பாடல் #1169: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
பராசத்தி யென்றென்று பல்வகை யாலுந்
தராசத்தி யான தலைப்பிர மாணி
இராசத்தி யாமள வாகமத் தாளாகுங்
குராசத்தி கோலம் பலவுணர்ந் தேனே.
விளக்கம்:
பாடல் #1168 இல் உள்ளபடி பராசக்தியாகவே ஆகிவிடுகின்ற சாதகர் அந்த பராசக்தியின் பலவித அம்சங்களில் பல வகையான உலக இயக்கங்களை செய்து கொண்டு இருக்கும் போது அவருக்கு அருளைத் தருகின்ற சக்தியாக இருப்பது அனைத்திற்கும் தலையான பிரம்மம் என்று உணரப்படும் இறைவியாகும். இந்த இறைவியே இரா சக்தி என்று யாமள ஆகமத்தில் அழைக்கப்படுகிறாள். குருவாக வந்து அருளுகின்ற இவளது பலவிதமான திருக்கோலங்களை யாம் எமக்குள்ளே தரிசித்து உணர்ந்து கொண்டோம்.
