பாடல் #1168: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
கன்னி யொளியென நின்றஇச் சந்திரன்
மன்னி யிருக்கின்ற மாளிகை செந்நிறம்
சென்னி யிருப்பிடஞ் சேர்பதி னாறுடன்
பன்னி யிருப்பப் பராசக்தி யாமே.
விளக்கம்:
பாடல் #1167 இல் உள்ளபடி அனைவரும் வணங்கும் அளவிற்கு என்றும் இளமையுடன் இருக்கும் இறைவியால் அருளப்பட்ட சாதகர் பேரொளியாக இருக்கும் இறைவியிடமிருந்தே எவ்வாறு சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று இரவில் நிலா பிரகாசிக்கிறதோ அது போலவே இறைவியாகிய அருட் பேரொளியிடமிருந்து தாம் ஒளியாகிய அருளைப் பெறுவதையும் அந்த அருள் நிரப்பப்பட்டதால் மாளிகை போல இருக்கும் தமது உடல் முழுவதும் அருள் நிறைந்து இருக்கின்றார். அதன் பிறகு தமது தலை உச்சியில் உள்ள சகஸ்ரதள ஜோதியோடு உடல் முழுவதும் உள்ள பதினாறு கலைகளையும் (பாடல் #713 இல் காண்க) ஒன்று சேர்த்து தமக்குள் இருக்கும் அருளைக் கொண்டு அனைத்து உலகங்களையும் இயக்கிக் கொண்டே இருப்பதால் ஆதிப் பரம்பொருளான பராசக்தியாகவே சாதகர் ஆகிவிடுகின்றார்.