பாடல் #1415

பாடல் #1415: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

குவிந்தன சத்திகள் முப்பத் திருவர்
நடந்தனர் கன்னிகள் நாலெண்மர் சூழப்
பரந்தித ழாகிய பங்கயத் துள்ளே
யிருந்தனர் காணு மிடம்பல கொண்டே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

குவிநதன சததிகள முபபத திருவர
நடநதனர கனனிகள நாலெணமர சூழப
பரநதித ழாகிய பஙகயத துளளெ
யிருநதனர காணு மிடமபல கொணடெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

குவிந்தனர் சத்திகள் முப்பத்து இருவர்
நடந்தனர் கன்னிகள் நால் எண்மர் சூழ
பரந்து இதழ் ஆகிய பங்கயத்து உள்ளே
இருந்தனர் காணும் இடம் பல கொண்டே.

பதப்பொருள்:

குவிந்தனர் (இறைவியைச் சுற்றி ஒன்றாக கூடி இருக்கின்ற) சத்திகள் (சக்திகள்) முப்பத்து (முப்பதும்) இருவர் (இரண்டும் கூட்டி மொத்தம் முப்பத்து இரண்டு பேர் இருக்கின்றார்கள்)
நடந்தனர் (இவர்கள் அனைவரும் இறைவியோடு சேர்ந்தே இயங்குகின்ற) கன்னிகள் (என்றும் இளமையுடன் இருக்கின்ற கன்னிகள்) நால் (நான்கு திசைகளுக்கும்) எண்மர் (எட்டு எட்டு பேராக மொத்தம் முப்பத்து இரண்டு பேர்களும்) சூழ (இறைவியைச் சுற்றி இருந்து)
பரந்து (அண்ட சராசரங்கள் முழுவதும் பரந்து விரிந்து) இதழ் (இதழ்களாக) ஆகிய (இருக்கின்ற இறைவியின் செயல்களாகவும்) பங்கயத்து (தாமரை மலரான இறைவியோடு அதற்கு) உள்ளே (உள்ளேயும்)
இருந்தனர் (இவர்கள் அனைவரும் இறைவியோடு சேர்ந்தே இருப்பதை) காணும் (சாதகர் தமக்குள் தரிசிக்க முடியும்) இடம் (அவர்கள் அண்ட சராசரங்களில் இருக்கின்ற இடமாக) பல (பலவித இடங்களிலும்) கொண்டே (இருந்து கொண்டு புரிகின்ற அனைத்து செயல்களையும்).

விளக்கம்:

பாடல் #1414 இல் உள்ளபடி இறைவியைச் சுற்றி ஒன்றாக கூடி இருக்கின்ற சக்திகள் மொத்தம் முப்பத்து இரண்டு பேர் இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் இறைவியோடு சேர்ந்தே இயங்குகின்ற என்றும் இளமையுடன் இருக்கின்ற கன்னிகளாக நான்கு திசைகளுக்கும் எட்டு எட்டு பேராக மொத்தம் முப்பத்து இரண்டு பேர்களாக இறைவியைச் சுற்றி இருக்கிறார்கள். தாமரை மலரான இறைவியின் செயல்களான இதழ்களில் இந்த முப்பத்து இரண்டு சக்திகளும் ஒன்றாக சேர்ந்து அண்ட சராசரங்கள் முழுவதும் பரந்து விரிந்து புரிகின்ற அனைத்து செயல்களையும் சாதகர் தாம் அமர்ந்த இடத்திலிருந்தே தமக்குள் தரிசிக்க முடியும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.