பாடல் #1209: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
சூடு மிளம்பிறை சூலி கபாலினி
நீடு மிளங்கொடி நின்மலி நேரிழை
நாடி நடுவிடை ஞான முருவநின்
றாடு மதன்வழி யண்ட முதல்வியே.
விளக்கம்:
பாடல் #1208 இல் உள்ளபடி சாதகர்கள் நாடி வந்து திருவடியில் சரணாகதியாகத் தொழுது நிற்கும் போது அவர்களை ஆட்கொண்டு நிற்கின்ற இறைவியானவள் தன் திருமுடியில் இரு பக்கமும் கூர்மையான முனைகளைக் கொண்ட பிறைச் சந்திரனை சூடிக் கொண்டும் தனது திருக்கரத்தில் திரிசூலத்தை ஏந்திக் கொண்டும் திருக்கழுத்தில் மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து கொண்டும் நீண்டு வளர்ந்து என்றும் இளமையாக இருக்கும் பசுமையான கொடியைப் போலவும் எந்தவிதமான மலங்களும் இல்லாமல் தூய்மையானவளாகவும் அழகிய ஆடை ஆபரணங்களை அணிந்து கொண்டும் வீற்றிருக்கின்றாள். நடுவில் இருக்கும் சுழுமுனை நாடியில் உண்மை ஞானத்தின் சொரூபமாய் நின்று பாடல் #1207 இல் உள்ளபடி அவள் ஆடுகின்ற திருக்கூத்தின் அசைவுகளுக்கு ஏற்ப அண்ட சராசரங்களையும் ஆட்டி வைத்து அனைத்திற்கும் முதல்வியாக இருக்கின்றாள்.