பாடல் #1220: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
ஆயிழை யாளொடு மாதிப் பரமிடம்
ஆயதோ ரண்டவை யாறு மிரண்டுள
ஆய மனந்தோ றறுமுக மவைதனில்
ஏயவார் குழலி யினிதுநின் றாளே.
விளக்கம்:
பாடல் #1219 இல் உள்ளபடி சக்திமயமாக மாறிய சாதகரின் உடலுக்குள் வந்து வீற்றிருக்கும் அழகிய ஆபரணங்களை அணிந்த இறைவியோடு ஆதிப் பரம்பொருளாகிய இறைவனும் சேர்ந்து வீற்றிருக்கின்றார். அப்போது சாதகர் தமது எண்ணத்தால் அவர்களை நோக்கி நெருங்கிச் செல்லும் போது அவர்கள் இருவரும் சேர்ந்த அம்சமானது சாதகரின் உடலுக்குள் இருக்கின்ற ஆறு ஆதாரச் சக்கரங்களும் அவரது தலை உச்சியில் இருக்கின்ற சகஸ்ரதளமும் தலை உச்சியைத் தாண்டி இருக்கின்ற துவாதசாந்த வெளியும் ஆகிய எட்டு இடங்களிலும் வந்து வீற்றிருக்கும். அதன் விளைவால் புனிதமாக மாறிய சாதகரின் மனமும் அவருக்குள் இருக்கின்ற ஆறு ஆதாரச் சக்கரங்களும் இறைவியின் திருமுகமாக மாறி அதில் நறுமணம் வீசுகின்ற நீண்ட கூந்தலையுடைய இறைவி இனிமையாக வீற்றிருக்கின்றாள்.
கருத்து: சாதகருக்குள் வீற்றிருக்கின்ற இறைவனும் இறைவியும் சாதரின் எண்ணத்தால் நெருங்கும் பொழுது அவருக்குள் இருக்கின்ற எட்டு இடங்களிலும் வீற்றிருந்து அதன் விளைவால் அவரது மனதை இறைவியின் தூய்மையான மனமாகவே மாற்றுகின்ற விதத்தை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம்.