பாடல் #1177: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
கொங்கீன்ற கொம்பின் குரும்பைக் குலாங்கன்னி
பொங்கிய குங்குமத் தொளி பொருந்தினள்
அங்குச பாச மெனுமகி லங்கனி
தங்கு மவள்மனை தானறி வாயே.
விளக்கம்:
பாடல் #1176 இல் உள்ளபடி இறைவனோடு பூவும் அதிலிருந்து வரும் நறுமணமும் போல ஒன்றாகக் கலந்து இருக்கின்ற இறைவியானவளின் திரு உருவத்தை தமக்குள் அறிந்து உணர்ந்து கொள்வதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம். நறுமணத்தை தருகின்ற வாசனை மிக்க மலர்கள் பூத்திருக்கும் செடியின் கொம்பு போன்ற மெல்லிய இடையுடனும் மலரின் அரும்பு போன்ற மென்மையான முலைகளுடனும் என்றும் இளமையுடன் இருக்கின்ற இறைவியானவள் சாதகருக்குள்ளிருந்து பொங்கி வெளிப்படும் குங்குமம் போன்ற சிவந்த ஒளி வீசும் திரு உருவத்தைக் கொண்டவள். அவளது திருக்கைகளில் அங்குசத்தையும் பாசக் கயிறையும் ஏந்திக் கொண்டு அடியவர்களின் உலகப் பற்றை அடக்கி ஆளுகின்றாள். அனைத்து உலகங்களிலும் அன்போடு வீற்றிருக்கின்ற அவள் தங்கியிருக்கும் வீடாகிய சாதகரின் உடலுக்குள் தாமாகவே தேடி அறிந்து கொள்ளுங்கள்.
