளும் சரியான வழியை தெரிந்து கொள்ளாமல் அது என்றும் இது என்றும் பலவிதமான வழிகளில் சென்று வாழ்நாட்களை வீணாகக் கழிக்காமல் அடியவர்களை மயக்கும் தேன் கொண்டு மலர்ந்து இருக்கும் நறுமணம் மிக்க பூக்களைச் சூடியிருக்கும் அழகிய கூந்தலுடன் என்றும் இளமையுடன் இருக்கும் நன்மையின் வடிவான இறைவியும் அவளோடு சேர்ந்து இறைவனும் தமக்குள் வீற்றிருக்கும் சகஸ்ரதளத்தில் தமது குண்டலினி சக்தியை பாடல் #1230 இல் உள்ளபடி சுழுமுனை நாடியின் வழியே மூலாதாரத்திலிருந்து மேலேற்றிச் சென்று சேர்த்து அங்கிருக்கும் அமிழ்தத்தைப் பருகி அங்கிருக்கும் இறைவனையும் இறைவியையும் உணர்ந்து அவர்களைப் பணிந்து வணங்க முடிந்தவர்களுக்கு அவர்களின் விதி என்று சொல்லப்படும் அனைத்து கர்மங்களையும் ஆணவத்தையும் மாயையும் வென்றுவிட முடியும்.
