பாடல் #1400

பாடல் #1400: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

கடந்தவள் பொன்முடி மாணிக்கத் தோடு
தொடர்ந்தணி முத்துப் பவளங் கச்சாகப்
படர்ந்தல் குற்பட்டாடை பாதச் சிலம்பு
மடந்தை குமிறீயில் வந்துநின் றாளே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கடநதவள பொனமுடி மாணிககத தொடு
தொடரநதணி முததுப பவளங கசசாகப
படரநதல குறபடடாடை பாதச சிலமபு
மடநதை குமிறீயில வநதுநின றாளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கடந்து அவள் பொன் முடி மாணிக்க தோடு
தொடர்ந்து அணி முத்து பவளம் கச்சு ஆக
படர்ந்த அல்குல் பட்டு ஆடை பாத சிலம்பு
மடந்தைக்கும் இறீம் இல் வந்து நின்றாளே.

பதப்பொருள்:

கடந்து (அனைத்தையும் தாண்டி இருக்கின்ற) அவள் (மாபெரும் சக்தியான இறைவி) பொன் (தங்கத்தாலான) முடி (கிரீடத்தை தனது திருமுடியிலும்) மாணிக்க (மாணிக்கத்தாலான) தோடு (தோடுகளை தனது திருக்காதுகளிலும்)
தொடர்ந்து (அதைத் தொடர்ந்து) அணி (அணிந்து இருக்கின்ற) முத்து (முத்துக்களாலான ஆரத்தை தனது திருக்கழுத்திலும்) பவளம் (பவளங்களால் பதிக்கப் பட்ட) கச்சு (கச்சையை) ஆக (தனது திருமார்பிலும் அணிந்து கொண்டு)
படர்ந்த (தனது திருஇடையைத் தாண்டி படர்ந்து இருக்கின்ற) அல்குல் (கீழ் பகுதியில்) பட்டு (பட்டாலான) ஆடை (ஆடையையும்) பாத (தனது திருவடிகளில்) சிலம்பு (சிலம்புகளையும் அணிந்து கொண்டு)
மடந்தைக்கும் (சாதகருக்குள் இருக்கும் நவாக்கிரி சக்கரத்தில் ஆரம்ப நிலையில் இருக்கின்ற) இறீம் (‘ஹ்ரீம்’ எனும் பீஜ) இல் (மந்திரத்தில்) வந்து (வந்து) நின்றாளே (வீற்றிருக்கின்றாள்).

விளக்கம்:

பாடல் #1399 இல் உள்ளபடி அனைத்தையும் தாண்டி இருக்கின்ற மாபெரும் சக்தியான இறைவி தங்கத்தாலான கிரீடத்தை தனது திருமுடியிலும் மாணிக்கத்தாலான தோடுகளை தனது திருக்காதுகளிலும் முத்துக்களாலான ஆரத்தை தனது திருக்கழுத்திலும் பவளங்களால் பதிக்கப் பட்ட கச்சையை தனது திருமார்பிலும் தனது திருஇடையைத் தாண்டி படர்ந்து இருக்கின்ற கீழ் பகுதியில் பட்டாலான ஆடையையும் தனது திருவடிகளில் சிலம்புகளையும் அணிந்து கொண்டு சாதகருக்குள் இருக்கும் நவாக்கிரி சக்கரத்தில் ஆரம்ப நிலையில் இருக்கின்ற ‘ஹ்ரீம்’ எனும் பீஜ மந்திரத்தில் வந்து வீற்றிருக்கின்றாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.