பாடல் #1412

பாடல் #1412: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

ஆமே யதோமுக மேலே யமுதமாய்த்
தானே யுகாரந் தழைத்தெழுஞ் சோமனுங்
காமேல் வருகின்ற கற்பக மானது
பூமேல் வருகின்ற பொற்கொடி யானதே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆமெ யதொமுக மெலெ யமுதமாயத
தானெ யுகாரந தழைததெழுஞ சொமனுங
காமெல வருகினற கறபக மானது
பூமெல வருகினற பொறகொடி யானதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆமே அதோ முகம் மேலே அமுதம் ஆய்
தானே உகாரம் தழைத்து எழும் சோமனும்
கா மேல் வருகின்ற கற்பகம் ஆனது
பூ மேல் வருகின்ற பொற் கொடி ஆனதே.

பதப்பொருள்:

ஆமே (எடுத்துச் சொல்ல முடிந்த சாதகர்) அதோ (இறைவனின் கீழ் நோக்கி இருக்கும் ஆறாவது முகமான அதோ) முகம் (முகம் போல் உலகத்தை தாங்கிக் கொண்டு இருப்பவராகவும்) மேலே (அதற்கு மேலே இருக்கின்ற) அமுதம் (அமிழ்தம்) ஆய் (ஆகவும்)
தானே (தாமே) உகாரம் (அனைத்தையும் காக்கின்ற ஓங்காரத்தின் உகாரத் தத்துவமாகவும்) தழைத்து (சிறப்பாக) எழும் (எழுந்து வந்து) சோமனும் (உயிர்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும் அமைதியைக் கொடுக்கும் சந்திரனாகவும்)
கா (தமது உடலுக்கு) மேல் (மேலே) வருகின்ற (வந்து கேட்டது அனைத்தும் கொடுத்து அருளும்) கற்பகம் (கற்பகத் தரு) ஆனது (ஆகவும்)
பூ (பூமியின்) மேல் (மேல்) வருகின்ற (வருகின்ற அனைத்து உலகங்களையும் இணைக்கின்ற) பொற் (தங்கம் போல் பிரகாசிக்கின்ற) கொடி (கொடியாகவும்) ஆனதே (ஆகி இருக்கின்றார்).

விளக்கம்:

பாடல் #1411 இல் உள்ளபடி உலகத்திலுள்ள அனைத்தையும் தமக்குள்ளேயே நின்று இருக்க அவற்றை எடுத்துச் சொல்ல முடிந்த சாதகர் இறைவனின் கீழ் நோக்கி இருக்கும் ஆறாவது முகமான அதோ முகம் போல் உலகத்தை தாங்கிக் கொண்டு இருப்பவராகவும், அதற்கு மேலே இருக்கின்ற அமிழ்தமாகவும், அனைத்தையும் காக்கின்ற ஓங்காரத்தின் உகாரத் தத்துவமாகவும், சிறப்பாக எழுந்து வந்து உயிர்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும் அமைதியைக் கொடுக்கும் சந்திரனாகவும், தமது உடலுக்கு மேலே வந்து கேட்டது அனைத்தும் கொடுத்து அருளும் கற்பகத் தருவாகவும், பூமியின் மேல் வருகின்ற அனைத்து உலகங்களையும் இணைக்கின்ற தங்கம் போல் பிரகாசிக்கின்ற கொடியாகவும் இருக்கின்றார்.

4 thoughts on “பாடல் #1412

  1. RAJANBABU KRISHNAMOORTHY Reply

    Very good. Post every 1000 songs in pdf format. This shall be useful to download and study. K. Rajanbabu

  2. சித்ரா Reply

    ஓம் நமசிவாய.
    திருமந்திரம் தினம் ஒரு பாடல் வரிசையில் … பாடல் 1412 ஏப்ரல் 28 ம் தேதிக்கு பிறகு கிடைக்க (receive ஆக)வில்லை.
    தயவுசெய்து தொடர்ந்து அனுப்ப வேண்டுகிறேன்.
    தங்களது இந்த புனித சேவைக்கு மிகவும் நன்றி.
    வணக்கம்.

    • Saravanan Thirumoolar Post authorReply

      வணக்கம் சூழ்நிலை காரணமாக சில தினங்களாக எழுத இயலவில்லை. அடுத்த வாரத்தில் இருந்து தினமும் ஒரு திருமந்திரம் பாடல் தொடர்ந்து பதிவேற்றப்படும்.நன்றி

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.