பாடல் #1206: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
ஆமையொன் றேறி யகம்படி யானென
ஓமென்று வோதியெம் முள்ளொளி யாய்நிற்கும்
தாம நறுங்குழற் றையலைக் கண்டபின்
சோம நறுமலர் சூடிநின் றாளே.
விளக்கம்:
ஆமை தனது தலையையும் நான்கு கால்களையும் ஓட்டுக்குள் இழுத்துக் கொள்ளுவது போல சாதகர் தமக்குள் இருக்கும் ஐந்து புலன்களையும் வெளிப்புறத்தில் கவனம் செல்லாது தடுத்து தமக்குள் அடக்கி வைத்து ஓம் எனும் மந்திரத்தை ஓதிக்கொண்டே இருந்தால் சாதகருக்குள் சூழ்ந்திருக்கும் இருளுக்குள் மறைந்து உள்ளுக்குள் ஒளியாக நிற்கும் நறுமணம் வீசுகின்ற கூந்தலுடன் ஒன்றோடு ஒன்று தைப்பது போல சாதகரோடு பிண்ணிப் பிணைந்து இருக்கின்ற இறைவியை தரிசித்து விட்டால் அதன் பிறகு அவளே சாதகரின் தலை உச்சிக்கு மேலே இருக்கும் ஒன்பதாவது மண்டலமாகிய சந்திர மண்டலத்தில் நறுமணம் வீசுகின்ற மலர்களைச் சூடிக்கொண்டு இருக்கிறாள் என்பதை அறிந்து உணர்ந்து கொள்ளலாம்.
கருத்து:
சமாதியில் இருக்கும் சாதகருக்குள் மாயை எனும் இருளுக்குள் மறைந்து ஒளியாக இருக்கும் இறைவியை தனது ஐந்து புலன்களையும் அடக்கி ஓங்கார மந்திரத்தை செபிப்பதின் மூலம் தரிசித்து விட்டால் அதன் பிறகு அந்த மாயை இருள் நீங்கி பேரொளிப் பிரகாசமாக சந்திர மண்டலத்தில் வீற்றிருக்கின்ற இறைவியே தமக்குள் ஒளியாக இருக்கின்றாள் என்பதை அறிந்து உணர்ந்து கொள்ளலாம்.