பாடல் #1407: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
என்றங் கிருந்த வமுதக் கலையிடைச்
சென்றங் கிருந்த வமுதப் பயோதரி
கண்ட கரமிரு வெள்ளிபொன் மண்டையாய்க்
கொண்டங் கிருந்தது வண்ண வமுதமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
எனறங கிருநத வமுதக கலையிடைச
செனறங கிருநத வமுதப பயொதரி
கணட கரமிரு வெளளிபொன மணடையாயக
கொணடங கிருநதது வணண வமுதமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
என்று அங்கு இருந்த அமுத கலை இடை
சென்று அங்கு இருந்த அமுத பயோதரி
கண்ட கரம் இரு வெள்ளி பொன் மண்டை ஆய்
கொண்டு அங்கு இருந்தது வண்ண அமுதமே.
பதப்பொருள்:
என்று (ஆன்மாவிற்கு ஜோதி தரிசனம் காட்ட என்று) அங்கு (உயிர்களுக்குள்) இருந்த (இருந்த சாதகரின் ஜோதியானது) அமுத (அமிழ்தம்) கலை (செயல் பட்டுக் கொண்டு இருக்கும்) இடை (மூலாதாரத்திற்கும் தலை உச்சிக்கும் இடைப் பட்ட பகுதிக்கு)
சென்று (உள்ளே சென்று) அங்கு (அங்கே) இருந்த (வீற்றிருக்கின்ற) அமுத (அமிழ்தத்தினால்) பயோதரி (உயிர்களின் மாயையை நீக்கி அருளுகின்ற இறைவியை)
கண்ட (தரிசித்து) கரம் (அங்கு கரங்களாக இருக்கின்ற) இரு (இரண்டு நாடிகளின் [இடகலை, பிங்கலை] மூலமாக மூச்சுக்காற்றை எடுத்துச் சென்று) வெள்ளி (வெள்ளி போன்ற நிறத்தில் மூலாதாரத்துக்கு அருகில் இருக்கும் சுக்கிலத்தோடு உராய்ந்து) பொன் (அதை தங்கம் போன்ற நிறத்தில் இருக்கும் ஜோதியாக மாற்றி) மண்டை (அந்த ஜோதியை தலை உச்சியில் இருக்கும் சகஸ்ரதளத்திற்கு எடுத்துச் சென்று) ஆய் (ஜோதி வடிவம்)
கொண்டு (கொண்டு) அங்கு (அங்கே) இருந்தது (இருக்கின்ற இறைவியோடு கலக்கும் பொழுது அவள்) வண்ண (தனது திருமேனி) அமுதமே (அமிழ்தமாக மாறி அருளுகின்றாள்).
விளக்கம்:
பாடல் #1406 இல் உள்ளபடி தம்மை இறைவனாகவே வணங்குகின்ற உயிர்களின் ஆன்மாவிற்கு ஜோதி தரிசனம் காட்ட என்று அவர்களுக்குள் இருந்த சாதகரின் ஜோதியானது அமிழ்தம் செயல் பட்டுக் கொண்டு இருக்கும் மூலாதாரத்திற்கும் தலை உச்சிக்கும் இடைப் பட்ட பகுதிக்கு உள்ளே சென்று அங்கே வீற்றிருக்கின்ற அமிழ்தத்தினால் உயிர்களின் மாயையை நீக்கி அருளுகின்ற இறைவியை தரிசித்து அங்கு கரங்களாக செயல்பட்டுக் கொண்டு இருக்கின்ற இரண்டு நாடிகளின் [இடகலை, பிங்கலை] மூலமாக மூச்சுக்காற்றை எடுத்துச் சென்று வெள்ளி போன்ற நிறத்தில் மூலாதாரத்துக்கு அருகில் இருக்கும் சுக்கிலத்தோடு உராய்ந்து அதை தங்கம் போன்ற நிறத்தில் இருக்கும் ஜோதியாக மாற்றிகின்றது. அதன் பிறகு அந்த ஜோதியை தலை உச்சியில் இருக்கும் சகஸ்ரதளத்திற்கு எடுத்துச் சென்று ஜோதி வடிவம் கொண்டு அங்கே வீற்றிருக்கின்ற இறைவியோடு கலக்கும் பொழுது அவள் தனது திருமேனி அமிழ்தமாக மாறி அருளுகின்றாள்.