பாடல் #1396

பாடல் #1396: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

விண்ணமர் நாபி யிரதயமாங் கிடைக்
கண்ணமர் கூபங் கலந்து வருதலாற்
பண்ணமர்ந் தாதித்த மண்டல மானது
தண்ணமர் கூபந் தழைத்தது காணுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

விணணவர நாபி யிரதயமாங கிடைக
கணணமர கூபங கலநது வருதலாற
பணணமரந தாதிதத மணடல மானது
தணணமர கூபந தழைததது காணுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

விண் அமர் நாபி இருதயம் ஆங்கு இடை
கண் அமர் கூபம் கலந்து வருதலால்
பண் அமர்ந்து ஆதித்த மண்டலம் ஆனது
தண் அமர் கூபம் தழைத்த அது காணுமே.

பதப்பொருள்:

விண் (ஆகாயத்தில்) அமர் (பரந்து விரிந்து இருக்கும் ஜோதியானது) நாபி (சாதகரின் உடலுக்குள் இருக்கின்ற தொப்புள் குழி) இருதயம் (இதயம்) ஆங்கு (ஆகிய இரண்டுக்கும்) இடை (இடைப்பட்ட இடத்தில் இருக்கின்ற)
கண் (சூட்சுமத் துளையில்) அமர் (அமர்ந்து இருக்கின்ற) கூபம் (கிணறோடு) கலந்து (கலந்து) வருதலால் (ஒன்றாகி வரும்போது)
பண் (சாதகர் ஜெபித்துக் கொண்டு இருக்கும் பீஜ மந்திரங்களில்) அமர்ந்து (வீற்றிருந்து) ஆதித்த (அந்த இடமே சூரிய) மண்டலம் (மண்டலமாக) ஆனது (ஆகிவிடும்)
தண் (அதன் பிறகு ஜோதியின் அருள்) அமர் (நிரம்புகின்ற) கூபம் (அந்த சூட்சுமத் துளையான கிணற்றில்) தழைத்த (அருள் முழுவதும் செழுமை பெற்று) அது (இருப்பதை) காணுமே (காணலாம்).

விளக்கம்:

பாடல் #1395 இல் உள்ளபடி ஆகாயத்தில் பரந்து விரிந்து இருக்கும் ஜோதியானது சாதகரின் உடலுக்குள் இருக்கின்ற தொப்புள் குழிக்கும் இதயத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் இருக்கின்ற சூட்சுமத் துளையில் அமர்ந்து இருக்கின்ற கிணறோடு கலந்து ஒன்றாகி வரும்போது பாடல் #1395 இல் உள்ளபடி சாதகர் ஜெபித்துக் கொண்டு இருக்கும் பீஜ மந்திரங்களில் வீற்றிருந்து அந்த இடமே சூரிய மண்டலமாக ஆகிவிடும். அதன் பிறகு ஜோதியின் அருள் நிரம்புகின்ற அந்த சூட்சுமத் துளையான கிணற்றில் அருள் முழுவதும் செழுமை பெற்று இருப்பதை காணலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.