பாடல் #1416

பாடல் #1416: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

கொண்டங் கிருந்தனர் கூத்த னொழியினைக்
கண்டங் கிருந்தனர் காரணத் துள்ளது
பண்டை மறைகள் பரந்தெங்குந் தேடுமா
மின்றென் மனத்துள்ளே யில்லடைந் தாளுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கொணடங கிருநதனர கூதத னொழியினைக
கணடங கிருநதனர காரணத துளளது
பணடை மறைகள பரநதெஙகுந தெடுமா
மினறென மனததுளளெ யிலலடைந தாளுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கொண்டு அங்கு இருந்தனர் கூத்தன் ஒளியினை
கண்டு அங்கு இருந்தனர் காரணத்து உள் அது
பண்டை மறைகள் பரந்து எங்கும் தேடும் ஆம்
இன்று என் மனத்து உள்ளே இல் அடைந்து ஆளுமே.

பதப்பொருள்:

கொண்டு (உலக செயல்களை புரிந்து கொண்டு) அங்கு (பலவிதமான இடங்களில்) இருந்தனர் (இறைவியோடு சேர்ந்தே இருக்கின்ற முப்பத்து இரண்டு சக்திகளும்) கூத்தன் (ஆனந்தக் கூத்து ஆடுகின்ற இறைவனின்) ஒளியினை (பேரொளி வடிவத்தையே)
கண்டு (தரிசித்துக் கொண்டு) அங்கு (அந்தந்த இடங்களில்) இருந்தனர் (இருந்து) காரணத்து (உலக நன்மைக்கான காரணத்திற்காக) உள் (இறைவிக்கு உள்ளே இருந்து) அது (அவற்றை செயல் பட வைக்கின்றனர்)
பண்டை (ஆதிகாலத்திலேயே அனைத்து உயிர்களும் இறைவனை அறிந்து கொண்டு அவனைத் தேடி அடைய வேண்டும் என்ற காரணத்தினால்) மறைகள் (அருளப்பட்ட வேதங்களை) பரந்து (அண்ட சராசரங்கள் முழுவதும் பரவும் படி எடுத்துச் சென்று) எங்கும் (அங்கெல்லாம் இருக்கின்ற உயிர்களில்) தேடும் (இறைவனைத் தேடுகின்ற உயிர்களுக்கு) ஆம் (உதவியும் புரிகின்றனர்)
இன்று (இவர்களுக்கு எல்லாம் தலைவியாக இருக்கின்ற இறைவியே இப்போது) என் (இறை நிலையை அடைந்துவிட்ட சாதகரின்) மனத்து (மனதிற்கு) உள்ளே (உள்ளே இருந்து) இல் (அவரது உள்ளத்தையே தனக்கு மிகவும் விருப்பமான கோயிலாகக் கொண்டு) அடைந்து (அவருக்குள் வீற்றிருந்து) ஆளுமே (சாதகரை ஆளுவதின் மூலம் அனைத்தையும் இயக்குகின்றாள்).

விளக்கம்:

பாடல் #1415 இல் உள்ளபடி உலக செயல்களை புரிந்து கொண்டு பலவிதமான இடங்களில் இறைவியோடு சேர்ந்தே இருக்கின்ற முப்பத்து இரண்டு சக்திகளும் ஆனந்தக் கூத்து ஆடுகின்ற இறைவனின் பேரொளி வடிவத்தையே தரிசித்துக் கொண்டு அந்தந்த இடங்களில் இருந்து உலக நன்மைக்கான காரணத்திற்காக இறைவிக்கு உள்ளே இருந்து அவற்றை செயல் பட வைக்கின்றனர். ஆதிகாலத்திலேயே அனைத்து உயிர்களும் இறைவனை அறிந்து கொண்டு அவனைத் தேடி அடைய வேண்டும் என்ற காரணத்தினால் அருளப்பட்ட வேதங்களை அண்ட சராசரங்கள் முழுவதும் பரவும் படி எடுத்துச் சென்று அங்கெல்லாம் இருக்கின்ற உயிர்களில் இறைவனைத் தேடுகின்ற உயிர்களுக்கு இவர்கள் உதவி புரிகின்றனர். இவர்களுக்கு எல்லாம் தலைவியாக இருக்கின்ற இறைவியே இப்போது இறை நிலையை அடைந்துவிட்ட சாதகரின் மனதிற்கு உள்ளே இருந்து அவரது உள்ளத்தையே தனக்கு மிகவும் விருப்பமான கோயிலாகக் கொண்டு அவருக்குள் வீற்றிருந்து சாதகரை ஆளுவதின் மூலம் அனைத்தையும் இயக்குகின்றாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.