பாடல் #1370: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
சிந்தையி னுள்ளே திகழ்தரு சோதியா
யெந்தை கரங்க ளிருமூன்று முள்ளது
பந்தமாஞ் சூலப் படைபாசம் வில்லம்பு
முந்தை கிலியெழ முன்னிருந் தாளே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
சிநதையி னுளளெ திகழதரு சொதியா
யெநதை கரஙக ளிருமூனறு முளளது
பநதமாஞ சூலப படைபாசம விலலமபு
முநதை கிலியெழ முனனிருந தாளெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
சிந்தையின் உள்ளே திகழ் தரு சோதியாய்
எந்தை கரங்கள் இரு மூன்றும் உள்ளது
பந்தம் ஆம் சூலம் படை பாசம் வில் அம்பு
முந்தை கிலி எழ முன் இருந்தாளே.
பதப்பொருள்:
சிந்தையின் (தமக்குள்ளிருந்து கிடைத்த நவாக்கிரி மந்திரத்தை சிந்தித்துக் கொண்டு இருக்கும் சாதகரின் எண்ணங்களுக்கு) உள்ளே (உள்ளே) திகழ் (பிரகாசமான ஒளியைத்) தரு (தருகின்ற) சோதியாய் (ஜோதி வடிவமாகவும்)
எந்தை (எமது தந்தையாகிய இறைவனின் அம்சத்தில்) கரங்கள் (கைகள்) இரு (இரண்டும்) மூன்றும் (மூன்றும் பெருக்கி மொத்தம் ஆறு கைகள்) உள்ளது (கொண்டு இருக்கும் வடிவமாகவும்)
பந்தம் (தீச்சட்டி) ஆம் (ஆகவும்) சூலம் (திரிசூலம்) படை (அங்குசம்) பாசம் (பாசக் கயிறு) வில் (வில்) அம்பு (அம்பு ஆகிய ஆறு ஆயுதங்களோடு)
முந்தை (சாதகரின் முந்தைப் பிறவிகளில் இருந்து தொடர்ந்து வருகின்ற மும்மல இருளும்) கிலி (பயந்து விலகும் படி) எழ (பேரொளியாக எழுந்து) முன் (சாதகரின் சிந்தனைக்கு முன்பு) இருந்தாளே (நிற்கின்றாள் இறைவி).
விளக்கம்:
பாடல் #1369 இல் உள்ளபடி தமக்குள்ளிருந்து கிடைத்த நவாக்கிரி மந்திரத்தை சிந்தித்துக் கொண்டு இருக்கும் சாதகரின் எண்ணங்களுக்கு உள்ளே பிரகாசமான ஒளியைத் தருகின்ற ஜோதி வடிவமாகவும் எமது தந்தையாகிய இறைவனின் அம்சத்தில் ஆறு கைகளைக் கொண்டு இருக்கும் வடிவமாகவும் அந்த ஆறு கைகளிலும் தீச்சட்டி திரிசூலம் அங்குசம் பாசக் கயிறு வில் அம்பு ஆகிய ஆறு ஆயுதங்களோடும் சாதகரின் முந்தைப் பிறவிகளில் இருந்து தொடர்ந்து வருகின்ற மும்மல இருளும் பயந்து விலகும் படி பேரொளியாகவும் எழுந்து சாதகரின் சிந்தனைக்கு முன்பு நிற்கின்றாள் இறைவி.