பாடல் #1319: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
நவாக்கிரி சக்கரம் நானுரை செய்யில்
நவாக்கிரி யொன்று நவாக்கிரி யாக
நவாக்கிரி யெண்பத் தொருவகை யாக
நவாக்கிரி யாகக்கிலீஞ் சௌம் முதலீறே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
நவாககிரி சககரம நானுரை செயயில
நவாககிரி யொன்று நவாககிரி யாக
நவாககிரி யெணபத தொருவகை யாக
நவாககிரி யாகககிலீஞ சௌம முதலீறெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
நவ அக்கிரி சக்கரம் நான் உரை செய்யில்
நவ அக்கிரி ஒன்று நவ அக்கிரி ஆக
நவ அக்கிரி எண்பத்து ஒரு வகை ஆக
நவ அக்கிரி ஆக கிலீம் சௌம் முதல் ஈறே.
பதப்பொருள்:
நவ (ஒன்பது) அக்கிரி (சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட) சக்கரம் (சக்கரத்தைப் பற்றி) நான் (யான்) உரை (எடுத்துக் கூற) செய்யில் (ஆரம்பித்தால்)
நவ (ஒன்பது) அக்கிரி (சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட) ஒன்று (ஒரே சக்தியாக இருக்கின்ற இறைவியின் திருமேனியாகிய அட்சரமே) நவ (ஒன்பது) அக்கிரி (அட்சரங்கள்) ஆக (ஆக இருக்கின்றது)
நவ (ஒன்பது) அக்கிரி (சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட) எண்பத்து (ஒன்பதும் ஒன்பதும் பெருக்கினால் வரும் மொத்தம் எண்பதும்) ஒரு (ஒன்றும் சேர்ந்து மொத்தம் எண்பத்தோரு) வகை (வகையான அட்சரங்களாக) ஆக (விரிவடைந்து இருக்கின்றது)
நவ (ஒன்பது) அக்கிரி (சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட) ஆக (சக்கரமாக வடிவமைப்பு) கிலீம் (க்லீம் அட்சரமும்) சௌம் (ஸெளம் அட்சரமும்) முதல் (முதலும்) ஈறே (கடைசியுமாக உள்ளது).
விளக்கம்:
ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட நவாக்கிரி சக்கரத்தைப் பற்றி யான் உங்களுக்கு எடுத்துக் கூறினால் அது ஒரே சக்தியாக இருக்கின்ற இறைவியின் திருமேனியாக விளங்கும் அட்சரமே ஒன்பது அட்சரங்களாக மாறி இருக்கின்ற சக்கரமாகும். இந்த சக்கரத்தில் இருக்கின்ற ஒன்பது அட்சரங்களையும் ஒன்பது அறைகளில் மாறி மாறி எழுதினால் மொத்தம் எண்பத்தொன்று அறைகளைக் கொண்டு விரிவடைந்து இருக்கும். ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற இந்த ஒன்பது அட்சரங்களும் நேராகப் பார்க்கும் போது ‘ஸெளம்’ எனும் அட்சரத்தில் ஆரம்பித்து ‘க்லீம்’ எனும் அட்சரத்தில் முடிவதாக இருக்கின்றது. அதனை தலை கீழாகப் பார்க்கும் போது ‘க்லீம்’ எனும் அட்சரத்தில் ஆரம்பித்து ‘ஸெளம்’ எனும் அட்சரத்தில் முடிவதாகவும் இருக்கின்றது.
குறிப்பு: அக்கிரி என்ற சொல்லுக்கான விளக்கம்
அக்ஷரி – சமஸ்கிருதம் – சக்தியின் திருமேனியாக எழுத்து இருக்கும் வடிவம்
அட்சரி – தற்காலத் தமிழ்
அக்கிரி – திருமந்திரத் தமிழ்