பாடல் #1180: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
பத்து முகமுடை யாளெம் பராசத்தி
வைத்தன ளாறங்க நாலுடன் றான்வேதம்
ஒத்தனள் ளாதார மொன்றுட னோங்கியே
நித்தமாய் நின்றாளெம் நேரிழை கூறே.
விளக்கம்:
பாடல் #1179 இல் உள்ளபடி பத்து திசைகளையும் தமக்குள் கொண்டவளான இறைவி இறைவனோடு சேர்ந்து எப்படி இருக்கின்றாள் என்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம். பத்து திசைகளையும் பத்து முகங்களாகக் கொண்ட எமது பராசக்தியான இறைவியே உயிர்கள் உய்ய வேண்டும் என்று நான்கு வேதங்களையும் அவற்றின் ஆறு அங்கங்களையும் உருவாக்கி வைத்து அருளினாள். அவளே அனைத்திற்கும் ஆதாரமான இறைவனுடன் ஒன்றாகச் சேர்ந்து மிகவும் உயர்ந்த நிலையில் எல்லா காலத்திலும் எப்போதும் இறைவனுடன் சரிசமமான பாகமாக சேர்ந்தே நிற்கின்றாள்.
வேதத்தின் ஆறு அங்கங்கள்:
- சிட்சை – வேதத்தின் எழுத்து மற்றும் ஒலி முதலியவற்றைப் பற்றிச் சொல்வது.
- வியாகரணம் – சொற்களின் இலக்கணத்தை ஆராய்வது.
- சந்தம் – செய்யுள் இலக்கணம் பற்றிச் சொல்வது.
- சோதிடம் – கோள் நிலைகளை வைத்து காலத்தை ஆராய்வது.
- நிருக்தம் – வேதச் சொற்களுக்கு பொருள் கூறுவது.
- கல்பம் – வேதத்தின் செயல் முறைகளை உரைப்பது.