பாடல் #1362

பாடல் #1362: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

அண்டத்தி னுள்ளே யளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினுங்
கண்டத்தி னின்ற கலப்பறி யார்களே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அணடததி னுளளெ யளபபரி தானவள
பிணடததி னுளளெ பெருவெளி கணடவள
குணடததி னுளளெ குணமபல காணினுங
கணடததி னினற கலபபறி யாரகளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அண்டத்தின் உள்ளே அளப்பு அரிது ஆனவள்
பிண்டத்தின் உள்ளே பெரும் வெளி கண்டவள்
குண்டத்தின் உள்ளே குணம் பல காணினும்
கண்டத்தில் நின்ற கலப்பு அறியார்களே.

பதப்பொருள்:

அண்டத்தின் (அண்ட சராசரத்தின்) உள்ளே (உள்ளே இருக்கின்ற இறைவி) அளப்பு (அளவிட்டு சொல்ல முடியாத படி) அரிது (மிகவும் அரியதாக அளவில்லாமல்) ஆனவள் (இருக்கின்றாள்)
பிண்டத்தின் (உடலுக்கு) உள்ளே (உள்ளே இருக்கின்ற) பெரும் (மிகப் பெரும்) வெளி (ஆகாயமாகிய மனதையும்) கண்டவள் (அவளே கண்டு கொண்டு இருக்கின்றாள்)
குண்டத்தின் (நவ குண்டமாகிய உடலுக்கு) உள்ளே (உள்ளே இருக்கின்ற) குணம் (இயங்குகின்ற விதங்களை) பல (பலவாறாகப்) காணினும் (பார்த்து உணர்ந்து கொண்டாலும்)
கண்டத்தில் (அந்த உடலுக்குள்) நின்ற (வீற்றிருக்கின்ற) கலப்பு (இறைவி உடலோடு கலந்து இருக்கின்ற தன்மையை) அறியார்களே (யாரும் அறிந்து கொள்வதில்லை).

விளக்கம்:

பாடல் #1360 இல் உள்ளபடி அண்ட சராசரத்திலுள்ள அனைத்துமாகவும் இருக்கின்ற இறைவியே அண்ட சராசரத்தின் உள்ளே அளவிட்டு சொல்ல முடியாத பட மிகவும் அரியதாக அளவில்லாமல் இருக்கின்றாள். உடலுக்கு உள்ளே இருக்கின்ற மிகப் பெரும் ஆகாயமாகிய மனதையும் இறைவி கண்டு கொண்டு இருக்கின்றாள். நவ குண்டமாகிய உடலுக்கு உள்ளே இருந்து உடலை இயக்குகின்ற பல விதமான இயக்கங்களை பார்த்து உணர்ந்து கொண்டாலும் அந்த உடலுக்குள் வீற்றிருக்கின்ற இறைவி உடலோடு கலந்து இருக்கின்ற தன்மையை யாரும் அறிந்து கொள்வதில்லை.

குறிப்பு:

நவாக்கிரி சக்கரத்தில் உள்ள பேரொளியாக இருக்கின்ற இறைவியானவள் உடலுக்குள் இருக்கும் மனதையும் உடலின் இயக்கத்தையும் உடலோடு கலந்து நின்று கண்டு கொண்டு இருக்கிறாள் என்பதை யாரும் அறிந்து கொள்வதில்லை.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.