பாடல் #1321

பாடல் #1321: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நவாக்கிரி யாவது நானறி வித்தை
நவாக்கிரி யுள்ளெழும் நன்மைக ளெல்லாம்
நவாக்கிரி மந்திரம் நாவுள்ளே யோத
நவாக்கிரி சத்தி நலந்தருந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நவாககிரி யாவது நானறி விததை
நவாககிரி யுளளெழு நனமைக ளெலலா
நவாககிரி மநதிரம நாவுளளெ யொத
நவாககிரி சததி நலநதருந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நவ அக்கிரி ஆவது நான் அறி வித்தை
நவ அக்கிரி உள் எழும் நன்மைகள் எல்லாம்
நவ அக்கிரி மந்திரம் நாவுள்ளே ஓத
நவ அக்கிரி சத்தி நலம் தரும் தானே.

பதப்பொருள்:

நவ (ஒன்பது) அக்கிரி (சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட) ஆவது (சக்கரமாவது) நான் (யான்) அறி (அறிந்து கொண்ட) வித்தை (ஞானக் கலையாகும்)
நவ (ஒன்பது) அக்கிரி (சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட) உள் (சக்கரத்திற்குள்ளிருந்து) எழும் (எழுகின்ற) நன்மைகள் (நன்மைகளை) எல்லாம் (எல்லாம் அடைய வேண்டுமென்றால்)
நவ (ஒன்பது) அக்கிரி (சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட) மந்திரம் (இந்த மந்திரத்தை) நாவுள்ளே (நாக்குக்குள்ளேயே வைத்து) ஓத (சத்தமில்லாமல் ஓதினால்)
நவ (ஒன்பது) அக்கிரி (சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட) சத்தி (இந்த சக்கரத்தில் வீற்றிருக்கும் சக்திகள்) நலம் (அனைத்து நலங்களையும்) தரும் (கொடுத்து) தானே (தானே அருளுவார்கள்).

விளக்கம்:

ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட நவாக்கிரி சக்கரமாவது யான் அறிந்து கொண்ட கலைகளாகிய கர்மாக்களை அழித்து பிறவி அறுத்தல், இனியும் கர்மங்கள் சேராமல் தடுத்தல், இறைவனை தமக்குள் உணர்ந்து அடைவது ஆகியவை ஆகும். இந்த மூன்று விதமான நன்மைகளும் இந்த சக்கரத்திற்குள்ளிருந்தே கிடைக்கும். அதனை அடைய வேண்டுமென்றால் இந்த மந்திரத்தை நாக்கை மட்டும் அசைத்து சத்தமில்லாமல் ஓதினால் இந்த சக்கரத்தில் வீற்றிருக்கும் சக்திகள் அனைத்து நலங்களையும் தானே கொடுத்து அருளுவார்கள்.

இப்பாடலை திருமந்திர சுவடி எழுத்துக்கள் மற்றும் பதப்பொருள் விளக்கத்துடன் படிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.