பாடல் #1320

பாடல் #1320: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

சௌம் முதல் வெளவொடு ஹெளவுளுமீறிக்
கௌவுளு மையுளுங் கலந்தி றீசிறீயென்
றொவ்வி லெழுங்கிலீ மந்திர பாதமாச்
செவ்வி லெழுந்து சிவாய நமவென்னே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சௌம முதல வெளவொட வெறளவுளுமீறிக
கௌவுளு மையுளுங கலந்தி றீசிறீயென
ரொவவி லெழுஙகிலீ மநதிர பாதமாச
செவவி லெழுநது சிவாய நமவெனனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சௌம் முதல் வௌவ் வோடு ஹௌ உளும் ஈறிக்
கௌ உளும் ஐ உளும் கலந்து இறீ சிறீ என்று
ஓவ் இல் எழும் கிலீ மந்திர பாதம் ஆச்
செவ்வில் எழுந்து சிவாய நம என்னே.

பதப்பொருள்:

சௌம் (ஸௌம் எனும் அட்சரம்) முதல் (முதலாக) வௌவ் (ஔம் எனும்) வோடு (அட்சரத்தோடு சேர்த்து) ஹௌ (ஹௌம் எனும் அட்சரத்தின்) உளும் (உள்ளும்) ஈறிக் (இறுதியில்)
கௌ (கௌம் எனும் அட்சரத்தின்) உளும் (உள்ளும்) ஐ (ஐம் எனும் அட்சரத்தின்) உளும் (உள்ளும்) கலந்து (ஒன்றாகக் கலந்து) இறீ (ஹ்ரீம் எனும் அட்சரம்) சிறீ (ஶ்ரீம் எனும் அட்சரம்) என்று (என்றும்)
ஓவ் (ஓம் எனும்) இல் (அட்சரத்திலிருந்து) எழும் (எழுகின்ற) கிலீ (க்லீம் எனும் அட்சரம் வரை உள்ள) மந்திர (மந்திரத்தின்) பாதம் (அடியாகவும் கொண்டு) ஆச் (அந்த மந்திரத்தை செபிப்பதற்கு ஏற்ற)
செவ்வில் (சமயத்தில்) எழுந்து (மனதை ஒருநிலைப் படுத்தி) சிவாய நம என்னே (ஒன்பது அட்சரங்கள் உள்ள இந்த மந்திரத்தை சொல்லி சிவாய நம என்று சொல்லுங்கள்).

விளக்கம்:

‘ஸௌம்’ எனும் அட்சரம் முதலாக ‘ஔம்’ எனும் அட்சரத்தோடு சேர்த்து ‘ஹௌம்’ எனும் அட்சரத்தின் உள்ளும் இறுதியில் ‘கௌம்’ எனும் அட்சரத்தின் உள்ளும் ‘ஐம்’ எனும் அட்சரத்தின் உள்ளும் ஒன்றாகக் கலந்து ‘ஹ்ரீம்’ எனும் அட்சரமாகவும் ஸ்ரீம்’ எனும் அட்சரமாகவும் வெளிப்பட்டு ‘ஓம்’ எனும் அட்சரத்திலிருந்து எழுகின்ற ‘க்லீம்’ எனும் அட்சரம் வரை உள்ளது. இந்த ஒன்பது அட்சரங்கள் கொண்ட மந்திரத்தை முதலாகக் கொண்டு மந்திரத்தை செபிப்பதற்கு ஏற்ற சமயத்தில் மனதை ஒருநிலைப் படுத்தி இந்த மந்திரத்தை சொல்லி பின்பு சிவாய நம என்று தொடர்ச்சியாகச் சொல்லுங்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.