பாடல் #1340: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
வணங்கிடுந் தத்துவ நாயகி தன்னை
நலங்கிடு நல்லுயி ரானவை யெல்லாங்
கலந்திடுங் காம வெகுளி மயக்கந்
துலங்கிடுஞ் சொல்லிய சூழ்வினை தானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
வணஙகிடுந தததுவ நாயகி தனனை
நலஙகிடு நல்லுயி ரானவை யெலலாங
கலநதிடுங காம வெகுளி மயககந
துலங்கிடுஞ சொலலிய சூழவினை தானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
வணங்கிடும் தத்துவ நாயகி தன்னை
நலங்கிடும் நல் உயிர் ஆனவை எல்லாம்
கலந்திடும் காம வெகுளி மயக்கம்
துலங்கிடும் சொல்லிய சூழ் வினை தானே.
பதப்பொருள்:
வணங்கிடும் (உயிர்கள் வணங்கிடும்) தத்துவ (நவாக்கிரி சக்கரத்தி்ல் இருக்கும் சக்தியின் இயக்கத் தத்துவங்களுக்கு) நாயகி (தலைவியாகவே) தன்னை (தாமும் ஆகிவிட்ட சாதகர்களுக்கு)
நலங்கிடும் (வாசனை முதலிய திரவியங்களை பூசி பூஜிக்கும்) நல் (நல்ல) உயிர் (உயிர்களாக) ஆனவை (பக்குவப்பட்ட) எல்லாம் (அனைத்து உயிர்களும்)
கலந்திடும் (தங்களோடு கலந்து இருக்கும்) காம (ஆசை) வெகுளி (கோபம்) மயக்கம் (மாயையினால் இருக்கும் மயக்கம்)
துலங்கிடும் (ஆகிய குற்றங்களும் நீங்கி விடும்) சொல்லிய (உயிர்களின் பிறவிக்கு காரணம் என்று வேதங்கள் சொல்லுகின்ற) சூழ் (உயிர்களைச் சூழ்ந்து இருக்கின்ற) வினை (வினைகளும்) தானே (நீங்கி விடும்).
விளக்கம்:
பாடல் #1339 இல் உள்ளபடி உயிர்களால் வணங்கப்படும் நிலைக்கு வந்து நவாக்கிரி சக்கரத்தி்ல் இருக்கும் சக்தியின் இயக்கத் தத்துவங்களுக்கு தலைவியாகவே தாமும் ஆகிவிட்ட சாதகர்களின் மேல் கொண்ட பக்தியினாலும் அன்பினாலும் வாசனை முதலிய திரவியங்களை பூசி பூஜிக்கும் நல்ல உயிர்களாக பக்குவப்பட்ட அனைத்து உயிர்களோடும் கலந்து இருக்கும் ஆசை, கோபம், மாயையினால் இருக்கும் மயக்கம் ஆகிய குற்றங்கள் அனைத்தும் நீங்கி விடும். அதன் பிறகு உயிர்களின் பிறவிக்கு காரணம் என்று வேதங்கள் சொல்லுகின்ற உயிர்களைச் சூழ்ந்து இருக்கின்ற வினைகளும் உயிர்களை விட்டு நீங்கி விடும்.
