பாடல் #1357

பாடல் #1357: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

உற்றிட மெல்லா முலப்பிலி பாழாகக்
கற்றிட மெல்லாங் கடுவெளி யானது
மற்றிட மில்லை வழியில்லைத் தானில்லைச்
சற்றிட மில்லைச் சலிப்பற நின்றிடே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உறறிட மெலலா முலபபிலி பாழாகக
கறறிட மெலலாங கடுவெளி யானது
மறறிட மிலலை வழியிலலைத தானிலலைச
சறறிட மிலலைச சலிபபற நினறிடெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உற்ற இடம் எல்லாம் உலப்பு இலி பாழ் ஆகக்
கற்ற இடம் எல்லாம் கடு வெளி ஆனது
மற்ற இடம் இல்லை வழி இல்லை தான் இல்லை
சற்ற இடம் இல்லை சலிப்பு அற நின்றிடே.

பதப்பொருள்:

உற்ற (சாதகரிடமிருந்து வெளிவந்த மந்திர அதிர்வலைகள் சென்ற) இடம் (இடங்களில்) எல்லாம் (எல்லாவற்றிலும் நவாக்கிரி சக்கரத்திலிருந்து வருகின்ற) உலப்பு (அழிவு என்பதே) இலி (இல்லாத இறை சக்தியினால்) பாழ் (கொடுமையான வினைகள் அனைத்தும் கெட்டு அழிந்து) ஆகக் (போய் விடும்)
கற்ற (சாதகர் இதுவரை தாம் கற்றுக் கொண்ட அனைத்து விஷயங்களையும்) இடம் (ஞாபகமாக வைத்திருந்த எண்ணங்களின் சேமிப்பு) எல்லாம் (அனைத்தும் அழிந்து போய்) கடு (அந்த இடம் வெற்று) வெளி (இடமாக) ஆனது (ஆகி விடும்)
மற்ற (அனைத்து இடத்திலும் இருக்கின்ற சாதகர்களுக்கு ஒன்றோடு ஒன்று வேறு படுத்திப் பார்க்கின்ற) இடம் (இடம் என்று) இல்லை (எதுவும் இல்லாமல் போய் விடும்) வழி (அதனால் சாதகர் இடத்தின் மூலம் செல்ல வேண்டிய வழிகள் என்று) இல்லை (எதுவும் இல்லாமலும்) தான் (தான் என்கிற உடலோ மனமோ எண்ணமோ ஆகிய எதுவும்) இல்லை (இல்லாமல் இருப்பார்)
சற்ற (அதன் பிறகு அவரைச் சுற்றி இருக்கின்ற உலகம் என்ற) இடம் (இடங்கள் எதுவும்) இல்லை (இல்லாமல் போய் விடும்) சலிப்பு (ஆகவே சாதகர்கள் இதனால் எந்தவிதமான மனச் சோர்வோ அல்லது சலிப்போ) அற (அடைந்து விடாமல்) நின்றிடே (தாம் செய்கின்ற சாதகத்தை தொடர்ந்து சமாதி நிலையில் செய்து கொண்டே இருக்க வேண்டும்).

விளக்கம்:

பாடல் #1356 இல் உள்ளபடி சாதகரின் எண்ணங்களின் மூலம் தம்மைச் சுற்றி மந்திர அதிர்வலைகளை அனுப்பிய எல்லா இடத்திலும் நவாக்கிரி சக்கரத்திலிருந்து வருகின்ற அழிவில்லாத இறை சக்தியினால் கொடுமையான வினைகள் அனைத்தும் கெட்டு அழிந்து போய் விடும். சாதகர் இதுவரை தாம் கற்றுக் கொண்ட அனைத்து விஷயங்களையும் ஞாபகமாக வைத்திருந்த எண்ணங்களின் சேமிப்பு அனைத்தும் அழிந்து போய் அந்த இடம் வெற்று இடமாக ஆகி விடும். அனைத்து இடத்திலும் இருக்கின்ற சாதகர்களுக்கு ஒன்றோடு ஒன்று வேறு படுத்திப் பார்க்கின்ற இடம் என்று எதுவும் இல்லாமல் போய் விடும். அதனால் சாதகர் இடத்தின் மூலம் செல்ல வேண்டிய வழிகள் என்று எதுவும் இல்லாமலும் தான் என்கிற உடலோ மனமோ எண்ணமோ ஆகிய எதுவும் இல்லாமல் இருப்பார். அதன் பிறகு அவரைச் சுற்றி இருக்கின்ற உலகம் என்ற இடங்கள் எதுவும் இல்லாமல் போய் விடும். ஆகவே சாதகர்கள் இதனால் எந்தவிதமான மனச் சோர்வோ அல்லது சலிப்போ அடைந்து விடாமல் தாம் செய்கின்ற சாதகத்தை தொடர்ந்து சமாதி நிலையில் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

குறிப்பு:

சமாதி நிலையில் இருக்கின்ற சாதகர்கள் நிலையை இந்தப் பாடலில் தெரிந்து கொள்ளலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.